Monday, September 15, 2025

தமிழக அரசியல் கட்சிகளுக்குள் நீடிக்கும் குழப்பம்


 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னமும் ஏழு மாதங்கள்  இருக்கின்ற நிலையில்  அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.  முதலமைச்சர் ஸ்டாலினும், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடியும்  தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளனர். தோழமைக் கட்சிகள்  கொடுக்கும் நெருக்கடிகளைச் சமாளித்து ச்டாலினின் பயணம் தொடர்கிறது.

ஆனால், எடப்பாடியின் நிலை முதலுக்கே மோசமாக  உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கலில்  ஒருவரான செங்கோட்டையன் , எடப்பாடிக்கு எதிராகக் களம் இறங்கி உள்ளார். அண்ணா திராவிட முன்னேற்ற்க் கழகத்தை எம்ஜிஆர் ஆரம்பித்தபோது  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியவர்களில் செங்கோட்டையனும் ஒருவர்.  .பன்னீர்ச்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் இருந்து வெளியேற்றிய எடப்பாடி  செங்கோட்டையன் மீதும் கைவைத்துள்ளார். கட்சி ஒற்றுமையாக  இருக்க வேண்டும்.  பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் மனம் திறந்து சொன்னதால் எடப்பாடி அவரைத் தூக்கி எறிந்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பி தமிழ்கத்தில் கால் வைக்கிறது பாரதீய ஜனதா. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல  பிரிவாகச் சிதறி உள்ளது. இதனை பாரதீய ஜனதா ரசிக்கவில்லை.

செப்டம்பர் மாதம் துவங்கியது முதலே அதிமுக மற்றும் அதிமுக-பாஜக கூட்டணிக்குள் பல மாற்றங்கள் நடந்து வருகிறது. மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சிக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அறிவித்தனர். கூட்டணி பற்றி டிசம்பரில் சொல்வதாக  பிரேமலதா அறிவித்துள்ளார். இதனால் அதிமுக பாரதீய ஜனதாக் கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது.  செங்கோட்டையனுக்கு ஆதரவாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சுமார் ஆயிர்ம் பேர் இராஜினாமாக் கடிதங்களை கொடுத்துள்ளனர்.

எடப்பாடியை முதலமைச்சராக்க தினகரனும், அண்ணாமலையும் விரும்ம்பவில்லை என்பதை பகிரங்கமாக அறிவித்துவிட்டனர்.

செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனால் தான் தாங்கள் கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்த டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்த போது, இபிஎஸ்., முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது. அதனால் தான் கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். ஓபிஎஸ்.,ம் இதையே தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் செங்கோட்டையனை சந்திக்க உள்ளதாகவும், செங்கோட்டையன் - சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக   மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், டில்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்ததாக தெரிவித்தார். அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக அவரிடம் பேசியதாக கூறினார். இதனால் அதிமுக ஒன்றிணைவது பற்றி, அமித்ஷாவிடம் எதற்காக பேச வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், தானும் அமித்ஷாவை சந்தித்ததாக அதிமுக முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையும் தெரிவித்துள்ளார். இதனால், அதிமுக.,விற்குள் என்ன தான் நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்யும் இடங்களில் அதிமுக.,வின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இது திமுக.,வை மட்டுமல்ல அரசியல் களத்தில் உள்ள பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதே நிலை தொடர்ந்தால் எளிதாக வெற்றி பெற்று, இபிஎஸ் முதல்வராகி விடுவார் என்பதால் அதை தடுப்பதற்காக கூட்டணியிலும், அதிமுக.,விற்குள்ளும் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அரசியல் வட்டாரங்களில் இது பற்றி விசாரித்த போது, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் இபிஎஸ் முதல்வராவதை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் இவர்களை சமாதானப்படுத்தி, கூட்டணியை பலப்படுத்த பாஜக முயற்சி வருகிறதாம். இருந்தாலும் கூட்டணியில் தொடர தாங்கள் தயாராக இருப்பதாகவும், அப்படி தொடர வேண்டும் என்றால் இபிஎஸ் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜக.,விடம் ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் நிபந்தனை விதித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. வலுவான ஒரு கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருக்கும் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பிறகு எப்படி மாற்றுவது? அப்படியே மாற்றினாலும் வேறு யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என பாஜக குழப்பத்தில் உள்ளதாம்

இபிஎஸ்., முதல்வர் வேட்பாளர் இடத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்பதை நோக்கி தான் எதிர்ப்பு குரல்கள் கட்சிக்குள்ளேயே எழுவதால், இதை பாஜக தலைமையும், அதிமுக தலைமையும் எப்படி கையாள போகிறது? இபிஎஸ்.,க்கு தான் இது நெருக்கடியை தருவதால், அவர் இந்த பிரச்சனையை எப்படி கையாண்டு, தேர்தலில் வெற்றி பெறப் போகிறார் என்பது தமிழக அரசியல் நிகழ்வுகளை இன்னும் சுவாரஸ்யமாக்கி உள்ளது.

ராமதாஸ், அவரதுமகன் அன்புமணி ஆகியோருக்கிடையேயான பிரச்சனை பூதகரமாக வெடித்துச் சிதறி உள்ளது.சொல்லுக் கேட்காத மகன் அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கிவிட்டார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு அனுப்பிய 16 குற்றச்சாட்டுகளுக்கு அவர் எந்தப் பதிலும் அளிக்காத காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அன்புமணியின் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ராமதாஸ், "அன்புமணி உடன் நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது.

மீறினால், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். அதே சமயம், அன்புமணியுடன் இணைந்து செயல்பட்டு வரும் சிலரை மன்னித்து ஏற்றுக்க்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், அன்புமணியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய ராமதாஸ், "மூத்த தலைவர்கள் அறிவுரை கூறியும் அதை அன்புமணி கேட்கவில்லை.

அவர் தனியாகக் கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்று மூன்று முறை அவரிடம் கூறியுள்ளேன்" என்றும் தெரிவித்தார்.

45 ஆண்டுகளாக உழைத்து, மிகவும் கஷ்டப்பட்டு பாமகவை உருவாக்கியதாகவும், ஆனால் அன்புமணிக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்

ஒரு காலத்தில் தமிழக அரசியலைத் தீர்மானித்த ராமதாஸ் இன்று கட்சியக் காப்பாற்றவேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளபட்டுள்ளார்.

 

ரமணி

14/9/25 

 

No comments: