Tuesday, December 3, 2024

பத்திரிகைத் துறையில் சிறந்த ஆளுமை


 இலங்கையில் இன்று அச்சு ஊடகத் துறை பல்வேறு  சவால்களுக்கு மத்தியில் தன்னை நிலைநிறுத்த கடும் பிரயத்தனப்பட்டு வருகையில் இத் துறையில் அவ்வப்போது பலர் கோலோச்சி வந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்  வாசகர்கள் மத்தியில் என்றுமே தங்களின் ஆளுமையால் சிறப்பான இடத்தை பலர் பிடித்துள்ளனர்.அவர்களில் ஒருவராகவே வடமராட்சி வதிரியின் மைந்தன் சூரன்.ஏ. ரவிவர்மா (ரமணி) தனது பணியை தொடர்கிறார்.    

1997 ஏப்பிரல் 6 ஆம் திகதி ‘தினக்குரல்’ பத்திரிகை கொழும்பில் ஆரம்பமான ஓரிரு தினங்களில் உதவி ஆசிரியராக இணைந்த இவர்  பல வருடங்களாக தினக்குரலில் சேவையாற்றி செய்தித் தொகுப்பு, கட்டுரை எழுதுதல், குறிப்பாக புதன் வசந்தம் பகுதியில் விளையாட்டு,சினிமா உட்பட பல்வேறு  கட்டுரைகளை எழுதி பத்திரிகையை பலப்படுத்தினார்.
இந்த நிலையில் இவரது  ஆற்றலால் ‘இடி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரானார். அதனைத் தொடர்ந்து சுடரொளிப் பத்திரிகையிலும் அரிய சேவையாற்றினார். அதன் பின்னர் வீரகேசரியில் இணைந்து செய்தித் தொகுப்பு, கட்டுரை எழுதுதல்  ஆகியவற்றில் தனித்துவத்துடன் மிளிர்ந்தார். ‘மெற்றோ நியூஸ்’, ‘மித்திரன்’, ‘வீரகேசரி வார மலர்’ ஆகியவற்றில் பல கட்டுரைகளைத் திறம்பட எழுதினார்.
அங்கிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட பத்திரிகைத் துறையிலிருந்த ஆர்வம் காரணமாக பல பத்திரிகைகள், இணையத் தளங்கள், சமூக ஊடகங்களில் அரசியல் உட்பட வெவ்வேறு துறைகளிலும் பல சிறப்பான கட்டுரைகளை எழுதி வருகிறார். அரசியல், விளையாட்டு,சினிமா ஆகியவற்றில் இவர் கொண்டிருக்கும் மிகுந்த ஆர்வம் காரணமாக அத்துறைகளில் இவர் எழுதும் கட்டுரைகள் மிகக் கவனிப்பிற்கும் பாராட்டுக்கும் உள்ளாகியுள்ளது.தற்போது சினிமா தொடர்புடையதாக இவரது இந்நூல் வெளிவருகிறது.
மிகவும் நேர்மையான ஒரு பத்திரிகையாளரான இவர், பத்திரிகா தர்மத்திற்காக எப்போதும் பாடுபட்டவர். இப்பொழுதும் தனது வயது மூப்பினையும் பொருட்படுத்தாது இருபத்து நான்கு மணிநேரமும் பத்திரிகைத் துறையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறார். தற்போது ‘தீம்புனல்’ மின் இதழின் பிரதம ஆசிரியராக இருக்கும் இவரால் வாசகர்களின் எண்ணங்களுக்கேற்ப பல்துறை இதழாக அது பரிமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

த.சிவகணேசன்
செய்தி ஆசிரியர்  
தினக்குரல் 

No comments: