Thursday, October 14, 2010

கட்சியை வெறுப்பேற்றும் அழகிரிஅமைதி காக்கத் தவிக்கும் கலைஞர்

திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நிலவிய வாரிசுப்போர் விரிசல் அடைந்து கொண்டு வருகிறது. கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின்தான் என்ற நிலையே நிலவியது. அழகிரியின் அரசியல் பிரவேசத்தின் பின்னர் இந்த நிலை ஆட்டம் காணத் தொடங்கியது. கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின் தலைமை பொறுப்பை ஏற்று கட்சியை வழி நடத்துவார் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.
கருணாநிதியின் அரசியல் வாரிசாக ஸ்டாலினும் இலக்கிய வாரிசாக கனிமொழியும் வளர்ந்து வந்தனர். சந்தர்ப்பவசத்தினால் கனிமொழியும் அரசியல்வாதியானார். கனிமொழியின் அரசியல் பிரவேசம் ஸ்டாலினுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை. மத்திய அரசை கனிமொழியும் தமிழக அரசை ஸ்டாலினும் எதுவித பிரச்சினையும் இன்றி பிரதிநிதித்துவப்படுத்தினர். தமிழகத்தின் தென் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்ப்பதற்காக மதுரையில் தங்கிய அழகிரி அரசியலில் பிரவேசித்த பின்னர் ஸ்டாலினுக்கு கட்சிக்குள்ளேயே அச்சுறுத்தல் ஏற்பட்டது.
முதல்வர் கருணாநிதி இளவல் ஸ்டாலின் ஆகிய இருவரையும் சுற்றியே திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ச்சியடைந்தது. ஸ்டாலின் மீது விருப்பம் இல்லாதவர்களும் அவரை வெறுப்பதில்லை. அழகிரியின் அரசியல் பிரவேசத்தின் பின்னர் இந்த நிலை மாற்றமடைய தொடங்கியது. ஸ்டாலினைப் பிடிக்காதவர்கள் அழகிரியின் புகழைப் பாடத் தொடங்கினர். கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஸ்டாலினின் ஆளா? அழகிரியின் ஆளா? என்பது போன்ற கேள்வி எழத் தொடங்கியது.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஏற்படும் பிரச்சினைகள், எதிர்க்கட்சியினரதுதொல்லைகள் கூட்டணிக் கட்சிகளின் கழுத் தறுப்புக்கள் எல்லாவற்றையும் தனது அரசியல் அனுபவத்தின் மூலம் தீர்த்து வைக்கும் தமிழக முதல்வர் கருணாநிதியால் தன் மகன் அழகிரியைச் சமாதானப்படுத்த முடியவில்லை. அழகிரியின் அறிக்கைகளும் பேட்டிகளும் உரைகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் பூசலை ஏற்படுத்துகின்றன.
கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்வதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கள் அனைவரும் பகிரங்கமாக கூறி வருகின்றனர். ஆனால் அழகிரியின் கருத்து இதற்கு எதிர்மாறாக உள்ளது. கருணாநிதிதான் தலைவர். தமிழகத்தின் அடுத்த முதல்வர் கருணாநிதிதான் என்று உறுதியாகக் கூறி வருகிறார் அவர். தகப்பனின் பின்னர் தன் தம்பிக்குப் பட்டமெதுவும் செய்யப்படுவதை அழகிரி விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பத்திரிகைகள் இதனை ஊதிப் பெரிதாக்குகின்றன.
கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அழகிரிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற சில சிறப்பு அரங்கங்கள் வெளியீட்டு விழாக்கள் ஸ்டாலினின் தலைமையில் நடைபெற்றன. ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அழகிரிக்குக் கொடுக்கப்படவில்லை.
செம்மொழி மாநாட்டில் முதல்வர் கண்காட்சியைத் திறந்து வைக்கும் பொறுப்பு அழகிரிக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்ததனால் அதனைத் திறந்து வைக்கும் சந்தர்ப்பம் அழகிரிக்குக் கிடைக்கவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழõ மூன்று வாரங்களுக்கு முன்னர் நாகர்கோவிலில் நடைபெற்றது. அழைப்பிதழில் தென் மண்டல அமைப்பாளராக அழகிரியின் பெயர் இல்லை. கொதித்துப் போனவர்கள் தென் மண்டலத்தில் உள்ள அண்ணா அழகிரியின் அன்புத் தம்பிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புகழ் பரப்பும் மாநாடுகளில் ஒன்று முப்பெரும் விழா. அந்த விழாவில் கலந்து கொள்வது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களினதும் தொண்டர்களினதும் தார்மீகக் கடமைகளில் ஒன்று. அழைப்பிதழில் அழகிரியின் பெயர் இல்லாததனால் முப்பெரும் விழாவில் அழகிரி கலந்து கொள்ளமாட்டார் என்ற தகவல் பரவியது. அழகிரியைச் சமாதானப்படுத்த முதல்வர் கருணாநிதி பலமுறை முயன்றõர். அழகிரி தரப்பில் இருந்து சாதகமான பலன் கிடைக்கவில்லை.
கட்சி மாநாட்டு அழைப்பிதழில் யாருடைய பெயர் அச்சடிக்கப்பட வேண்டும் என்று யாப்பிலே கூறப்பட்டுள்ளது. அழகிரியின் பதவி கட்சி யாப்பில் உள்ளடக்கப்படவில்லை. அழகிரிøயச் சமாதானப்படுத்துவதற்காக அழகிரியை வரவேற்று பத்திரிகை விளம்பரம் பிரசுரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதையாக பத்திரிகை விளம்பரம் பிரச்சினையைக் கொடுத்து விட்டது. அழகிரியைச் சமாதானப்படுத்த பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்தில் குஷ்புவின் பெயரும் இருந்தது. இது அழகிரியின் ஆதரவாளர்களைச் சீண்டி விட்டது.
நாகர் கோவிலில் நடந்த முப்பெரும் விழாவுக்கு அழகிரி செல்லவில்லை. தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழக அரசின் பெரு விழாவாக நடந்த இந்த விழாவையும் அழகிரி புறக்கணித்தார். அழைப்பிதழ்களில் அழகிரியின் பெயர் இல்லாதது அவரின் கட்சித் தம்பிகளை சீண்டிவிட்டது. தஞ்சைப் பெரியகோயிலின் பிரதான வாயிலினால் நுழைந்த அரசியல்வாதிகளின் வாழ்வு அஸ்தமனமானதினால் மூட நம்பிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் முதல்வர் கருணாநிதி கூட பிரதான வாயிலின் மூலம் உள்ளே செல்லவில்லை.
தஞ்சைப் பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் சூசகமாக சில செய்திகளை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் 1012 ஆம் ஆண்டு பட்டம் சூட்டிக் கொண்டான். தந்தையும் மகனும் சிறப்பாக ஆட்சி செய்தார்கள் என்பது வரலாறு என முதல்வர் கூறியதன் அர்த்தம் அரசியல்வாதிகளை விழிப்படைய வைத்துள்ளது. 2011ஆம் ஆண்டு தமிழக சட்ட சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மகன் ஸ்டாலினின் கையில் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை சூசகமாகத் தெரிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
தனக்குப் பிறகு ஸ்டாலின்தான் என்பதை இதற்கு முன்பும் பல தடவை முதல்வர் கருணாநிதி சமிஞ்ஞை காட்டியுள்ளார். வெளியில் இருந்து வரும் எதிர்ப்பை சாமர்த்தியமாகச் சமாளித்த அவரால் உள்ளே இருந்து அழகிரி கொடுக்கும் நெருக்குதல்களைச் சமாளிக்க முடியாது திணறுகிறார். அழகிரியின் இச் செயற்பாடு ஜெயலலிதாவுக்குச் சாதகமாக அமைந்து விடுமோ என்று கழக கண்மணிகள் பயப்படுகிறார்கள். அழகிரியைச் சமாளிப்பதா அல்லது புறந்தள்ளுவதா என்பதை முதல்வர் கருணாநிதி முடிவெடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு03/10/10

No comments: