Thursday, September 24, 2009

மிரட்டியது மேற்கிந்தியத்தீவுபோராடி வென்றது பாகிஸ்தான்


தென்னாபிரிக்காவில் நடைபெறும் மினி உலகக் கிண்ணப் போட்டியில் அனுபவம் இல்லாத மேற்கிந்தியத் தீவுகளை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் அணி மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஐந்து விக்கட்களினால் வெற்றி பெற்றது.
சம்பளப் பிரச்சினை காரணமாக மேற்கிந்தியத் தீவுகளின் முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. மினி உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் எட்டு அணிகளில் மிகப் பலம் குறைந்த அணியாக மேற்கிந்தியத் தீவுகள் உள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 34.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தன.
முதலாவது ஓவரில் மேற்கிந்திய அணியின் சரிவு ஆரம்பமாகியது. ஒரு ஓட்டம் எடுத்த ரிச்சர்ட்ஸ் மொஹமட் அமீரின் பந்தில் ஆட்டமிழந்தார். நவீட் உல் ஹசனின் பந்தை இம்ரான் நஸீரிடம் பிடி கொடுத்த பிளெட்சர் ஏழு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். ஏழு விக்கட்டுகளை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 47 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியபோது எட்டாவது விக்கட்டில் இணைந்த சமி, மில்லர் ஜோடி 38 ஓட்டங்கள் எடுத்தது. மில்லருடன் இணைந்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய சமி 25 ஓட்டங்களில் சயீட் அஜ்மலின் பந்தில் விக்கட்டைப் பறி கொடுத்தார். அடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேற தனி ஆளாக நின்று போராடிய மில்லர் தனது முதலாவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். 57 பந்துகளுக்கு முகம் கொடுத்த மில்லர் ஒரு சிக்சர் ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் எடுத்தார்.
மொஹமட் அமீர், உமர் குல் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளையும் சயீட் அஜ்மல் இரண்டு விக்கட்டுகளையும் நவீட் உல் ஹசன், சயீட் அப்ரிடி ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
134 என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் மேற்கிந்திய அணி வீரர்களின் பந்துவீச்சில் தடுமாறி 30.3 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 134 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் தலைவர் யூனுஸ்கான் காயம் காரணமாக விளையாடததால் உப தலைவரான அப்ரிடி பாகிஸ்தான் அணியை வழி நடத்தினார்.
கெவின் டாங்கின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத பாகிஸ்தானின் வீரர்கள் ஆட்டமிழந்தனர். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான இம்ரான் நஸீர், கம்ரன் அக்மல் ஆகிய இருவரும் தலா ஐந்து ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சொஹைப் மலிக், முஹமட் யூசுப் ஆகிய இருவரும் தலா 23 ஓட்டங்களுடன் வெளியேறினர். மிஸ்பா உல் ஹக் ஆறு ஓட்டங்கள் எடுத்த வேளை பெர்னாட்டின் பந்தை வட்சனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணி ஐந்து விக்கட்களை இழந்து 76 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ஜோடி சேர்ந்த உமர் அக்மல், சயீட் அப்ரிடி ஆகிய இருவரும் இணைந்து பாகிஸ்தானை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
உமர் அக்மல் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் சயீட் அப்ரிடி ஆட்டமிழக்காது 17 ஓட்டங்களும் எடுத்தனர். 30.3 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்த பாகிஸ்தான் 134 ஓட்டங்கள் எடுத்து ஐந்து விக்கட்டுகளினால் வெற்றி பெற்றது.
கொலிங்டாங் நான்கு விக்கட்டுகளையும் பெர்னாட் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். உமர் அக்மல் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி

No comments: