Monday, October 28, 2019

விருப்பமில்லாதவருக்கு எதிராக வாக்களிக்கும் நிலையில் உள்ள மக்கள்


தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நாடு. அவர்தம் பாட்டனும் முப்பாட்டனும் கோலோச்சிய நாடு. ஒல்லாந்தரும் போத்துக்கேயரும் அழிக்க முயன்ற நாடு,  பிரிடிஸ்காரன்  பிரித்து வைத்தநாடு உலகில் உள்ள நாடுகளைப்போல் ஜனநாயகக்கடமை எம் நாட்டிலும் நடைபெறுகிறது. ஆனால், தம் அரசாங்கத்தைத் தேர்வு செய்யும் உரிமை இலங்கையில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இல்லை. இலங்கை என்பது நம் தாய்த்திருநாடு என்பது அந்தப் பாட்டுடனே கடந்துபோய்விட்டது.

ஒருநாடு இரண்டு பெயர்கள். இலங்கை என்கின்றனர் தமிழர்கள்.சிங்களவர்கள்  ஸ்ரீலங்கா எனக் கூறுகின்றனர்.  இலங்கை சுதந்திரமடைந்து  71 ஆண்டுகளாகின்றன. 47 வருடங்களாகத் தாம் விரும்பிய அரசாங்கத்தை தமிழ் மக்கள் அமைக்கவில்லை.  தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆதரவளித்து சிங்களக் கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே தமிழர்கள் எடுத்தனர். அதனைக் கண்டு சிங்களத் தலைவர்கள் யாரும் வருந்தவில்லை. அதனையே தமது வாக்கு வங்கிக்குப் பயன் படுத்திக்கொண்டார்கள்.

இலங்கையில் தலை நிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வை  சிங்களம் மட்டும்,தரப்படுத்தல்,விகிதாசாரம்  போன்றவை முட்டுக்கட்டைகளாக முடக்கின. சிங்களம்  பெளத்தம் என்பனவற்றுக்கு அரசியலமைப்பு முன்னிலை கொடுத்ததால் தமிழ் மக்களின் வாழ்வு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டது. இலங்கை  சுதந்திரமடைந்தபோது சிங்களத் தலைவர்களும், தமிழ்த் தலவர்களும்  ஒற்றுமையகச் செயற்பட்டனர். ஆட்சி அதிகாரப்போதை தலைக்கேறியதால் சிங்களத் தலமைகள் தமிழர்களை உதாசீனம் செய்யத்தொடங்கியது.  தமக்குரிய அங்கீகாரத்தையும் உரிமைகளையும் கேட்டுப்போராடி வெறுப்படைந்த தமிழ்த்தலைமைகள் தனிநாட்டுக்கோஷத்தை முன்வைத்தன. அதனை வேத வாக்காக ஏற்றுக்கொண்ட வடக்கு கிழக்கில் வாழும்  தமிழ் மக்கள்  47 வருடங்களாகத் தமக்குரிய அரசாங்கத்தைத் தேர்வு செய்யவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாறிமாறி இலங்கையை ஆட்சி செய்தபோதும்  வடக்கு, கிழக்கில் அவற்றால் ஆழமாகக்கால் ஊன்ற முடியவில்லை. ஆனாலும், விகிதாசாரத் தேர்தல் முறையால் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சிங்களத்தலைமைத்துவக் கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுகின்றன. பிரிந்திருந்த தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாகி  தமிழீழம் என்ற  கோரிக்கையுடம் தேர்தலில் போட்டியிட்ட போது  வடக்கு கிழக்கு தமிழர்கள் ஆதரித்தார்கள். பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் கட்சியாக அங்கீகாரம்  பெற்றது.

எந்தச் சூழ்நிலையிலும் சிங்கள அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கக்கூடாது என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடு. ஆட்சி மாற்ற அரசியலில் சிக்குண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலின் அரசைக் காப்பாற்றியது. அரசியல் கைதிகள் விவகாரம், இராணுவத்தின் வசமுள்ள காணி விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறியமுடியாத நிலை என்பனவற்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள்   வெறுப்படைந்துள்ளனர். அடுத்துவரும் தேர்தலில் கூட்டமைப்பின் பலம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்கமுடியாதுள்ளது. சம்பந்தன்,மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளும் வெறுப்பான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் தகுதியான ஒரு தலைவரைத் தெரிவு செய்ய முடியாத நிலை உள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இலங்கை அரசியல்  களம்   சுறுசுறுப்படைந்துள்ளது. பிரதான கட்சிகள் தமது வேட்பாளரை களத்தில் நிறுத்தியுள்ளன. சுயேச்சைகளும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். தமக்கு விருப்பமான ஒருவரைத் தேர்வு செய்யும் நிலையில் தமிழர்கள் இல்லை. இலங்கையின் ஜனாதிபதியாக யார் வரக்கூடாது என்பதைத் தீமானிப்பவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள். இந்த உண்மை சிங்களத் தலைமைகளுக்கும் நன்கு தெரியும்.

சமாதானம் என்ற கோஷத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க முதலில்   போட்டியிட்டபோது சமாதானத்தை விரும்பிய தமிழர்கள் அவருக்கு வாக்களித்தனர். சமாதானப்பறவையை வல்லூறு விரட்டியது. அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தல் மீதான ஆர்வம் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாமல் போனது. சரத் பொன்சேகாவும், மஹிந்த ராஜபக்‌ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது மஹிந்தவுக்கு எதிராக அதிகமான தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.  புலிகளை அழித்த  போரின் வெற்றி அவரை ஜனாதிபதியாக்கியது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியும் மஹிந்தவும் முட்டி மோதியபோது மீண்டும் மஹிந்தவுக்கு எதிராகவே தமிழர்கள் வாக்களித்தனர்.

மைத்திரியின் அரசியல் பின்புலம் அவருடைய கொள்கை என்பனவற்றின்மீது  தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை வைத்தனர். நல்லிணக்கம் எனும் சொல் மயங்கவைத்தது. அரசியல் சதுரங்கத்தில் சிக்கிய ஜனாதிபதி மைத்திரியின் மீதான நம்பிக்கை சிதறியது.  அரசியல் எதிரிகளின் சவால்களை முறியடிப்பதிலேயே  தனது ஆட்சிக்காலத்தை முடிக்கிறார் ஜனாதிபதி மைத்திரி. மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தமிழ் மக்கள் தயாராகிவிட்டார்கள். இப்போது மஹிந்த வின் இடத்தில் அவரது சகோதரர் கோதபாய. சகோதரரை ஜனாதிபதியாக்கி தான் பிரதமராவதே அவரது இலக்கு. ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு எதிராக ஜனாதிபதி களத்தில் நிற்பவர் சஜித்  பிரேமதாச.

பண்டாரநாயக்க குடும்பத்தின் கைகளில் இருந்த இலங்கை அரசியல் இப்போது ராஜபக்‌ஷ குடும்பத்தின் கைகளுக்குச் சென்று விட்டது. அவர்களை எதிர்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி  பிரேமதாசவின் வாரிசான சஜித் தயாராகிவிட்டார். இலங்கையின் ஜனாதிபதியாக யார்வெற்றி பெற்றாலும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்பட மாட்டாது என்பது  உண்மை.

No comments: