Sunday, September 2, 2018

வடக்கே போகும் மெயில் நூல் நயப்பு


சூரன் .ரவிவர்மாவின் 16 சிறுகதைகளை உள்ளடக்கியதாக இந்த சிறுகதைத் தொகுதி அமைந்திருக்கிறது. இலங்கை ரயில் சேவைகளில் வடக்கே பயணிக்கும் யாழ்தேவி ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் சேவையாக இருந்து வந்தது. போர் தீவிரமடைந்து இரு தசாப்தங்களாக இந்த சேவை முடங்கிப் போயிருந்த போதிலும் கூட யாழ் தேவியை மக்கள் மறக்கவில்லை. “வடக்கே போகும் மெயில்என்ற தலைப்பு ஐந்து வருடங்களுக்கு முன் இந்த நூல் வெளிவந்த போதும் என்னை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.
ஈழத்தில் ஒரு சமூக விடுதலைப் போராளியாக வாழ்ந்து காட்டி இன்றைய தலைமுறைக்கும் தனது விளைச்சலை விட்டுச் சென்ற சூரன் அவர்களின் பேரன் ரவிவர்மா அவர்கள். அடிப்படையில் ஊடகவியலாளராக இருந்த போதும் ஈழத்தில் வெளி வந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதிய சிறுகதைகளே இத்தொகுதியில் திரட்டப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளர் கற்பனாவாதியாக, எழுத்தாளனாக
ஒருங்கே கைவரப் பெற்றவர்கள் என்றால் மூத்த எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களையும், இராணுவத்தின் ஷெல் தன் குடும்பத்தையே
தின்ற எழுத்தாளர் சக பத்திரிகையாளர் நெல்லை .பேரனையும், ரவிவர்மாவின் உறவினர் மற்றும் ஊடகவியலாளராகவும் பத்திரிகையாளராகவும் இயங்கிய அமரர் ராஜஶ்ரீகாந்தன் ஆகியோரையும் தான்
நினைவில் கொண்டு வர முடிகிறது. இவர்களோடு ரவிவர்மாவின் சிறுகதைகளை இப்போது தான் வாசிக்கக் கிட்டியது.
வடக்கே போகும் மெயில்என்ற சிறுகதை இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளில் ஒன்று. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் அந்த ரயில் பயண நினைவுகள் தான் எவ்வளவு இனிமை அதே நேரம் அதன் இன்னொரு பக்கம் அவலமானது. சிங்களக் காடையரால் ரயிலில் பயணித்த அப்பாவிப் பயணிகள் கொல்லப்பட்ட வரலாறுகளும், இனத்துவேஷங்கள் சங்கமித்த களமாகவும் இந்தப் பயணம் இனப் பிரச்சனையைத் தண்டவாளத்தில் ஓட்டிக் காட்டும் ஒரு குறு நாடக மேடை. ரவி வர்மா எழுதிய சிறுகதையும் இவ்வாறானதொரு போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. அத்தோடு ஏனைய சிறுகதைகளின் அடி நாதத்தில் இந்த இனப் பிரச்சனையே மையம் கொண்டிருக்கிறது. ஆகவே தலைப்புகளும் களங்களும் வெவ்வேறாயினும் எல்லாச் சிறுகதைகளுமே வாசகனைவடக்கே செல்லும் மெயில்இருத்தியே பயணிக்கின்றன.
ஈழத்து எழுத்தாளர்களில் ஒரு வகையினர் பிரதேச வழக்குகளைத் தீவிரமாகக் கையாண்டு எழுதுகையில் இன்னொரு சாரார் பொதுத் தமிழில் எழுதத் தலைப்படுவர். வெகுஜனப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவ்வாறான பொதுத் தமிழைக் கையாளும் சிறுகதைகளே அதிகம். இதன் வழியாகப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சொல்ல வந்த சேதி போய்ச் சேரும் சிறப்புண்டு. ரவிவர்மா தன் மொழியாடலில் உரையாடல் பகுதிகளில் ஈழத்துப் பேச்சுத் தமிழையும் கதையோட்டத்துக்குப் பொதுத் தமிழையும் கையாண்டிருக்கிறார்.
சைக்கிள் களவு போன கதையை வேடிக்கையாகபோனால் போகட்டும்சிறுகதை வழியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். யாழ்ப்பாண வாழ்வியலில் சைக்கிள் ஒரு பிரதான ஊர்தி அதே சமயம் சைக்கிள் களவில் இருந்து தப்பியவரும் அரிது. “பொன்னுக்கிழவிகதை படித்த போது ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதை ஒன்றைப் படித்த அனுபவம். ஈழநாடு வார இதழ் போன்று ஈழத்துப் பத்திரிகை உலகில் தினக்குரலின் பாய்ச்சல் வேகமானது. இவ்விரண்டு பத்திரிகைகளிலும் தன் கதைகளை எழுதியிருக்கிறார். அத்தோடு ஈழத்தின் மூத்த சஞ்சிகைமல்லிகைஇலும் இவர் பங்களிப்பு வந்திருக்கிறது. அது போல் இன்றும் தசாப்தம் கடந்து வெளிவரும்ஞானம்சஞ்சிகையிலும் எழுதிய சிறுகதையும் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
வானொலியில் பாட்டுக் கேட்கும் போது நம்மையறியாமலேயே நம் குடும்ப விபரங்களைப் பகிர்வதன் ஆபத்தைஎன்னைத் தெரியுமா?” சிறுகதை வழியாகக் காட்டியிருக்கிறார்.
செல்லாக்காசுநாயகன் கணேச மூர்த்தியின் கதை ஏதோ நிஜத்தில் கண்டு கேட்டது போல இருந்தது.
திக்குத் தெரியாதசிறுகதை எந்தத் திசையில் செல்லப் போகிறது என்ற ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத அதன் முடிவு முறுவலை எழுப்பியது.
உருவகக் கதை பாணியில்குலதெய்வம்என்ற சிறுகதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த உத்தியில் எழுபதுகளில் செங்கை ஆழியான் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் நம் ஈழத்து எழுத்தாளர்கள் அதிகம் தொடாதது.
புலம்பெயர் வாழ்வியலைத் தொட்டு எழுதியதிரைகடல் ஓடியும்கதை இன்றைய யதார்த்த உலகில் சுய நலம் தோய்ந்த உறவுகளைக் காட்டும் ஒரு கண்ணாடி.
இடப் பெயர்வின் அவலத்தை முதன் முதலில் சந்தித்தவர்கள் வடமராட்சி மக்கள். அவர்களின் கதைகளின் வழியே உண்மையின் சாட்சியங்கள் தான் கிட்டும். அப்படியொரு உணர்வை எழுப்பியதுஎன்று மறையும்என்ற சிறுகதை. இந்தச் சிறுகதையும், தொகுதியின் நிறைவில் உள்ளவிடியலைத் தேடிசிறுகதையும் மிகவும் ஆழமான பார்வையோடு எழுதப்ப்பட்டிருப்பவை. இவை இரண்டுமே ரவிவர்மா என்ற எழுத்தாளர் இன்னும் பல ஈழத்துப் போரியல் வாழ்வைக் களமாகக் கொண்ட சிறுகதைகளைக் கொடுக்க வல்லவர் என்ற நம்பிக்கையை அதிகம் விளைவிப்பவை.
ஒரு நல்ல சிறுகதையொன்றைப் படித்து முடித்ததும் அந்தக் கதைக்களமும், கதை மாந்தர்களும் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விடும் உணர்வைப் பிரதிபலித்தால் அதன் வெற்றியென்று கொள்ளப்படும்.
அந்த வகையில் ஈழத்தவரின் வாழ்வியல் பண்பாடுகள், அனுபவங்களை அந்தந்தக் காலகட்டத்தினூடே எடுத்துச் சென்று கதைகளின் வழி நிகழ்த்திக் காட்டியதன் வழியாக சூரன் .ரவிவர்மா நல்ல சிறுகதை ஆசிரியராக அடையாளப்படுத்தப்படுகிறார்.

கானா பிரபா

27.08.2018

No comments: