Sunday, April 24, 2011

தலைவர்களை அடக்கி வைத்ததேர்தல் ஆணையம்

தமிழக சட்ட மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழக அரசையும் அரசியல்வாதிகளையும் ஆட்டிப் படைத்த தேர்தல் ஆணையம் தற்போது தனது பிடியைத் தளர்த்தியுள்ளது. புதிய திட்டங்கள் ஆரம்பிப்பது, இடமாற்றம், பதவி உயர்வு, ஊக்கத் தொகை வழக்குகள் அனைத்தையும் தேர்தல் முடிவு வெளியிடப்படும் வரை நடைமுறைப்படுத்தத் தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் சில ஆவணங்களைப் பார்வையிடுவதற்கும் தேர்தல் ஆணையாளரின் அனுமதி கோர வேண்டும். அவர் அனுமதியைக் கொடுத்தால்தான் முதல்வர் சில ஆவணங்களைப் பார்வையிட முடியும்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் கிரிக்கெட் அணியில் உள்ள தமிழக வீரர் அஸ்வினுக்கும் தமிழக அரசின் சார்பில் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். தேர்தல் நடைபெற்றதால் அப்பரிசுத் தொகையை வழங்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்வது தேர்தல் ஆணையாளரா? என்று பொறுப்புடன் முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தையே தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தது தேர்தல் ஆணையம். தமிழக பொலிஸ் ஆணையாளர் வத்திகாசரன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். தமிழக உளவுத் துறைத் தலைவர் ஜபாட் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். வேறு மாநிலத்தில் வேலையைப் பொறுபேற்காத ஜபாட் விடுமுறையில் சென்று விட்டார். தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை தமிழக அரசுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அனைவரும் தமிழக உதவித் தேர்தல் ஆணையாளரைக் கடுமையாகச் சாடினார்கள். தமிழக உதவித் தேர்தல் ஆணையாளர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள். இவை எதையும் கவனத்தில் எடுக்காத தேர்தல் ஆணைய அலுவலர்கள் துணிச்சலுடன் செயற்பட்டு இலஞ்சம் கொடுக்க முயன்றவர்களைக் கைது செய்ததுடன் கோடிக்கணக்கான பணத்தையும் கைப்பற்றினர். தேர்தல் ஆணையகத்தின் முன் தமிழக அரசியல்வாதிகள் பலரும் பெட்டிப் பாம்பாக அடங்கி ஒடுங்கினர். தேர்தலில் வாக்களித்த பின்னர் கருத்துக் கூறிய வடிவேல், கட்சியின் பெயரைக் கூறலாமா? என்று பத்திரிகையாளர்களைக் கேட்ட பின் தான் கட்சியின் பெயரைக் கூறினார்.
தமிழகத் தேர்தல் முடிவுக்காக ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏப்ரல் 13 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. மே மாதம் 13 ஆம் திகதி தன் முடிவுகள் வெளியாகும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த ஒரு மாத இடைவெளி புதியது. அஸாம் மாநிலத்தில் நடந்த சட்ட சபைத் தேர்தலின் பின்னர் முடிவை அறிய ஒரு மாதம் காத்திருந்தனர்.
தேர்தல் முடிவு தாமதமாக வெளியாவது ஆட்சி செய்யப் போகும் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாது என்று தேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மே மாதம் 13ஆம் திகதி தேர்தல் முடிவு வெளியாகிறது. மே மாதம் 17 ஆம் திகதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இடைப்பட்ட நான்கு நாட்களுக்குள் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை அமைக்க வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்றால் எதுவித பிரச்சினையும் இன்றி ஆட்சி அமைக்கலாம். அறுதிப் பெரும்பான்மை பெறக் கூடிய சந்தர்ப்பம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை.
வெற்றி பெற்றவர்கள் தேர்தல் ஆணையத்திடம் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். ஆட்சி அமைக்கப் போகும் கட்சி கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தற்காலிக சபாநாயகர் தெரிவு செய்யப்பட வேண்டும். வெற்றி பெற்றவர்கள் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். அமைச்சரவை அறிவிக்கப்பட வேண்டும் இவை எல்லாம் நான்கு நாட்களில் நடைபெற்றாக வேண்டும்.
தொகுதிப் பங்கீட்டின் போதே திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தொல்லை கொடுத்த பங்காளிக் கட்சிகள் ஐந்து வருடம் ஆட்சி செய்யும் சந்தர்ப்பத்தை இலகுவில் விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டா என்பது வெளிப்படையானது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தால் ஆட்சியில் பங்குபற்றப் போவதில்லை என்று விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கப் போவதாக டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் அறிவித்துள்ளனர். விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரால் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எதுவிதப் பிரச்சினைகளும் ஏற்பட மாட்டாது. மற்றைய கட்சிகள் கொடுக்கப் போகும் தொல்லை தான் தேர்தல் முடிவின் பின் தான் தெரிய வரும்.
தமிழக சட்ட சபைக்கு தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காங்கிரஸ் கட்சி அதிக தொல்லை கொடுக்காது. வேட்பாளர் தேர்தலின் போது கட்சிக்குள்ளேயே பெரிய போர் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் கையே தேர்தல் வேட்பாளர் தெரிவின் போது ஓங்கி இருந்தது. தங்கபாலுவுக்கு எதிராகவே போட்டி வேட்பாளர் போட்டியிட்டார். இதேபோல் பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். போட்டி வேட்பாளர்களினாலேயே காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு24/04//11

No comments: