Friday, July 3, 2009

அமைதியானது பொப் இசை



பொப் இசைச் சக்கவர்த்தி மைக்கல் ஜக்ஸனின் மரணம் உலகில் உள்ள இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தனது வசீகரக் குரலாலும் வித்தியாசமான நடன அசைவுகளாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த இசை விற்பன்னரின் மரணத்தால் அவரது ரசிகர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நிறவெறி கோலோச்சிய காலத்தில் கறுப்பு இனத்தவரான மைக்கல் ஜக்ஸனின் இசைக்கு இன, மத, மொழி பேதமின்றி ரசிகர்கள் அனைவரும் அடிமையானார்கள். பார்த்து ரசிக்கும் பொப் இசையை உணர்ச்சி மேலீட்டினால் ஆட வைத்தவர் மைக்கல் ஜக்ஸன். ரசிகர்கள் இசையை மட்டும் ரசிக்கக் கூடாது தம்மை மறந்து இசையுடன் ஒன்றிப்போய் ஆட வேண்டும் என்ற புது இலக்கணத்தை பொப் இசையில் புகுத்தி, வெற்றி பெற்றவர் மைக்கல் ஜக்ஸன். புதிய இசை, புதிய நடனம், விறுவிறுப்பு ஆகியவற்றால் உலகில் உள்ள கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் மைக்கல் ஜக்ஸனின் பொப் இசைக்கு அடிமையானார்கள். மைக்கல் ஜக்ஸன் மேடையில் தோன்றினால் உணர்ச்சி மேலிட்டு தம்மை மறந்து அழும் ரசிகர்கள் இன்று அவரது மறைவை, தாங்க முடியாது அழுது புலம்புகிறார்கள்.
1958ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29 ஆம் திகதி அமெரிக்காவில் உள்ள இந்தியானாவில் உருக்குத் தொழிலாளியான ஜோ.ஜக்ஸனுக்கும், கத்தரினுக்கும் ஏழாவது குழந்தையாகப் பிறந்தவர் தான் மைக்கல் ஜக்ஸன் என அழைக்கப்படும் மைக்கல் ஜோஸப் ஜக்ஸன். மைக்கல் ஜக்ஸனின் குடும்பமே இசைக் குடும்பம்தான். அவருடைய சகோதரர்கள் அனைவரும் திறமையாகப் பாடுவார்கள். இவருடைய சகோதரி ஜெனட் ஜக்ஸனுக்கும் உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். மைக்கல் ஜக்ஸன் சர்ச்சைகளில் சிக்கியது போலவே இவரது சகோதரியான ஜெனட் ஜக்ஸனும் பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைகளில் சிக்கினார்.
உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை தனது இசைக்கு அடிமையாக வைத்திருந்த மைக்கல் ஜக்ஸனின் மனதில் தான் ஒரு கறுப்பானவன் என்னும் குறை பெரிதாக இருந்தது. தனது நிறத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு மேற்கொண்ட சத்திர சிகிச்சைகள் தான் அவரது உயிருக்கு எமனாக மாறியது என்ற கருத்தும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
ஐந்து வயதில் ஆரம்பித்த மைக்கல் ஜக்ஸனின் இசைப் பயணம் 50 வயது வரை மங்காப் புகழுடன் இருந்தது.1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்து வயதான மைக்கல் ஜக்ஸன் தனது சகோதரர்களுடன் இணைந்து மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஐந்து வயதுச் சிறுவனின் பாடல்கள் அன்றைய ரசிகர்களின் மனதைக் கவர்ந்தன. சிறுவர் முதல் பெரியோர் வரை வயது வித்தியாசமின்றி மைக்கல் ஜக்ஸனின் ரசிகர்களாயினர். ஐந்து வயதான மைக்கல் ஜக்ஸனின் ரசிகர் கூட்டம் அவரது வயது கூடக் கூட இன்னமும் அதிகமாகியது. 50 ஆவது வயதில் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரது குரலால் வசீகரிக்கப்பட்டனர்.
1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மைக்கல் ஜக்ஸனின் சகோதரர்களின் "தி ஜக்ஸன் 5' என்னும் இசைத் தொகுப்பு வெளியானது. 11 வயதான மைக்கல் ஜக்ஸனின் குரல் அவரது சகோதரர்களின் குரலை விட வித்தியாசமாக இருப்பதை ரசிகர்கள் உணர்ந்தனர். அப்பொழுதே மைக்கல் ஜக்ஸனுக்கென்று ரசிகர்கள் வட்டம் உருவாக ஆரம்பித்தது. ஆயினும் இலட்சம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மைக்கல் ஜக்சனின் இசையால் கவரப்பட்டனர்.
சகோதரர்களுடன் இணைந்து இசைக் கச்சேரி நடத்திய மைக்கல் ஜக்ஸன் 1970 ஆம் ஆண்டு தனியாக இசைக் கச்சேரி நடத்தத் தொடங்கினார். 1972 ஆம் ஆண்டு "பென்' எனும் தனி அல்பத்தை வெளியிட்டார். ரசிகர்களின் மத்தியில் பெரு வரவேற்பைப் பெற்றது. 1978 ஆம் ஆண்டு முதன் முதலாக த வில்ஸ் என்ற படத்தில் நடித்தார். கறுப்பு நிறம் மைக்கல் ஜக்ஸனுக்கு உறுத்தலாக இருந்தது. நிறம் மாறுவதற்காக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்தார். 1990 ஆம் ஆண்டு உருமாற்றத்துடன் மக்கள் முன்பு முதன் முதலாக வெளிப்பட்டார். மைக்கல் ஜக்ஸனின் வித்தியாசமான முகம் ரசிகர்களைக் கவர்ந்தது.
மைக்கல் ஜக்ஸனின் இசைத்தட்டுகளுக்கும் இசை அல்பங்களுக்கும் கிடைத்த வரவேற்பு வேறு எந்த பாடகருக்கும் கிடைக்கவில்லை. இன நிற வெறியில் மூழ்கி இருந்த நாடுகளின் ரசிகர்கள் கறுப்பினத்தவரான மைக்கல் ஜக்ஸனின் இசைக்கு அடிமையானார்கள்.
1979 ஆம் ஆண்டு வெளியான Off the wall எனும் இசை அல்பம் ஒரு கோடியே பத்து இலட்சம் விற்பனையானது. 1979 இல் வெளியான Thriller அல்பம் ஐந்து கோடி விற்பனையானது. இதன் இசைத் தட்டு 14 மில்லியன் விற்பனையாகி கின்னஸில் இடம்பிடித்தது. இத்த அல்பத்துக்கு எட்டு கிராமிய விருதுகள் கிடைத்தன. 1987 இல் வெளியான"Bad' 2 கோடி 60 இலட்சம் விற்பனையானது. 1991 இல் வெளியானDangerous 2 கோடி 20 இலட்சம் விற்பனையானது. 1995 இல் வெளியான HIStory இரண்டு கோடி விற்பனையானது. இதுவரை 75 கோடி அல்பங்கள் விற்பனையாகியுள்ளன. மைக்கல் ஜக்ஸனுக்கு 13 கிராமிய விருதுகள் கிடைத்துள்ளன.
பொப் இசை, டிஸ்கோ இரண்டிலும் ஈடு இணை அற்றவராக விளங்கினார் மைக்கல் ஜக்ஸன். 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இசை உலகின் சக்கரவர்த்தியானார். கிங், ஒவ் பொப் என்ற பட்டப் பெயர் மைக்கல் ஜக்ஸனுடன் இணைந்து கொண்டது.
இசை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட எம்.ரி.வி. மைக்கல் ஜக்ஸனின் இசை நிகழ்ச்சிகளால் பிரபலமடையத் தொடங்கியது.புகழில் உச்சியில் இருந்த மைக்கல் ஜக்ஸனை சர்ச்சைகள் விரட்டின. ரசிகர்களை மகிழ்வித்த மைக்கல் ஜக்ஸன் வாழ்க்கையில் நிம்மதி இழந்து தவித்தார். நிறவெறியாலும் ஏழ்மையாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பதற்காக "த வேர்ல்ட்' என்ற அறக்கட்டளையை ஆரம்பித்தார்.
நல்ல நோக்கத்துக்காக அவர் ஆரம்பித்த அறக்கட்டளை அவருக்கு கெட்ட பெயரை தேடிக் கொடுத்தது. மைக்கல் ஜக்ஸன் மீது ஜோர்டான் சாண்ட்லர் என்ற சிறுவன் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் சிக்கி சீரழிந்த மைக்கல் ஜக்ஸன் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்தார்.
சிறுவர் பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெற்ற மைக்கல் ஜக்ஸனின் திருமண வாழ்க்கை சந்தோஷமானதாக இருக்கவில்லை. மூன்று பெண்களை திருமணம் செய்த மைக்கல் ஜக்ஸனின் திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
பிரபல பாடகரும் இசை அமைப்பாளருமான எல் விஸ்பிரிஸின் மகளும் பாடகியுமான லிசா மேரியை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். திருமண வாழ்க்கை கசந்ததும் இரண்டு வருடங்களில் விவாகரத்துச் செய்தார். 1996 ஆம் ஆண்டு டெபிரோவ் என்ற தாதியை திருமணம் செய்தார். இந்தத் திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனானார். டெபிரோவை 1999 ஆம் ஆண்டு விவாகரத்துச் செய்தார். அதன் பின் வாடகைத் தாய் மூலம் ஒரு ஆண் குழந்தைக்கு தகப்பனானார். 2002 ஆம் ஆண்டு ஒன்பது மாத தன் மகனை பேர்லினில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஜன்னலிலிருந்து வெளியே வீசுவது போல் வேடிக்கை செய்தார். இதனால் மிகப் பெரிய கண்டனத்துக்குள்ளானார்.
விவாகரத்துக் காரணமாக கோடிக்கணக்கான பணத்தை ஜீவனாம்சமாகச் செலுத்தினார். கோடிகளில் புரண்ட மைக்கல் ஜக்ஸன் கடனாளியானார். கடன் தொல்லையிலிருந்து மீள்வதற்காக தனது பண்ணை வீட்டை விற்றார். நிம்மதி இழந்து தவித்த மைக்கல் ஜக்ஸன் முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அவரது முஸ்லிம் பெயர் ரசிகர்களுக்கு தெரியாது. அவர் முஸ்லிமாக மாறி பெயர் மாற்றினாலும் மைக்கல் ஜக்ஸன் என்றே ரசிகர்கள் அவரை அழைத்தனர்.
கடன் தொல்லையிலிருந்து மீள்வதற்காக லண்டனில் 50 நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தார். தனது 50 ஆவது வயதை நிறைவு செய்ய 50 நிகழ்ச்சிகள் மூலம் இருந்த நிம்மதியை மீண்டும் பெற முயற்சித்தார். அதற்காக கடுமையான பயிற்சிகள் செய்தார். அவரின் எதிர்பார்ப்பு நிறைவேற முன்னர் மரணமாகி விட்டார். இவரது மறைவுக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
உலகப் புகழ்பெற்ற மைக்கல் ஜக்ஸனுடன் இணைந்து ஆடும் வாய்ப்பு பிரபுதேவாவுக்கும், ஷோபனாவுக்கும் கிடைத்தது. ஜேர்மனியிலும் கொரியாவிலும் நடந்த நிகழ்ச்சிகளில் பிரபுதேவாவும், ஷோபனாவும் மைக்கல் ஜக்ஸனுடன் இணைந்து ஆடி பாராட்டுப் பெற்றனர். அவரின் நடனத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்தது.
மைக்கல் ஜக்ஸனின் முதல் வீடியோ பில்லி ஜீன். இது தான் எம்.ரீ.வியின் ஒளிபரப்பான கறுப்பு இனத்தவரின் முதலாவது வீடியோ. மனிதாபிமான உதவிகளுக்கான விருதை அமெரிக்க ஜனாதிபதி ரீசன், மைக்கல் ஜக்ஸனுக்கு வழங்கினார். ஜபர் கோஸ்ட்
மக்கள் இவருக்கு மன்னாக முடிசூட்டினர். மெழுகுச் சிலை அரங்கங்களில் மைக்கல் ஜக்ஸனின் சிலைகள் இடம்பெற்றுள்ளன.இராணுவ உடை, மன்னர் உடை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம்.I am bad, I am bad, Rember the time, the don't really care about all us, have the world, Man in the mirror, black or white, I just cant stop loving. Personal favourite, Libernian Girl, Billi jean
போன்ற பாடல்கள் மூலம் மைக்கல் ஜக்ஸன் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பார்.
ரமணி
மெட்ரோநியூஸ் 03/07/09

1 comment:

வந்தியத்தேவன் said...

மிக நீண்டதும் ஆழமான கட்டுரை