Tuesday, October 1, 2019

தமிழக கட்சிகளின் செல்வாக்கை நாடிபிடிக்கும் இடைத்தேர்தல்


விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நடைபெறும் இடைதேர்தலுக்கான வேட்பாளர்களை பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன. விக்கிரவாண்டியில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும் வேட்பாளரைக் களம் இறக்கி உள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். விகிரவாண்டி தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான ராதாமணி மரணமானதாலும், நாங்குநேரி தொகுதியின்  காங்கிரஸ் கட்சியின்  உறுப்பினரான வசந்தகுமார் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று இராஜினாமாச் செய்ததாலும் அடுத்த மாதம் 21 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபையின் ஆட்சிக்காலம்  19 மாதங்கள் மட்டுமே இருப்பதனால் பலமான வேட்பாளர்களைப் பிரதான கட்சிகள் அனைத்தும் தவிர்த்துள்ளன. அதிகளவு  பணத்தைச் செலவு செய்வதற்கும்  பின்னடிக்கும் நிலை உள்ளது. ஆனாலும்,  வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் மூன்று கட்சிகளும் உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று இடைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. தனது கூட்டணியின் பிரதான கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியை ஓரம் கட்டிவிட்டு இடைத் தேர்தலைச் சந்திக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிவிட்டது.

 தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிர்ப்பு பலமாக இருப்பதனால் இடைத் தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சியைக் கழற்றிவிட்டுள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இடைத் தேதலில் பிரசாரம் செய்வதற்க்கு ராமதாஸ், விஜயகாந்த்,சரத்குமார் ஆகியோரிடம் உதவி கேட்ட அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதீய ஜனதாக் கட்சியின் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. இடைத் தேர்தல் பிரசாரத்துக்கு தமக்கு அழைப்பு வரவில்லை என முன்னாள் அமைச்சர் பொன்னார் வருத்தப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டியில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மோதுகின்றன. இது ஸ்டாலினுக்கும்  எடப்பாடிக்கும் இடையேயான மோதலாக வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் பொன்முடிக்கும், சி.வி, சண்முகத்துக்கும் இடையேயான மோதலாகவே விக்கிரவாண்டியில் பார்க்கப்படுகிறது. பொன்முடிக்கு மிக நெருக்கமானவரான புகழேந்தியை விக்கிரவாண்டியில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக்கி உள்ளது. இவர்  விக்கிரவாண்டியைச்  சேர்ந்தவரல்லாததால் உள்ளூரில் கொஞ்சம் புகைச்சல் உள்ளது.

சி.வி.சண்முகத்தின்  சொற்படி  முத்தமிழ்ச்செல்வனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக்கி உள்ளது. வேலூரில் அடைந்த தோல்வியை சரிக்கட்ட சி.வி.சண்முகம் விக்கிரவாண்டியை கையில் எடுத்துள்ளார். விக்கிரவாண்டியின் வெற்றி பொன்முடிக்கும், சண்முகத்துக்கும் அத்தியாவசியமானதால் வெற்ரி பெறுவதற்காக இருவரும் கடும் முயற்சி செய்வார்கள். விக்கிரவாண்டியின் முன்னாள் உறுப்பினர் ராதாமணி, அந்தத் தொகுதிக்கு அதிகம் நன்மை   செய்யவில்லை என்றாலும் பொன்முடியின் உறுதிமொழிக்கு கொஞ்சம்  செல்வாக்குள்ளது.

நாங்குநேரியில் போட்டியிடுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பியது. காங்கிரஸ் அடம்பிடித்து தொகுதியை வாங்கியது. நாங்குநேரியின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் வசந்தகுமாரை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி ரூபி மனோகரனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ரூபி மனோகரன் நாங்குநேரியைச் சேர்ந்தவரல்ல என்ற குற்றச்சாட்டை அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். உள்ளூர்காரரான நாராயணன் என்பவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக்கியுள்ளது.

நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தனக்கு விசுவாசமானவர்களையே எடப்பாடி  வேட்பாளராகியுள்ளார். ஒரு தொகுதியில் தனக்கு வேண்டியவரை வேட்பாளராக்குவதற்கு பன்னீர்  முயற்சி செய்தார். எடப்பாடியின் சதுரங்க ஆட்டத்துக்குமுன் பன்னீர் தோற்றுப்போனார். சீமானின் நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை நிருத்தியுள்ளது. இயக்குநர் கெளதமன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனாலும், போட்டி பிரதான கட்சிகளுக்கிடையில்தான் எனபதில் சந்தேகமில்லை.

No comments: