Sunday, March 22, 2009

மத்தியில் ஆட்சி அமைக்கும் கனவுடன் தேர்தலைச் சந்திக்கிறார் ஜெயலலிதா


இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்திவரும் அதேவேளை தமது கட்சியின் சார்பில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கையிலும் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகமும் அதிக அக்கறை காட்டுகின்றன.
கடந்த பொதுத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சி தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கடந்த முறை போன்று இமாலய வெற்றியைப் பெற மாட்டாது என்றே தெரிகிறது.
2004 ஆம் ஆண்டு 2 இந்தியப் பொதுத்தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிச கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் அணி மாறி அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமானதால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு முதல் தடை விழுந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளைப் பட்டியலிட்டு வாக்குச் சேகரிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டுள்ளன. திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் இலவசத் திட்டங்களும் வாக்குகளை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதேவேளை இலங்கைத் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்திய அரசின் உதவி உள்ளதென்ற பிரசாரங்கள் தமிழ் இன உணர்வாளர்களின் வாக்குகளை திசை திருப்பச் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
நாற்பதும் நமக்கே என்ற பிரசாரம் இந்தமுறை பொய்த்துப் போகும் சூழ்நிலை உள்ளது என்றாலும், அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் உள்ளன.
புதிய வேட்பாளர்களை களமிறக்குவதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் பலருக்கு இம்முறை சந்தர்ப்பம் கிடைக்காது என்று கருதப்படுகிறது. தயாநிதி மாறன், ரி.ஆர்.பாலு போன்ற ஒரு சிலருக்குத்தான் இந்த முறை போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படும். புதிய தலைமுறைக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இளைய சமுதாயத்தினர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தொகுதிப்பக்கம் அதிகம் எட்டிப் பார்க்கõதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்பதை முதல்வர் கருணாநிதி சூசகமாக அறிவித்துள்ளார். ஸ்டாலின் அணி, அழகிரி அணி என்ற பேதம் இல்லாது கட்சிக்கு விசுவாசமானவர்களைத் தேர்வு செய்வதில் திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடு சற்று வித்தியாசமாக உள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தமது ஜாதகத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் இடதுசாரிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மத்தியில் மூன்றாவது அணி ஆகியவற்றின் கூட்டணியின் சற்று பலமான நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளன.
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசும் தமிழக அரசும், அசமந்தமாகச் செயற்படுவதாக இடது சாரிகளும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் குற்றம் சாட்டியுள்ளனர். இவைகள் நடத்தும் எழுச்சி போராட்டங்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் பலத்த வரவேற்புள்ளது. மத்திய, மாநில அரசுகள் விட்ட தவறுக்கு நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் நல்லபாடம் புகட்ட வேண்டும் என்று தா. பாண்டியன், வைகோ போன்றவர்கள் பிரசாரம் செய்துள்ளனர். இவர்களின் பிரசாரத்தின் பிரகாரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றியைத்தேடி தருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டாத ஜெயலலிதா கடைசி நேரத்தில் உண்ணாவிரதம் இருந்து இலங்கைத் தமிழ் மக்களின் துயர்தீர்க்க நிதி வழங்கியது உணர்வு பூர்வமானதா? நாடகமா? என்ற பட்டிமன்றம் தமிழகத்தில் நடைபெறுகிறது.
இடதுசாரிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முதுகில் சவõரி செய்யும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெறும் நம்பிக்கையில் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அணிமாறும் காட்சிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி ராமச்சந்திரனும், எல்.கணேசனும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமாகிவிட்டனர்.
வைகோவின் வலது கரமாக விளங்கிய கண்ணப்பன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரப் பீரங்கியான ராதாரவி, தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார்.
செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன், கண்ணப்பன், ராதாரவி ஆகியோரின் வெளியேற்றம் அக்கட்சிகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வ‌ர்மா
வீரகேசரி வாரவெளியீடு

22/ 03 /2009

1 comment:

Anonymous said...

எந்த ஒரு பெண்ணையும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்காகக் குறை சொல்ல வேண்டியதில்லை.ஆனால் அவரால் பலருடைய வாழ்க்கைப் பாழடிக்கப் படும்போது குறை சொல்லியே ஆக வேண்டியுள்ளது.
ஆணவமும்,அட்டூழியமும்,அடங்காமை
யுமே தனது கொள்கை என்று பணத்தையும்.பதவியையுங்காட்டிப் பலரைப் பல்லிளிக்க வைத்து ஆட்டுவிக்கும் இவரைத் தலைவராக ஏற்றுக் கொள்பவர்களின் அறியாமையை இவர் பயன் படுத்திக்
கொள்வதும்,பலர் இவர் காலில்
விழுவதும் மன நோயாகத்தான்
தெரிகின்றது.