Monday, July 13, 2009

தி.மு.க.வுக்குள் வெடிக்கிறது பூசல்தொடர்கிறது ஸ்டாலினின் ஆதிக்கம்



திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் எழுந்த பூசல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு வெளிப்படுகையில் அமைச்சர் ஆற்காடு வீரõசாமி பற்றிய செய்தி பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.
பொருளாளர், துணை முதல்வர் என்று ஸ்டாலினின் தலையில் சுமை ஏறிய வேளையில் அமைச்சர் ஆற்காடு வீரõசாமியின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. முதல்வரின் நிழல் போல் செயற்பட்டு வந்த அமைச்சர் ஆற்காடு வீரõசாமி அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக செய்தி பரவியதால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிய புயல் எழுந்துள்ளது.
முக்கிய பிரச்சினைகள் பற்றிய கேள்வி எழும் போதெல்லாம் ஆற்காட்டாரிடம் கேளுங்கள் எனக் கூறிய ஸ்டாலின், துணை முதல்வரானதும் சகல பிரச்சினைகளுக்கும் தானே முடிவெடுக்கிறார். ஸ்டாலினின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களில் ஆற்காடு வீராசாமியும் ஒருவரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கட்சிக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முதல்வர் கருணாநிதி தீர்வு காணும் போது முதல்வருக்கு அருகே அமர்ந்திருப்பவர் ஆற்காடு வீரõசாமி. அப்பேற்பட்ட ஆற்காடு வீரõசாமி மீது தற்போது சந்தேகக் கோடு வீழ்ந்துள்ளது.
தேர்தல் காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட மின்வெட்டை அந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சரான ஆற்காடு வீராசாமி உரிய முறையில் தீர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மின்வெட்டுக் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி பாதிக்கப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளவர்கள் நினைத்தார்கள்.
தேர்தலுக்கு முதல் நாள் மின் தடை ஏற்பட்டது. தமிழக அரசுக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது. கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
அழகிரிக்கும் தயாநிதிமாறன் குடும்பத்துக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினையில் அமைச்சர் ஆற்காடு வீரõசாமி அழகிரியின் பக்கம் சாய்ந்ததாக தெரிய வருகிறது. இரண்டு குடும்பமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்பிய வேளையில் ஆற்காடு வீராசாமி தயாநிதி மாறன் குடும்பத்துக்கு எதிராக செயற்பட்டார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தயாநிதி மாறனை ஆதரித்து வாக்கு கேட்பதற்காக ஆற்காடு வீராசாமி முழுமனதுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தயாநிதி மாறனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த குறையில் உடல் நிலையை காரணம் காட்டி இடையில் ஒதுங்கினார். தயாநிதி மாறனை எதிர்த்து எஸ்.எஸ்.சந்திரனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக அறிவித்தது. அப்போது தயாநிதி மாறனின் வெற்றி உறுதி என்று கழகக் கண்மணிகள் உற்சாகத்துடன் இருந்தனர்.
களநிலைவரம் எதிராக இருப்பதை அறிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாநிதி மாறனை எதிர்த்துப் போட்டியிட முஹம்மது அலி ஜின்னாவை களத்தில் நிறுத்தியது.
தயாநிதி மாறன் போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய சென்னைத் தொகுதியிலேயே ஆற்காடு வீரõசாமியின் அண்ணா நகர் தொகுதி உள்ளது. அண்ணா நகர் சட்ட மன்றத் தொகுதியில் தயாநிதி மாறனை விட முஹம்மது அலி ஜின்னா 1900 வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார்.
கழகத்தின் தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களை எடுக்கப் போகிறேன் என்று தமிழக முதல்வர் பகிரங்கமாக அறிவித்த பின்னர் ஆற்காடு வீரசாமிக்கு எதிராக திரும்பி இருக்கும் இந்தக் குற்றச்சாட்டு மற்றவர்களையும் கதி கலங்க வைத்துள்ளது.
முதல்வரின் நிழலான ஆற்காடு வீராசாமிக்கே இந்த நிலை என்றால் எமது நிலை எப்படி இருக்கும்? என்று ஏனையோர் கலக்கத்தில் உள்ளனர்.
கழகத்தில் தனக்கு எதிராகக் கிளம்பி இருக்கும் பூசலினால் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிய ஆற்காடு வீரõசாமியை சிலர் சமாதானப்படுத்தி உள்ளனர்.
அரசியலில் உள்ள முதியவர்கள் வழிவிட்டு இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் கருணாநிதியின் மனதில் உள்ளது. அதன் வெளிப்பாடாகவே தனது பொறுப்பை மு.கா. ஸ்டாலினுடன் பகிர்ந்துள்ளார். மற்றவர்களும் இதேபோல் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி எதிர்பார்க்கிறார்.
முதல்வர் கருணாநிதியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிய கழகத்தில் உள்ள இளைஞர்கள் ஆவலாக உள்ளனர்
.வர்மா
வீரகேசரிவாரவெளீயீடு 12/07/09

1 comment:

ttpian said...

நல்ல கூத்து!