Friday, March 27, 2009

அரசியலாகும் ஐ.பி.எல்.போட்டிகள்



கிரிக்கட் ரசிகர்களின் உற்சாகத் திருவிழாவான 20/20 கிரிக்கட் சுற்றுப் போட்டி இந்தியாவில் இருந்து தென் ஆபிரிக்காவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடிகளைக் குவிக்கும் கிரிக்கட்டில் அதிரடியான 20/20 போட்டியை நேரடியாகக் கண்டு ரசிக்கும் சந்தர்ப்பத்தை இந்திய ரசிகர்கள் இழந்து விட்டார்கள்.
ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில் நடத்துவதற்காக அட்டவணை தயாரித்து முடிந்து மூச்சு விடுவதற்குள் இந்தியப் பொதுத் தேர்தல் என்ற அனல் காற்று வீசத் தொடங்கியது. கிரிக்கட்டா? பொதுத் தேர்தலா என்ற கேள்விக்கு பொதுத் தேர்தல்தான் முக்கியம் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அடித்துக் கூறிவிட்டார்.
பொதுத் தேர்தலின்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் கிரிக்கட் போட்டிகளுக்கு பாதுகாப்புத் தர முடியாது என்று இந்திய உள்துறை அமைச்சர் அழுத்தம் திருத்தமாகக் கூறி உள்ளார். தேர்தல் நடைபெறும் நாட்களில் போட்டிகள் நடைபெறாது என்று உறுதியளித்த ஐ.பி.எல். நிர்வாகம் மூன்று முறை அட்டவணையை மாற்றியது. பொதுத் தேர்தலில் முனைப்புடன் இருப்பதால் ஐ.பி.எல். போட்டிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்காது மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கினால் போட்டிகளை நடத்தலாம் என்று உள்துறை அமை ச்சு மீண்டும் கிடுக்குப்பிடி போட்டது.
தேசிய அணி வீரருக்கு கிடைக்கும் பணத்தை விட அதிகளவான பணத்தை ஐ.பி.எல். அணியில் உள்ள வீரர்கள் பெறுகின்றனர்.
தாய் நாட்டுக்காக விளையாடுவதா பணத்துக்காக ஐ.பி. எல்லில் விளையாடுவதா என்று சில வீரர்கள் தடுமாறுகிறார்கள். ஐ.பி.எல்லில் விளையாடினால் தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்திலும் சில இளம் வீரர்கள் ஐ.பி.எல்லில் விளையாட ஆர்வம்காட்டுகின்றனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் ரீதியில் முரண்பட்டுக் கொண்டிருந்தாலும் ஐ.பி. எல்லில் இரு நாட்டு வீரர்களும் ஒரு அணியாக நின்று தமது வெற்றிக்காக போராடுகின்றனர்.
மும்பைத் தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் கிரிக்கட் போட்டியும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐ.பி. எல்லிலும் விளையாடுவதற்காக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைவதை அனுமதிக்க முடியாது என்று சிவசேனா போர்க் கொடி தூக்கியது.
பயங்கரவாதத்தை முறியடிக்க போதுமான தயார் நிலையில் உள்ளதாக அடிக்கடி அறிக்கை விடுக்கும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஐ.பி.எல். போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கடுமையாக கூறியதால் ஐ.பி.எல். நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.
கோடிகளில் புரளும் ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லாது இந்தியாவிலேயே நடத்துவதற்கே ஐ.பி.எல். நிர்வாகிகள் விரும்பினார்கள்.
கிரிக்கட் ரசிகர்கள் இந்தியாவில் மிக அதிகம். இந்தியாவில் போட்டி நடைபெறுவதனால் பார்ப்பதற்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்ற எண்ணம் இருந்தது. இந்திய அரசுடன் சுமுகமாகப் பேசி திருப்திகரமான முடிவை எடுப்பதற்கு பல முறை முயன்றபோதும் இந்திய அரசாங்கம் சாதகமான பதிலை வழங்காமல் இழுத்தடித்தது. இந்திய அராங்கத்தின் இழுத்தடிப்பினால் சுதாகரித்துக் கொண்ட ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டில் நடத்துவதற்கு முடிவு செய்தார்.
இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் ஐ.பி.எல். அட்டவணையை மாற்றுவது சிரமமான காரியம். 20/20 இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் நாள் நெருங்குவதாலும் வேறு கிரிக்கட் தொடர்கள் இருப்பதனாலும் ஐ.பி.எல். போட்டிகளின் திகதியை மாற்ற முடியாத நிலை உள்ளது. முதலாவது ஐ.பி.எல். போட்டி மிக பிரமாண்டமாக நடந்தது. அதனைப் பார்த்த பல வீரர்கள் அதில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்காததையிட்டு மனம் வருந்தினார்கள். இங்கிலாந்து வீரர்கள் கடந்த போட்டியில் விளையாடவில்லை. இந்தப் போட்டியை அவர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஐ.பி.எல். போட்டி இடம்மாறியதால் இங்கிலாந்து வீரர்கள் சற்று வருத்தத்துடன் உள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான சச்சின் ஐ.பி.எல். ஆரம்பமாவதற்கு முன்னரே ஐ.சி.எல். ஆரம்பித்து 20/20 போட்டியை நடத்த திட்டமிட்ட கபில்தேவ் ஆகியோரும் ஐ.பி.எல். போட்டிகள் இடம்மாறியதை விரும்பவில்லை.
இந்தியாவில் 50 ஆயிரம் ரசிகர்களின் முன்னால் விளையாடும் உற்சாகம் வேறு இடத்தில் கிடைக்காது என்று கருத்தும் வீரர்கள் மத்தியில் உள்ளது.மே மாதம் 8 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை 59 போட்டிகள் நடத்த ஏற்பாடாகி உள்ளன. ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் இங்கிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் கடும் போட்டி நிலவியது. இப்போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்று விட்டது.
20/20 கிண்ணப் போட்டி இடம் மாறியதால் ஐ.பி. எல்லுக்கு சுமார் 200 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டு அணி வீரர்கள் முகாமையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கான போக்குவரத்து தங்குமிட செலவு 100 முதல் 110 கோடி ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். 150 வீரர்களுக்குமான தங்குமிட செலவு 80 முதல் 100 கோடி ரூபா வரையில் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையும் பாதுகாப்பும் அச்சுறுத்தியதால் ஐ.பி.எல். 20/20 போட்டி இங்கிலாந்தின் கையில் இருந்து நழுவியது. பாதுகாப்புக்கு தென் ஆபிரிக்க முழு உத்தரவாதமளித்துள்ளது.
இந்திய அரசு மனம் வைத்திருந்தால் 20/20 போட்டியை இந்தியாவில் நடத்தி இருக்கலாம் என்று கருதும் இந்திய ரசிகர்களும் உள்ளனர். பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய அரசு தட்டிக் கழித்துவிட்டது என்ற கருத்து பலமாக உள்ளது.
இந்திய அரசியலின் முன்னால் தாக்குப் பிடிக்க முடியாத கிரிக்கட் தென் ஆபிரிக்காவிடம் சரணடைந்துள்ளது.
ரமணி



.
.
.
மெட்ரோ நியூஸ் 26/032/009

No comments: