Saturday, September 29, 2018

கருணாஸை அச்சுறுத்தும் தமிழக அரசு



ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையில் தமைழக சட்டசபை உறுப்பினரானவர் கருணாஸ்.நகைச்சுவை நடிகராகத் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்ட கருணாஸை அரசியல்வாதியாக  உருவாக்கியவர்  ஜெயலலிதா. ஜெயலலிதா செய்த அரசியல் தவறுகலில் இதுவும் ஒன்று. மக்களின் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் செல்வாக்கில்லாத கருணாஸை இரட்டை இலைச்சின்னம் சட்டசபை உறுப்பினராக்கியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினரான கருணாஸை தமிழக அரசு கைது செய்துள்ளது.

 முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை தியாகநகர்  பொலிஸ் கமிஷ்ச்னர் தியாகராஜன் ஆகியோரை விமர்சித்ததால்  கருணாஸ் கைது செய்யப்பட்டார்.  கருணாஸைக் கைது செய்த பொலிஸார், கருணாஸுக்கு எதிரான  பழைய    பழைய புகார்களைத் தூசு தட்டத் தொடங்கியது.   கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ஐபிஎல் போட்டிக்கு எதிராகத் தடையை மீறி கருணாஸ், ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது  கருணாஸைக் கைதுசெய்த பொலிஸார்  பின்னர் விடுதலை செய்தனர். இப்போது அதற்காகவும் அவரைக் கைது செய்த பொலிஸார் மொத்தமாக எட்டுப் பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.  
 
ஜெயலலிதா மரணமானதும்,  சசிகலாவின் தலைமையிலும் ஓ.பன்னீர்ச்செல்வம்       தலமையிலும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டானது. அந்த நேரத்தில் கருணாஸ், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.  சகிகலா சிறைக்குச் சென்றபின்னர் அவரால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமையை ஆதரித்த கருணாஸ், சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழக அரசை எதிர்த்துக் குரல்கொடுத்தார். கூவத்தூர் கூத்து எல்லாம் எனக்குத் தெரியும் எனவும் மிரட்டினார். சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்தித்த பின்னர் கருணாஸ் கைது செய்யப்பட்டதால் அது அரசியல் நோக்கம் கொண்டதாகக் கருதப்படுகிறது. பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் கருணாஸ் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்துக்காகக் கைது செய்யப்படலாம்.

பாரதீஜ ஜனதாக் கட்சியின் செல்லப் பிள்ளைகள் என்பதால் எஸ்.வி.சேகர், எச்.ராஜா ஆகிய இருவரையும் கைது செய்வதற்கு தமிழக அரசு அஞ்சுகிறது. பெண்களை இழிவுபடுத்திய, பொலிஸ் அதிகாரியை அவமானப்படுத்திய, நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய, மதங்களுக்கிடையில் பிரச்சினையை உருவாக்கிய குற்றங்களைப் புரிந்த   எஸ்.வி.சேகர், எச்.ராஜா ஆகிய இருவரையும் கைது செய்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டும் இதுவரை இருவரும்  கைது செய்யப்படவில்லை. பெண் ஊடகவியலாளரையும் பெண்களையும் அவமானப்படுத்தியவர் எஸ்.வி.சேகர். கைதுக்குப் பயந்து தலைமறைவானவர் மீண்டும் வெளியே தலை காட்ட ஆரம்பித்துவிட்டார். முஸ்லிம்களின் பகுதியினூடாக தடையையும் மீறி விநாயகர் ஊர்வலம்   நடத்த முற்பட்ட எச்.ராஜாவை பொலிஸார் தடுத்தனர். அப்போது பொலிஸ் அதிகாரியையும் நீதிமன்றத்தையும் அவமானப்படுத்தினார்.  பாரதீஜ ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளரான எச். ராஜாவை பொலிஸாரால் நெருங்க முடியவில்லை.

பொதுக் கூட்ட மேடையில் எச். ராஜா வீற்றிருக்கையில் அங்கு உரையாற்றிய ஒருவர் “சிங்கம் ராஜா மேடையில் இருக்கிறார். முடியுமானால் கைது  செய்என சவால் விடுத்தார்.தமிழக ஆளுநரை எச். ராஜா சந்தித்தார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மே 18 இயக்க அமைப்பாளர் திருமுருகன் காந்தி  ஐம்பது நாட்களுக்கும் மேலாக வைத்திய வசதி இன்றி வாடுகிறார். தமிழக அரசாங்கத்துக்கு வேண்டப்படாதவர்    என்பதால் திருமுருகன் காந்தியின் மீது கடுமையான குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கும்  மத்திய அரசுக்கும் வேண்டியவர்கள் என்பதால் சேகரும் ராஜாவும் சுதந்திரமாகத் திரிகிறார்கள். தமிழக அரசை எதிர்ப்பதால் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கூவத்தூரில் நடந்ததை வெளிப்படுத்துவேன் என கருணாஸ் மிரட்டுகிறார். மிரட்டல் மிரட்டலாகத்தான் இருக்கும் உண்மையை கருணாஸ் வெளிப்படுத்தமாட்டார்.

No comments: