Tuesday, October 26, 2010

குலுங்கியது மதுரைகுதூகலத்தில் ஜெயலலிதா


மதுரையில் தனது செல்வாக்கைக் காட்ட களமிறங்கிய ஜெயலலிதா அதில் வெற்றி பெற்றுவிட்டார். அழகிரியின் கோட்டையில் அ.தி.மு.க. கொடி பட்டொளி வீசியது.
தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் வியூகத்தை உடைப்பதற்கும் காங்கிரஸை அடிபணிய வைக்கவும் உரிய நடவடிக்கையைத் தமிழக முதல்வர் முடுக்கி விட்டுள்ளார்.
அழகிரியின் ஒத்துழைப்பின்றி மதுரையில் சிறப்பாக எதனையும் செய்ய முடியாது. அழகிரியின் கோட்டை மதுரை. தமிழகத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்தாலும் மதுரையை ஆள்பவர் அழகிரி. "மதுரை அரசாளும் மீனாட்சி' என்பது பக்திப் பாடல். ஆனால் அழகிரி கை அசைத்தால் மதுரையே அதிரும் என்ற பெருமைகளை உடைத்தெறிந்துவிட்டார் ஜெயலலிதா.
தமிழக அரசைக் கண்டித்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்த உடனேயே பிரச்சினைகள் ஆரம்பமாகிவிட்டன. அண்ணன் அழகிரியின் கோட்டைக்குள் ஜெயலலிதாவை நுழைய விடக் கூடாது என்பதில் ஒரு சிலர் உறுதியாக இருந்தனர். திட்டமிட்டபடி மதுரையில் கூட்டம் நடத்துவேன் என்று உறுதிபடத் தெரிவித்தார் ஜெயலலிதா. மதுøரக்கு வந்தால் கொல்லப்படுவாய் என்று ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏட்டிக்குப் போட்டியாகத் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. கொலை மிரட்டல் விடுத்தவர்கள் ஆதாரத்துடன் கைது செய்யப்படவில்லை. மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாது மதுரையில் வெற்றிகரமாகக் கூட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா.
மதுரையில் ஜெயலலிதா நடத்தும் கூட்டத்தில் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது. ஏதாவது அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமல்லாது அழகிரிக்கும் அவப் பெயர் ஏற்பட்டு விடும் என்பதை தமிழக அரசு உணர்ந்திருந்தது. ஆகையினால் சிறு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லை.
அழகிரியின் கோட்டையை அதிர வைத்து விட்டார் ஜெயலலிதா. கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் கூடிய கூட்டத்தை விட அதிகளவான மக்கள் மதுரையில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படி ஒரு பெருங் கூட்டம் மதுரையில் கூடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மதுரையில் கூடிய மக்கள் வெள்ளம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் திருப்புமுனையாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்கத் தயங்கிய கட்சிகள் சிந்திக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது.
அழகிரியின் கோட்டையில் தனது செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்று களமிறங்கிய ஜெயலலிதா அதில் வெற்றி பெற்று விட்டார். மதுரையின் மூலை முடுக்கு எங்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. ஏட்டிக்குப் போட்டியான சுவரொட்டி யுத்தம் ஜெயலலிதாவின் மதுரை விஜயத்துடன் முடிவுக்கு வந்தது. மதுரையில் கூடிய கூட்டம் ஜெயலலிதாவுக்குப் புதுத் தெம்பை அளித்துள்ளது. ஜெயலலிதாவைக் காணத் திரண்ட மக்கள் வெள்ளம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஜெயலலிதா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அதிகமானோர் வெளிமாவட்டங்களில் இருந்து மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். ஜெயலலிதாவின் கட்டளைக்குப் பணிந்து இவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதாவுக்கும் அது பெரிய ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வழங்கிய பேட்டியிலிருந்தும் எம்.ஜி. ஆரின் விசுவாசிகள் இன்னமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதை உணரக்கூடியதாக உள்ளது.
இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போதும் இப்படித்தான் ஜெயலலிதாவின் பின்னால் மக்கள் வெள்ளம் திரண்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் நேர்மாறாக இருந்தன. நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஜெயலலிதா பெறவில்லை. ஜெயலலிதாவை நம்பி பின்னால் சென்ற வைகோ, ராமதாஸ் ஆகியோரும் இடதுசாரிக் கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்தன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் வியூகத்தை உடைப்பதற்கும் காங்கிரஸ் கட்சியை அடிபணிய வைக்கவும் உரிய வியூகங்களை இப்பொழுதே ஆரம்பித்து விட்டார் முதல்வர் கருணாநிதி. சோனியாகாந்தியின் திருச்சி உரை முதல்வர் கருணாநிதியைச் சிந்திக்கத் தூண்டி உள்ளது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதிக அக்கறை காட்டுகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் விருப்பம். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்துக்கும் ராகுல் காந்தியின் ஆசைக்கும் சோனியா காந்தி ஒப்புதலளிக்கவில்லை. திருச்சியில் சோனியா காந்தி ஆற்றிய உரை அவர்களின் விருப்பத்துக்கு சாதகமான சமிஞ்ஞையை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும் அல்லது ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோஷத்துக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்குத் தமிழக அரசியலில் பங்கு கொடுத்து அவர்களை அமைச்சர்களாக்குவதற்கு முதல்வர் கருணாநிதி விரும்ப மாட்டார். ஆகையினால் ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பம்.
விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியில் பங்கு பெறலாம். சுழற்சி முறையில் முதல்வராகலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது.
ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்காது என்பது விஜயகாந்துக்கு நன்கு தெரியும்.
விஜயகாந்தும் காங்கிரஸும் இணைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்த முதல்வர் கருணாநிதி புதிய கூட்டணிக்கான அத்திபாரத்தை இப்பொழுதே ஆரம்பித்து விட்டார். நம்ப வைத்து கழுத்தறுத்த கருணாநிதியும் அரசியல் வியாபாரி ராமதாஸும் சந்தித்துள்ளார்கள். தனது மகனுக்கு ராஜ்யசபை உறுப்பினர் பதவி தரவில்லை என்பதனால் நம்ப வைத்து கழுத்தறுத்த கருணாநிதி என்று ராமதாஸ் விமர்சித்தார். அதனைப் பொறுக்க மாட்டாத துரைமுருகன் அரசியல் வியாபாரி ராமதாஸைச் சாடினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி கலந்துரையாட தமிழக முதல்வரைச் சந்திப்பதற்கு ராமதாஸ் அனுமதி கேட்டார். உடனே அனுமதி கிடைத்துவிட்டது. தமிழகத் தேர்தல் கூட்டணிக்கான புதிய ஆரம்பமாகவே இதனைக் கருதலாம். ஜெயலலிதாவின் முதலாவது தெரிவு காங்கிரஸ், இரண்டாவது தெரிவு விஜயகாந்த், மூன்றாவது இடத்தில் ராமதாஸ் உள்ளார். தனது நிலை என்ன என்பதை உணர்ந்து கொண்ட ராமதாஸ் தமிழக முதல்வரின் பக்கத்துக்குச் சாய்ந்து விட்டார்.
காங்கிரஸும் விஜயகாந்தும் கூட்டணி சேர்ந்தால் ஜெயலலிதா பலவீனமாகிவிடுவார். வெற்றி வாய்ப்பு இல்லாத ஜெயலலிதாவுடன் இருக்கும் இடதுசாரிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவி விடுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கணக்குப் போட்டுள்ளார்.
சூரன்.எ.ரவிவர்மா.
வீரகேசரிவாரவெளியீடு 24/10/10

3 comments:

raja said...

பல முறை தாங்கள் அரசியல் கட்டுரையை பிளாக்கில் எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். இப்பொழுது மீண்டும் எழுதியிருக்கிறீர்கள். கட்டுரை அருமையாக வந்திருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கிறேன். நன்றி க.இராஜா.

வர்மா said...

raja said...
பல முறை தாங்கள் அரசியல் கட்டுரையை பிளாக்கில் எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். இப்பொழுது மீண்டும் எழுதியிருக்கிறீர்கள். கட்டுரை அருமையாக வந்திருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கிறேன். நன்றி க.இராஜா.

அலுவலக வேலை அதிகமானதால் உடனடியாக பதிவிடமுடியவில்லை. தாமதத்துக்கு மன்னிக்கவும்
அன்புடன்
வர்மா

பொற்கோ said...

அண்ணே! மதுரையில ஒரு கழுத முச்சந்தியில நின்னு கத்துனா கூட தான் பெருங்கூட்டம் கூடும். இதெல்லாம் ஒரு கூட்டமா அண்ணே!இதெல்லாம் வெத்துக்கூட்டம் தேர்தல்ல வரணும் இந்த கூட்டம் இந்த அம்மா கூட்டத்த பார்த்து ஏமாறுற பார்ட்டி!