Monday, March 2, 2009

காங்கிரஸை அழைக்கும் ஜெயலலிதா


காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்க அழைப்பு விடுத்ததன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் ஜெயலலிதா.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தான் தமிழக காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று டில்லியில் உள்ளவர்கள் உரத்துக் கூறினாலும், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் சிறு மோதல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
தென் இந்திய மாநிலங்களின் மேலிடப் பொறுப்பாளராக இதுவரை இருந்த அருண்குமார் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர் குலாம் நபி ஆசாத்.
1991 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். ஆஸ்கார் பெர்னாண்டஸ், ஷீலா க்ஷித் ஆகியோருடன் இணைந்து குலாம் நபி ஆசாத் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே 1991 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ் கட்சி.
2004 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைந்திருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி என்பன திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம் சரணடைந்து விட்டன. இந்தக் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவெடுக்க முடியாது தடுமாறுகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கருதும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் டில்லியிலும் தமிழகத்திலும் உள்ளனர். தென்னிந்திய மாநில மேலிடப் பொறுப்பாளராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டதால் இவர்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்று கூறிய இடதுசாரித் தலைவர்கள் ஜெயலலிதாவின் அழைப்பைக் கேட்டு திகைத்துப் போயுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே இடதுசாரிகள் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்தனர். ஆனால், ஜெயலலிதா ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தது இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருத வேண்டியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிடியிலிருந்து வெளியேற வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஜெயலலிதாவின் அழைப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இலங்கைப் பிரச்சினையில் ஜெயலலிதாவின் கருத்தும் காங்கிரஸின் கருத்தும் ஒன்றாகவே உள்ளது. ஆகையினால் இரு கட்சிகளும் இணைவது சிறந்தது என்ற கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பரவலாக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கினால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்ற உண்மை வெளிப்படையானது. ஆனால், காங்கிரஸின் வாக்கு வங்கியை நம்பியே இலங்கை விவகாரத்தில் முதல்வர் தீவிரமாக செயற்படவில்லை என்பது மறைமுகமான உண்மையாகும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி இணையும் சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு. இவை இரண்டும் இணைந்தால் அதன்பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகள் மிக மிகத் தீவிரமாகி விடும். இலங்கைப் பிரச்சினையை கையிலெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தமிழக முதல்வர் தள்ளப்படுவார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் இடதுசாரிகளின் பாடு திண்டாட்டமாகி விடும்.


அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டிய இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்படும் இடதுசாரிகள் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சரணடைவார்கள்.
இதேவேளை, இலங்கைப் பிரச்சினையும், வக்கீல்களின் போராட்டமும் தமிழக முதல்வரின் கரங்களை விட்டுப் போய் விட்டன. தமிழக ஆட்சியை அகற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலையில் விழ வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி வக்கீல்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.வக்கீல்களின் போராட்டம் நீதிமன்ற வளாகத்தினுள் வன்முறையாக மாறியது. வக்கீல்களும், பொலிஸாரும் நீதிமன்ற வளாகத்தினுள் மோதும் வரை பிரச்சினைகளை வளர விட்ட தமிழக முதல்வர் அப்பிரச்சினையின் பின்னணியில் எதிர்க்கட்சிகள் இருப்பதாக குற்றம் சாட்டியது அவரின் இயலாமையை வெளிப்படுத்துகிறது.
ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள தமிழக முதல்வர் சகல பிரச்சினைகளையும் வைத்தியசாலையில் இருந்து தீர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்.
வக்கீல்களும் பொலிஸாரும் சமரசம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் முதல்வர் விடுத்த உண்ணாவிரத மிரட்டலுக்கு யாரும் அடிபணியவில்லை. வக்கீல்களின் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் பிரச்சினை விஸ்வரூபமெடுத்திருக்காது.
மிகச் சிறந்த அரசியல்வாதி, ராஜதந்திரி எனப் புகழப்படும் தமிழக முதல்வர் கருணாநிதி தன் முன்னாலுள்ள சில பிரச்சினைகளை துணிவுடன் எதிர்கொள்ளத் தயங்குகிறார். இந்தத் தயக்கம் திராவிட முன்னேற்றக்கழகத்துக் அபகீர்த்தியையும் அவமானத்ததையும் ஏற்படுத்தும் காரணியாக மாறிவிடும் என்பதை அவர் இன்னமும் உணரவில்லை
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு
01 03 2009

No comments: