Wednesday, September 9, 2009

முதல் போட்டியில் இலங்கை வெற்றி


மூன்று நாடுகள் பங்குபற்றும் முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராகக் களமிறங்கிய இலங்கை அணி 97 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்தியாஇ நியூசிலாந்துஇ இலங்கை ஆகியவற்றுக்கிடையே ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறும் முக்கோண தொடரின் முதலாவது போட்டியில் சமரவீர, மத்தியூஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தினாலும் மலிங்கவின் பந்து வீச்சினாலும் இலங்கை அணி இலகுவான வெற்றியைப் பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை ரசிகர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான டில்ஷான் ஒரே ஒரு பவுண்டரியை அடித்து ரப்பின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பொண்டின் பந்தை தவ்ல‌ரிடம் பிடிகொடுத்த மஹேல ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். ஏழு ஓட்டங்கள் எடுத்த ஜயசூரிய பொண்டின் பந்தை பட்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சங்கக்கார 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பட்லரின் பந்தை ஒராமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 15 ஓட்டங்கள் எடுத்த கண்டம்பே வெட்டோரியின் பந்தை தவ்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 69 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தவித்தது.
அதிரடி ஆட்ட வீரர்கள் ஆட்டமிழந்ததும் நியூசிலாந்தின் கை ஓங்கியது. ஆறாவது விக்கெட்டுக் காக ஜோடி சேர்ந்த சமரவீர, மத்தியூஸ் ஆகிய இருவரும் நியூசிலாந்தின் கையில் இருந்த வெற்றியை இலங்கையின் பக்கம் நகர்த்தினார்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து அடித்து ஆடியதால் நியூசிலாந்து வீரர்கள் நிலை தடுமாறினார்கள். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சும் களத்தடுப்பும் சிறப்பாக இருந்ததனால் மூன்றாவது ஓவரில் இருந்து 26 ஆவது ஓவர்வரை இலங்கை வீரர்கள் பௌண்டரி அடிக்கவில்லை.
இலங்கை அணியின் இக்கட்டான நிலையை உணர்ந்த சமரவீரவும் மத்தியூஸ{ம் துடுப்பெடுத்தாடினர். இவர்கள் இருவரும் இணைந்து 127 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கு தெம்பையூட்டினர். 51 ஓட்டங்கள் எடுத்த மத்தியூஸ் பொண்டின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் முதல் சதத்தை அடித்த சமரவீர 104 ஓட்டங்களில் பட்லரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பொண்ட் மூன்று விக்கெட்டுகளையும் பட்லர் இரண்டு விக்கெட்டுகளையும் டப்பி, வெட்டோரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கை அணி 216 ஓட்டங்கள் எடுத்ததால் 217 ஓட்டம் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 36.1 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்கள மட்டும் எடுத்தது. எலியொட் அதிகபட்சமாக 41 ஓட்டங்கள் அடித்தார். பட்லர் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
ஏனைய வீரர்கள் இலங்கை வீரர்களின் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாது குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
மலிங்க நான்கு விக்கட்டுகளையும் விக்கெட்டுகளையும் ஜயசூரிய, குலசேகர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் துஷார ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக சமரவீர தேர்வு செய்யப்பட்டார். இலங்கை அணி ஐந்து புள்ளிகளைப் பெற்றது.
நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

No comments: