Thursday, October 7, 2010

தி.மு.க.வுக்கு தலைவலியான இளங்கோவன்விஜயகாந்தை அரவணைக்கத் துடிக்கிறார்



தமிழக சட்ட சபைத் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க பிரதான கட்சிகள் அனைத்தும் முனைப்புக் காட்டி வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணி பலமாக இருப்பதாக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸின் தயவில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சிக்குரிய பங்கை முதல்வர் கருணாநிதி தரவில்லை என்ற கோபம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் உள்ளது. தமிழக ஆட்சியில் பங்குதராத திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று வெளிப்படையாகவே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிப்பவர்களில் முதலிடத்தில் உள்ளார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான இளங்கோவன். எதிர்க்கட்சிகள் கொடுக்கும் தலையிடியை விட அதிகளவான தலையிடியைக் கொடுக்கிறார் இளங்கோவன். திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு எதிரான இளங்கோவனின் கண்டன அறிக்கைகளும் அனல் தெறிக்கும் உரைகளும் தினசரிகளில் தலைப்புச் செய்தியாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எப்படித்தான் தலைகீழாக நின்று திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதியையும் விமர்சித்தாலும் முடிவு காங்கிரஸ் தலைவி சோனியாவின் கைகளிலேதான் உள்ளது. இளங்கோவன் திராவிட முன்னேற்றக் கட்சியை விமர்சிப்பதும் காங்கிரஸ் கட்சி இளங்கோவனை எச்சரிக்கை செய்வதும் தொடர்கதையாகி உள்ளது.
இளங்கோவனின் விமர்சனம் உச்சக் கட்டத்தை அடையும் வேளை காங்கிரஸ் தலைமைப் பீடம் அவரை எச்சரிக்கும். அதன் பின்னர் இளங்கோவன் பணிந்து போவார். இளங்கோவனின் விமர்சனம் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில் கூட்டணியைப் பற்றி யாரும் விமர்சிக்கக் கூடாது என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். இளங்கோவன் இனிமேல் அடங்கி விடுவார் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நினைத்தது. வழமையாக அடங்கிவிடும் இளங்கோவன் முன்னை விட அதிகமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சீண்டி வருகிறார்.
இளங்கோவனின் பேச்சை டில்லி கவனத்தில் எடுக்காது என்ற கணக்கு தவறு என்பதை காலம் கடந்து உணர்ந்தது திராவிட முன்னேற்றக் கழகம். காங்கிரஸ் தலைமைப் பீடம் எச்சரித்தும் இளங்கோவன் அடங்கவில்லை என்றால் இளங்கோவனின் பின்னணியில் பலமான சக்தி ஒன்று இருப்பதாக திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பிரச்சினை உண்டாக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்து போக வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கருதுகிறார்கள். காங்கிரஸைக் கைவிட்டால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து கொண்ட முதல்வர் கருணாநிதி கூட்டணியில் இருந்து வெளியேறக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.
ஜெயலலிதாவும் விஜயகாந்தும் இணைந்தால் அந்தக் கூட்டணி பலமாகி விடும் என்ற கருத்து உள்ளது. இருவரையும் இணைய விடாமல் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இதே பயம் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ளது. ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. விஜயகாந்தை, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைப்பதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தூக்கி ஏறிந்தால் காங்கிரஸுடன் கூட்டு சேரத்தயார் என்று விஜயகாந்த் சூசகமாகத் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டு விஜயகாந்துடன் கூட்டணி அமைக்கும் விஷப் பரீட்சைக்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. காங்கிரஸை விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் அதன் பின்னர் விஜயகாந்துடன் வெளிப்படையாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தத் தடையும் இருக்காது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இருக்கையில் விஜயகாந்த்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஏற்படும் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு நன்றாகத் தெரியும்.
கருணாநிதியையும், விஜயகாந்தையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தும் திட்டம் காங்கிரஸிடம் இருக்கிறதோ என்ற சந்தேகம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களில் கட்டளைக்குக் கீழ்ப்படியாது இளங்கோவன் வெளியிடும் கருத்துக்களால் இந்தச் சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளது.
இளங்கோவனின் விருப்பத்துக்கு மாறாக திராவிட முன்னேற்றக் கழக கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் இளங்கோவன் தனி வழி செல்வார். இளங்கோவனும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப்பிடிக்காத தமிழக காங்கிரஸ் தலைவர்களும் பிரிந்து சென்று விஜயகாந்துடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பார்கள். விஜயகாந்த், இளங்கோவன் கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் சகல தொகுதிகளிலும் போட்டியிடும். திராவிட முன்னேற்றக் கழகத்தை விரும்பாதவர்களும் காங்கிரஸ் கட்சி அபிமானிகளும் விஜயகாந்த், இளங்கோவன் கூட்டணியை ஆதரிப்பார்கள். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் இளங்கோவனின் ஆட்கள் போட்டியிட மாட்டார்கள். விஜயகாந்த், இளங்கோவன் கூட்டணி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸுடன் இணையும் அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி ஏற்படும். இவற்றையெல்லாம் காங்கிரஸ் கட்சி இரகசியமாகத் திட்டமிடுவதாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் இணைவதை விரும்பாத மூப்பனார் தனிக்கட்சி ஆரம்பித்து கருணாநிதியுடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் காங்கிரஸுடன் இணைந்த மூப்பனார் தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவுடனும் கை கோர்த்தது பழைய வரலாறு. அப்படி ஒரு வரலாற்றைத் திரும்பவும் உருவாக்குவதற்கு இளங்கோவன் முயற்சி செய்வதாக திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களின் இந்தக் குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் தலைமைப் பீடத்திடம் உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகள் மூலம் இதற்கான விடை வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
வர்மா,
வீரகேசரிவாரவெளீயீடு 19/09/10

No comments: