Wednesday, June 1, 2011

தடுமாறுகிறது தி.மு.கதயங்குகிறது காங்கிரஸ்

தமிழக சட்ட சபைத் தேர்தலில் படுதோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பம் இன்றித் தவிக்கிறது. தோல்வியில் துவண்டு விடாது வீறு கொண்டு எழுந்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஸ்பெக்ரம் விவகாரம் கட்டிப் போட்டுள்ளது. தேர்தல் தோல்வி தந்த அதிர்ச்சி தெளிவதற்கிடையில் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டது கருணாநிதியை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்பெக்ரம் ஊழல் விவகாரம் கிளறப்பட்டபோது இப்படிப் பூதாகரமாக எழுந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை சங்கடத்தில் ஆழ்த்தும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. உரிமைகளுக்கும் விடுதலைக்கும் போராட்டம் நடத்தி சிறை சென்ற தலைவரின் மகள் ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டதால் திராவிட முன்னேற்றக் கழகம் தலை குனிந்து நிற்கிறது. சி. பி. ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டதும் கருணாநிதியின் குடும்பத்தவர்கள் டில்லிக்கு விரைந்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி படுதோல்வி அடைந்த பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவில் மேலும் விரிசல் விழுந்துள்ளது. ஸ்பெக்ரம், விலைவாசி, மின் வெட்டு, திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களின் அடாவடி, குடும்ப அரசியல் என்பன தேர்தல் தோல்விக்குப் பிரதான காரணம் என திரõவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணிதான் தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிரதான காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர். ஜெயலலிதாவுடன் அல்லது விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என் றும் அவர்கள் நம்புகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸும் இணைந்து ஆராயவில்லை. இந்தத் தோல்வியிலிருந்து மீளுவதற்கான வழிவகையைக் கண்டறிய இரண்டு கட்சிகளும் விரும்பவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது மத்திய அரசின் ஒப்புதல் இன்றி சில சம்பவங்கள் நடந்திராது என்று திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது. தமது தோல்விக்கு காங்கிரஸும் ஒரு காரணம் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் உணர்ந்துள்ளது. ஆனால் அதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. சிறையில் உள்ள கனிமொழியைப் பார்ப்பதற்காக டில்லிக்கு சென்ற கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க மாட்டேன் என்று அறிவித்ததன் மூலம் தனது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் டில்லியில் இல்லாத வேளையிலேயே தான், கருணாநிதி டில்லிக்குச் சென்றுள்ளார். சோனியாகாந்தி டில்லியில் இருந்தாலும் அவரைச் சந்திப்பதற்கு தான் விரும்பவில்லை என்பதை கருணாநிதி வெளிப்படையாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் அரசின் இரண்டாவது ஆண்டு விழாவில் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை. ஒப்புக்காக டி.ஆர். பாலு மட்டும் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயற்பட திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் பிரமாண்டமான வெற்றியை பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர் மரியம் விபத்தில் மரணமானதால் முதல்வர் ஜெயலலிதா மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். தமிழக சட்ட சபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்வதற்குரிய ஏற்பாடு எல்லாம் செய்யப்பட்டு சந்தோஷமாக இருந்த வேளையில் வெளிவந்த அமைச்சரின் மரணச் செய்தி சகுனத்தை நம்பும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்பதை விசாரிப்பதற்கு சி. பி. ஐ. விசாரணை தேவை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகளை சி. பி. ஐ. வசம் ஜெயலலிதா ஒப்படைப்பார் என்று வெளியான தகவல்களை இது உறுதிப்படுத்துகிறது.
தமிழக ஆட்சி மாறியதும், உடனடியாகவே தலைமைச் செயலக அதிகாரிகளும், பொலிஸ் அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். கடந்த ஆட்சிக் காலத்தில் பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள் பொறுப்புகள் எதுவும் இல்லாத பதவிக்கு நியமிக்கப்பட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தால் ஓரம் கட்டப்பட்டவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. திரõவிட முன்னேற்றக் கழகம் அறிமுகப்படுத்திய நல்ல திட்டங்களை தொடர்வதற்கு ஜெயலலிதா விரும்புகிறார். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எம். ஜி. ஆர். காப்பீட்டுத் திட்டமாக மாற்றம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை வேறொரு காப்பீட்டு நிறுவனத்திடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்ட சபைத் தேர்தலின் தோல்வி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அதிர்ச்சி யளித்துள்ள அதேவேளை சோனியா காந்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தமை பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை காங்கிரஸ் நெருங்குவதற்கு இந்த வாழ்த்து ஒரு சந்தர்ப்பம் எனக் கருதப்படுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் டில்லி விஜயத்தின் பின்னர் இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும்.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்ற சந்தோஷத்தில் பெண் ஒருவர் தனது நாக்கை வெட்டிக் காணிக்கை செலுத்தினார்.
அப்பெண்ணின் சத்திர சிகிச்சைக்கு உதவி செய்து பண உதவியும் வழங்கிய ஜெயலலிதா அப்பெண்ணுக்கு அரச உத்தியோகம் வழங்கியதை நடுநிலையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
முதல்வராகப் பதவி ஏற்றதும் அதிரடியாகப் பல மாற்றங்களை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள் ளது.


வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு26/05//11

No comments: