Friday, March 21, 2008

என்னைத் தெரியுமா?

கல்பனாவைக் கண்டதும் சிரித்துத் தலையாட்டும் அனைவரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.
மிகக் குறுகலான ஒழுங்கை என்றதால் ஆட்டோ மெது மெதுவாகச் சென்றது. கலவரமடைந்த கல்பனா பின்னுக்குப் பார்த்தாள். பின்னால் நின்றவர்கள் ஆட்டோவைக் காட்டி ஏதோ கதைத்தார்கள்.
வீடுகளுக்குள் இருந்தவர்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள். ஒரு சிலர் ஆட்டோவைத் தொடர்ந்தார்கள். கல்பனாவின் வீட்டிற்குச் செல்லும் பாதையில் ஆட்டோ திரும்பியதும் கல்பனாவின் இரத்தம் உறைந்தது.
கல்பனாவின் வீட்டைச் சுற்றிப் பல பொலிஸ்காரர்கள் நின்றார்கள். இரண்டு பொலிஸ் ஜீப்கள் வெளியே நின்றன. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதென உணர்ந்த கல்பனாவின் கை கால்கள் பதறின.
கல்பனாவின் வீட்டில் பொலிஸார் குவிந்திருந்ததைக் கண்ட ஆட்டோ டிரைவர் கண்ணாடியில் கல்பனாவைப் பார்த்தான். அவனது கண்களில் சந்தேக ஒளி படர்ந்தது.
கல்பனா கடந்த ஐந்து வருடங்களாக வத்தளையில் வாழ்ந்து வருகிறாள். அவளது கணவன் கடந்த வருடந்தான் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றான். இரண்டு குழந்தைகளும் அவளும் மட்டுமே தற்போது அந்த வீட்டில் வசிக்கிறார்கள்.
அந்த சுற்றாடலிலுள்ள அனைவருடனும் கல்பனா மிகவும் நட்பாகப் பழகினாள். மரக்கறி வியாபாரி, மீன் வியாபாரி, சந்தையிலுள்ள ஆட்டோ சாரதிகள் அனைவரும் அவள் மீது மதிப்பு வைத்திருந்தனர்.
முன்னால் பொலிஸ், பின்னால் ஊர் மக்கள் ஒரு சில விநாடிகள் பல யுகம் போல கழிந்தன. ஆட்டோ வாசலில் நின்றதும் கல்பனாவைக் காட்டி “இவதான் வீட்டிலே இருக்கிறா" என டிரைவர் பொலிஸ்காரரிடம் கூறினார்.
குனிந்து கல்பனாவைப் பார்த்த பொலிஸ்காரர் ஆட்டோவை உள்ளே போகும்படி பணித்தார். “வீட்டிலிருந்து ஏதாவது தடை செய்யப்பட்ட பொருள் எடுத்தினமோ தெரியாது. கடவுளே முந்தி இருந்தது யாரென்றும் தெரியாது" என கல்பனாவின் எண்ண அலைகள் ஓடின.
நடுங்கியபடி கல்பனா ஆட்டோவை விட்டு இறங்கியபோது “நீயா இங்கு இருப்பது’’ என பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்களத்தில் கேட்டார். கல்பனா சிங்களத்தில் பதில் சொன்னாள்.
“சிங்களம் தெரியுமா?" என அந்த அதிகாரி மீண்டும் சிங்களத்தில் கேட்டபோது “கொஞ்சம் விளங்கும். கொஞ்சம் தெரியும்" எனத் தடுமாறி தனக்குத் தெரிந்த சிங்களத்தில் கூறினாள். பொலிஸ் அதிகாரி உடனே தமிழில் கதைக்கத் தொடங்கினார்.
“உங்க பெயர் கல்பனா. மாப்பிள்ளை பிரான்ஸிலை. இரண்டு பிள்ளைகள் பம்பலப்பிட்டியில் படிக்கினம். விசா கிடைச்சா பிரான்ஸிற்குப் போவியள் சொந்தக்காரர் வெளிநாட்டிலையும் யாழ்ப்பாணத்திலையும் இருக்கினம். சரிதானே" என்றார்.
கல்பனா ஒன்றும் பேசாமல் மௌனமாக நின்றாள் “இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்" என அதிகாரி கேட்டார்.
“நீங்க பொலிஸ். உங்களுக்கு எல்லாம் தெரியும்" எனத் தயங்கித் தயங்கி கல்பனா பதிலளித்தாள்.
“உங்களுக்குப் பிடிச்ச நடிகர் விஜய். நடிகை சிம்ரன். கடைசியாகப் பார்த்த படம் ஜெமினி. பிடிச்ச பாட்டு ஓ...போடு" எனக் கூறிய அதிகாரி கல்பனாவை உற்றுப் பார்த்தார்.
இதெல்லாம் கூட பொலிஸுக்கு எப்படித் தெரியும் என கல்பனா குழம்பினாள்.
“எனக்கு மட்டுமில்லை உலகத்துக்கே தெரியும்... நீங்கதான் சொன்னீங்க" என பொலிஸ் அதிகாரி கூறினார்.
பொலிஸ் அதிகாரி கூறிய வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் கல்பனா தடுமாறினாள்.
“போன கிழமை றேடியோவில் உங்களைப் பற்றி சகல விபரங்களையும் சொன்னீங்கள்... அதைக் கேட்டிட்டு ஒருத்தன் திருட வந்திட்டான். பக்கத்து வீட்டுக்காரர் போன் பண்ணினதாலை நாங்க வந்து அவனைப் பிடிச்சம்...
“றேடியோவிலை கேட்டிட்டு பல இடங்களிலை அவன் திருடியிருக்கிறான். உங்களைப் பற்றி சகல விபரங்களையும் சந்தோஷமாகச் சொல்லுவீங்க... பிறகு களவு போனாப்போல எங்களிட்டை ஓடி வருவீங்க... அந்திக்கு பொலிஸ்ரேசனுக்கு வாங்க.." எனக் கூறிவிட்டு சக பொலிஸ்காரர்களையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
பொழுதுபோக்கு விபரீதமானதைக் கண்ட கல்பனா இனி இப்படிச் செய்வதில்லை என முடிவெடுத்தாள்.
சூரன் ஏ.ரவிவர்மா.
நன்றி;இடி வாரமலர் 2002
தாயகம் டிசம்பர் 2007

1 comment:

Anonymous said...

good story