Saturday, July 18, 2009

டெஸ்ட் போட்டியிலிருந்துஓய்வு பெறுகிறார் பிளின்டொப்




இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரரான அன்ரூ பிளின்டொப் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தது இங்கிலாந்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணியில் திறமையான பல வீரர்கள் இருந்த போதும் தொடர் வெற்றிகள் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அவ்வப்போது பல வீரர்கள் பங்களிப்புச் செய்தனர். 1998ஆம் ஆண்டு பிளின்டொப் அறிமுகமாகிய போது இயன் பொதம் மீண்டும் வந்து விட்டார் என்று இங்கிலாந்து ரசிகர்கள் குதூகலித்தனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போன்றே பிளின் டொப்பின் விளையாட்டும் மிகவும் சிறப்பாக இருந்தது.
சகலதுறை வீரராக எதிர் அணிகளை கலங்கடித்த பிளின் டொப்புக்கு அவரது உடல் நிலையே எதிரியாக மாறியது. காயம் காரணமாக அடிக்கடி அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார் பிளின்டொப். கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் காயத்தினால் அவர் விளையாடவில்லை. இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 48 டெஸ்ட் போட்டிகளில் 13 போட்டிகளில் மட்டும் பிளின்டொப் விளையாடினார். காயம் காரணமாக 25 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரை 18 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து கைப்பற்றுவதற்கு பிளின்டொப் பிரதான காரணியாக இருந்தார். பிளின்டொப்பின் சிறந்த ஆட்டத்தின் காரணமாக 2005ஆம் ஆண்டு ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதை தென்னாபிரிக்க வீரர் கலிஸுடன் பங்கிட்டுக் கொண்டார். அதே ஆண்டு பி.பி.சி. இவரை சிறந்த வீரராகத் தெரிவு செய்து கௌரவித்தது.
சிறந்த விளையாட்டு வீரரான இவர் சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்கினார்.
2002 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக மும்பையில் வெற்றி பெற்ற பின்னர் சட்டையைக் சுழற்றி சுழற்றி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 2002 ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவிடம் தோல்வி அடைந்ததும் சட்டையை கழற்றி பழிக்கு பழிவாங்கினார் கங்குலி. உதைபந்தாட்ட போட்டி முடிந்ததும் வீரர்கள் தமது சட்டையை மாற்றுவது சகஜம். கிரிக்கெட்டில் அப்படி ஒரு நடைமுறை இல்லை. இந்த இரண்டு சம்பவங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் துணைத் தலைவராக பிளின்டொப் நியமிக்கப்பட்டார். அப்போது இங்கிலாந்து வீரர்கள் போதையில் படகுச் சவாரி செய்த போது படகு கவிழ்ந்தது. இதனால் அவரது துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிளின் டொப் ஐந்து சதம், 25 அரைச் சதம் உட்பட 3708 ஓட்டங்களை எடுத்துள்ளார். 219 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 141 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிளின்டொப் 3394 ஓட்டங்கள் அடித்து 169 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
1999: தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதத்தில் காயம். இதனால் தொடரின் பாதியில் நாடு திரும்பினார்.
2000: பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் முதுகுப் பகுதியில் காயம்.
2002: குடலிறக்கம் காரணமாக "சத்திரசிகிச்சை'.
2003: தோள்பட்டை காயம் காரணமாக பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்.
2005: இடது கணுக்காலில் முதல் "சத்திரசிகிச்சை'.
2006: இடது கணுக்காலில் "சத்திரசிகிச்சை' செய்த இடத்தில் மீண்டும் பிரச்சினை. இதனால் இரண்டாவது முறையாக அதே இடத்தில் "ஆப்பரேஷன்'.
2007: கணுக்காலில் மீண்டும் வலி. பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகல். அடுத்தடுத்து இரண்டு முறை கணுக்காலில் "சத்திரசிகிச்சை'.
2008: முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு. நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து விலகல்.
2009: இடுப்புப் பகுதியில் காயம். மேற்கிந்திய தீவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து விலகல்.
2009: ஆஷஸ் தொடரில் முழங்கால் காயம்.

ரமணி
மெட்ரோநியூஸ்
17/07/09

No comments: