Wednesday, December 4, 2024

அதானியால் முடங்கியது இந்திய நாடாளுமன்றம்


 உலககோடீஸ்வரர்களில் ஒருவராகக் கருதப்படும் அதானிக்கு அமெரிக்கா  பிடியாணை பிறப்பித்துள்ளதால்  இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின்  கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய வங்கிகளில்  கோடிக்கணக்கான பணத்தை கடனகப் பெற்ற அதானி குழுமம் அதனை இன்னமும் திருப்பிச் செலுத்தவில்லை. அதானிக்கும் , மோடிக்கும்  இடையிலே நிலவும் நல்லுறவே அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு உதவுவதாக எதிர்க் கட்சிகள்   குற்றம் சாட்டியுள்ளன.இந்த நிலையில்  இலஞ்சம் கொடுத்த குற்றச் சாட்டில் அதானிக்கு அமெரிக்கா  பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்ற நீதிபதி, அதானி லஞ்சம் கொடுக்க சம்மதித்தது உண்மை தான் என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து, அதானிக்கு பிடியாணை பிறபித்து உத்தரவிட்டுள்ளார்.நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் ( US Attorney) அலுவலகம் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டின்படி, "இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சூரிய ஒளி மின் விநியோக ஒப்பந்தங்களுக்காக, தோராயமாக 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை, (கிட்டத்தட்ட ரூ. 2 ஆயிரம் கோடி) இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க அதானி ஒப்புக்கொண்டுள்ளார்''

''இதனை மறைத்து, அமெரிக்காவில் உள்ள ஊழலுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் வழக்கங்களை மீறி, அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து கடனாகவும், பத்திரங்கள் மூலமாகவும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதானி குழுமம் பெற்றுள்ளது'' என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அதானி மட்டுமின்றி, வினித் எஸ் ஜெய்ன் ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால், சௌரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா உட்பட 7 நபர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் அதானி குழுமம் மட்டுமின்றி அஜூர் என்ற நிறுவனத்தின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

"இந்தியாவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக பொய்களைக் கூறி அதானி குழுமம் அமெரிக்காவிலும், உலக நாடுகளில் இருந்தும் முதலீடுகளைப் பெற முயற்சி செய்துள்ளது," என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

 அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடியாணை  கொடுத்திருப்பதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்

இந்த நிலையில், அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டில் இருந்து அதானி விடுவிக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதானி குழும நிறுவனமான கிரீன் எனர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்காவின் நீதித்துறையின் (US DOJ) குற்றப்பத்திரிகை அல்லது அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (US SEC) சிவில் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையில் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை( FCPA) மீறுவதாகக் குற்றம் சாட்டப்படவில்லை.

பத்திர மோசடி சதி, கம்பி மோசடி சதி மற்றும் பத்திர மோசடி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இயக்குநர்கள் மீது தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை  குற்றப்பத்திரிகை மற்றும் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் (SEC) சிவில் புகார்களில் கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோருக்கு எதிரான  ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது குறித்து விரிவான விசாரணை நடத்தி, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டபோது, அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அதானி மீது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. குறிப்பாக நாட்டின் வளங்களை அதானி எனும் தனி நபருக்காக மத்திய அரசு வாரி வழங்குகிறது என்றும், அவரை பிரதமர் மோடி பாதுகாக்கிறார் எனவும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இப்படி இருக்கையில்தான் அமெரிக்காவில் அதானி குழுமம் மீதும், அதானி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. அதிகாரிகளுக்கு ரூ.2000 கோடி வரை லஞ்சம் கொடுக்க அதானி முன்வந்ததாக அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியிருந்தது.

 அதானி ஊழல் புகார், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக்குழு இதனை விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் இக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். எனவே இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் முழுக்கம் எழுப்பினர். இதனால் இரு அவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடிப்பதாக ஆளும் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த கேட்டால், அதை அரசு புறக்கணிக்கிறது என்றும், அவர்கள்தான் நேரத்தை வீணடிக்க எங்களை உந்தி தள்ளுகிறார்கள் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் நாடாளுமன்ற‌ம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடும்போது போராட்டம் வெடிக்கும்.

இதே வேளை தமிழகத்திலும் அதானி விவகாரம் சூடுபிடித்துள்ளது.அதானிக்கு எதிரான வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில்,'' ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், ஒதிஷா, ஜம்மு - காஷ்மீர், தமிழகம், சத்தீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்கள் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து உற்பத்தியுடன் இணைந்த திட்டத்தின்படி சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை (Power Sale Agreement PSA) செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஆந்திர மின்சார வாரியத்திற்கு 7 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக ஒப்பந்ததைப் பெறுவதற்காக அம்மாநில மின்சார வாரிய அதிகாரிக்கு ரூ.1750 கோடி கையூட்டு வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

தமிழக மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட கையூட்டு பெற்றதில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழக மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

 அதானியின் விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் 10ம் திஅதி தமிழக முதல்வர் ஸ்டாலினை, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன? அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். ஸ்டாலின் - அதானி ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார். 

ராமதாஸின் குற்றச்சாட்டுப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது 'ராமதாசுக்கு வேறு வேலை இல்லை'   என்று சொன்னார். 

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸின் கட்சித் தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, தமிழகம் முழுதும்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவர்கள் போராட்டம் ந‌டத்தினர். தமிழக பாரதீய ஜனதாத்  தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை,   சீமான்,  வாசன் ஆகியோரும் ராமதாஸுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள்.அதானி விவகாரம் மீண்டும் தலைதூக்கி உள்ளது.

No comments: