Sunday, March 9, 2008

பிறந்தநாள் விளம்பரங்களால் அதிர்ந்தது தமிழக அரசியல்



ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக அவரது ஆதரவாளர்களினால் வெளியிடப்பட்ட விளம்பரங்களினால் முதல்வரின் குடும்பத்துக்கும் மாறனின் குடும்பத்துக்கும் இடையேயான பகைமை மேலும் வலுப்பெற்றுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரான செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்றும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மிகப் பிரமாண்டமானதாக விளம்பரப்படுத்தப்பட்டது.
மாறன் குடும்பத்தின் நாளிதழ்களான தினகரன், மாலைமுரசு ஆகியவற்றில் ஜெயலலிதாவை வாழ்த்தி பல விளம்பரங்கள் வெளியாகின. ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் போட்டி போட்டு மிகுந்த உற்சாகத்தடன் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர்.
கலைஞரின் புகழ்பாடிய பத்திரிகைகள் அவரது பரம எதிரியான ஜெயலலிதாவை வாழ்த்தியதை திராவிடக் கழகத்தில் உள்ள எவரும் ரசிக்கவில்லை. கவிதை பாடி தனது மனக் குறையை வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர்.
வைகோ, ஜெயலலிதா ஆகியோரின் செய்திகளை ஒரு காலத்தில் "சன்' தொலைக்காட்சி இருட்டடிப்புச் செய்தது. கலைஞர் குடும்பமும் மாறன் குடும்பமும் பிரிந்த பின்னர் ஜெயலலிதா வைகோ ஆகியோரின் செய்திகளுக்கு சன் தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது. மாறன் குடும்பத்து நாளிதழ்கள் ஜெயலலிதாவின் புகழ்பாடத் தொடங்கிவிட்டன.
பத்திரிகைக்கு விளம்பரம் மிக முக்கியமானது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தயாநிதி மாறன் ஒதுக்கப்பட்ட பின்னர் தினகரன், மாலைமுரசு ஆகிய பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பதை தமிழக அரசு குறைத்துக் கொண்டுள்ளது.
பத்திரிகையின் வளர்ச்சிக்காக எந்த விளம்பரத்தையும் தவிர்ப்பது கடினம்.
மாறன் குடும்பத்து பத்திரிகையில் ஜெயலலிதாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எவரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
ஜெயலலிதாவின் பிறந்த நாள் விளம்பரங்கள் வெளியானதும் தமிழகத்து அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தயாநிதி மாறன் இணையப் போகிறார் என்ற வதந்தி தமிழகம் எங்கும் பரவத் தொடங்கியது.
ஜெயலலிதாவின் விளம்பரங்களை வெளியிட்டு முதல்வரின் கோபத்தைத் தூண்டிய மாறன் சகோதரர்கள் இப்படி வதந்தி கிளம்பும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் உள்ள சகல பத்திரிகைகளும் ஜெயலலிதாவையும் தயாநிதி மாறனையும் கண்காணிக்கத் தொடங்கின. "நான் கட்சி மாற மாட்டேன். எனது உடலில் திராவிட முன்னேற்றக் கழகக் கொடிதான் போர்த்தப்படும்' என்று தயாநிதி மாறன் அறிக்கை விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தயாநிதி மாறனை வெளியேற்றுவதற்கு ஒரு சிலர் மும்முரமாக முனைகின்றனர். இதேவேளை, தயாநிதிமாறனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைப்பதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஆர்வத்துடன் முயற்சி செய்கின்றனர்.
கட்சியில் இருந்து தயாநிதி மாறனை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று சிலர் வரிந்து கட்டிக் கொண்டு காரியமாற்றுகின்றனர். அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது என்று ஒரு சிலர் கூறுகின்றனர். தயாநிதி மாறனை கட்சியில் இருந்து வெளியேற்றாமல் தூரத்தில் வைத்திருக்கவே முதல்வர் விரும்புகிறார். ஆகையினால் தான் தயாநிதி மாறன் விவகாரம் அப்படியே இருக்கிறது.
அரச விளம்பரங்களையும் திராவிட முன்னேற்றக் கழக விளம்பரங்களையும் தந்திருந்தால் ஜெயலலிதாவின் விளம்பரங்களை வெளியிட்டிருக்க மாட்டேன் என்று மாறன் குடும்பம் மறைமுகமாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பதே இன்றைய முக்கிய கேள்வியாக உள்ளது.
அரச விளம்பரங்களையும் திராவிட முன்னேற்றக் கழக விளம்பரங்களையும் மாறன் குடும்பத்து பத்திரிகைகளுக்கு கொடுத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விளம்பரங்களுக்கு தடை போடப்படுமா? என்ற கேள்விக்கான விடை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அரசும் கலைஞரும் தள்ளப்பட்டுள்ளனர்.
பிறந்த நாள் விளம்பரங்களினால் தமிழக அரசியல் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கையில் திருக்கடையூரில் உள்ள கோயில் ஒன்றும் யாகங்களாலும் ஹோமங்களாலும் பரபரப்பானது.
திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் உடனுறை அமிர்த கண்டேஸ்வரர் கோயிலில் நீண்ட ஆயுள் வேண்டி வழிபாடு செய்வார்கள். 16 வயதில் மரணத்தை எதிர்நோக்கிய மார்க்கண்டேயருக்கு இறைவன் அருள் கொடுத்து என்றும் பதினாறென இளமையும் வழங்கிய திருத்தலம் தான் இது.
திருமணம் முடித்தவர்கள் தமது 60 ஆவது 80 ஆவது வயதில் கணவன் மனைவியாக நீண்ட ஆயுள் தருமாறு வேண்டுதல் செய்வார்கள். திருமணமாகாத ஜெயலலிதா தனது தோழி சகிதம் மாலை மாற்றி யாகம் செய்தது பத்திரிகைகளில் பரபரப்பான செய்தியாகியது.
ஜெயலலிதாவின் பூஜைகள் முடியும்வரை அந்த ஆலயம் அவருடைய விசுவாசிகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
மக்களின் ஆதரவினால் முதல்வரான ஜெயலலிதா, தான் இழந்த ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக ஆண்டவனின் கருணையை நாடியுள்ளார்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு; 02.03.2008

No comments: