Wednesday, March 5, 2008

ஆட்சியை மாற்ற முயற்சிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்




பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியன அவ்வப்போது தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கி தமது இருப்பை வெளிக்காட்டின. இதுவரை காலமும் தமிழக அரசுடன் முரண்படாது நல்ல பிள்ளையாக இருந்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து தமிழக அரசை எதிர்க்கத் தொடங்கிவிட்டனர்.
தமிழக அரசுக்கு எதிராக என்ன செய்யலாம் எனத் தவித்துக்கொண்டிருந்த தமிழக காங்கிரஸுக்கு அவல்போல் விடுதலைப் புலிகளின் விவகாரம் கிடைத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உணர்வு பூர்வமாகக் குரல்கொடுக்கும் தொல். திருமாவளவனை, முதல்வர் கருணாநிதியிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
தமிழக முதல்வரை எதிர்த்து இளங்கோவன் அவ்வப்போது போர்க்கொடி தூக்குவார். முதல்வர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துக்குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவது குறித்த தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பேசியதுடன் வெளிநடப்புச் செய்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் வெளிநடப்புச் செய்தது.
தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆதரித்தது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், தமிழக சட்ட சபையிலிருந்து காங்கிரஸ் கட்சியின் கைகோர்த்துக் கொண்டு வெளியேறியது.
காங்கிரஸ் கட்சியை ஆசுவாசப்படுத்துவதற்காக, தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார். என்ன நடந்தாலும் சட்டப்படிதான் நடக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்ட முதல்வர் முயற்சித்தார். முதல்வரின் மிரட்டல் திருமாவளவனை உசுப்பேற்றி விட்டது. விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதுடன் நின்றுவிடமாட்டேன். சட்டத்தைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று வீராவேசமாகப் பேசினார்.
வெல்லும் கூட்டணி முக்கியமில்லை, கொள்கைதான் முக்கியம் என்பதை திருமாவளவன் அப்பட்டமாகப் பேசியுள்ளார். திருமாவளவன் என்பது முதல்வருக்கு நன்கு தெரிந்தவிடயம். ஆகையினால், இப்பிரச்சினைகளை வேறு திசையில் மாற்றி விட்டார் முதல்வர்.
ஆட்சி மாற்றத்தை காங்கிரஸ் கட்சி விரும்பினால் அதற்கு நாம் தயார் என்று முதல்வர் சவால் விட்டார். முதல்வரின் சவால் காங்கிரஸுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவனா? வைகோவா? புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்று கேட்டால் வைகோதான் முதலிடத்தில் உள்ளார். வைகோவை பற்றி தனக்குத் தெரிந்தும் வைகோவுடன் கூட்டணி வைத்த தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் திருமாவளவன் மீது மிகுந்த கோபத்தில் இருப்பதற்கு ஆட்சியை மாற்ற முனைவதும் ஒரு காரணம் தான் என்ற கருத்தும் உள்ளது.
தமிழக அரசியல் பங்கு கேட்டு களைத்துப்போக தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் தம்மைப் பங்காளியாக்கும் ஒருவரை முதல்வராக்க விரும்புகின்றனர். விஜயகாந்தை முதல்வராக்கி அழகு பார்க்க தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பின்னுக்குத் தள்ளி முன்னேறிக் கொண்டிருக்கும் விஜயகாந்த்தை ஆதரிக்க வேண்டும் என தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம் என்று சில தமிழக அரசியல் தலைவர்கள் கணக்குப்போட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் என்னவென்றாலும் பேசட்டும், காங்கிரஸ் கட்சித் தலைவி தமக்கு ஆதரவாக முதல்வர் என்று திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்பார்க்கிறது. திராவிட முன்னேற்றக்கழகத்தை கைவிட்டு விஜயகாந்த்துடன் காங்கிரஸ் கட்சி இணைந்தால் தமிழகக் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரியும். அப்போது ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவார்கள் என்றும் திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்பார்க்கிறது.
பங்காளிகளினால் திராவிட முன்னேற்றக்கழகம் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் குடும்ப அரசியலும் திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆட்டிப்படைக்கிறது.
அழகிரியின் செல்வாக்கு தென்மாநிலங்களில் கொடி கட்டிப் பறக்கிறது. முதல்வர் கருணாநிதிக்கு பிறகு அடுத்த தமிழக முதல்வராகும் கனவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு அழகிரியின் வரவு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
கடந்தவாரம் தனது பிறந்த நாளை வெகுவிமர்சையாகக் கொண்டாடினார் அழகிரி. தமிழக அமைச்சர்களும் ஆளும் திராவிட முன்னேற்றக்கழகத் தொண்டர்களும் அழகிரிக்கு வாழ்த்துக்கூறி அவரை பரவசப்படுத்தினார்கள். ஸ்டாலினின் ஆதரவாளர்கள் சிலர் வெளிப்படையாக அழகிரியை வாழ்த்தி முழுப்பக்க விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளனர். ஸ்டாலினை நம்பிக்கொண்டிருக்கும் சிலர் அழகிரியை வாழ்த்தவில்லை.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ள இவ்வேளையில் அழகிரியின் விஸ்வரூப வளர்ச்சி ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர்களுக்குப் பின்னர் கட்சியை வழிநடத்துபவர் ஸ்டாலின் என்ற எண்ணம் ஒரு சிலரின் மனதில் இருந்து விடுபடுகிறது. ஸ்டாலினின் மென்மையான போக்கை பலர் விரும்பவில்லை. அழகிரியின் அதிரடி நடவடிக்கைகள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்றக்கழகத்தில் முக்கிய பதவி எதிலும் இல்லாத அழகிரி கட்சியின் செல்வாக்குடன் இருக்கிறார். அவர் கூறுவதை கலைஞர் கேட்கிறார். தனது ஆதரவாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அக்குற்றத்தில் இருந்து அவர்களைப்பாதுகாக்கத் துடிக்கிறார் என்ற கருத்துக்களினால் அழகிரி முன்னிலை வகிக்கிறார்.
கலைஞரின் வழிகாட்டலில் 30 வருடங்கள் அரசியலில் பலதுன்பங்களை அனுபவித்து மெதுவாக முன்னோக்கி வந்து கொண்டிருக்கும் ஸ்டாலினுக்குப் போட்டியாக யாரும் இல்லை என்ற எண்ணம் இதுவரை நிலவிவந்தது.
ஆனால், அழகிரியின் அதிரடி வளர்ச்சி ஸ்டாலினையும் அவரது ஆதரவாõளர்களையும் சற்றுத் தடுமாறச் செய்துள்ளது.
கட்சியில் எந்தப்பதவியையும் பொறுப்பேற்க மாட்டேன் என்று அழகிரி கூறிவருகிறார். ஆனால், அவர் பதவி வகிக்க வேண்டும் என ஆதரவாளர்கள் அழைப்பு விடுகின்றனர்.
திராவிட முன்னேற்றக்கழக உட்கட்சித்தேர்தலின் பின்னர் ஸ்டாலினா? அழகிரியா? என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.
வர்மா
10.02.2008; வீரகேசரி வாரவெளியீடு

No comments: