Sunday, December 4, 2011

மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள்

போர்க்கால துன்பங்களிலும் துயரங்களிலும் சிக்கி அவஸ்தைப் பட்ட மக்களின் குரலாக வெளிவந்துள்ளது ""மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள்'' என்ற கவிதைத் தொகுதி இன்று வெளியாகும். கவிதைகளில் அதிகமானவை காதலுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. வெ.துஷ்யந்தன் என்ற இந்த இளைஞனின் கவிதைத் தொகுப்பில் சராசரி இளைஞனுக்கு உள்ள காதல் கவிதைகளைக் காண முடியவில்லை. மனித வாழ்வின் அவலங்களையும் இயலாமையையும் நறுக்குத் தெறித்தாற் போல் வெளிப்படுத்துகிறார்.
எங்கிருந்தோ வந்தால் என்ற முதலாவது கவிதையைப் படிக்கும்போது இவன் காதலில் விழுந்த கவிஞன் என்ற உணர்வு ஏற்படுகிறது. இறுதியிலே தான் காதலிப்பது கவிமகள், கவி மங்கை என்று கவிதை மீதான தன் காதலை வெளிப்படுத்துகிறார்.
மௌன தேவதை
எல்லோர் இதயங்களிலும்
நிரந்தரவாசியாயிருக்கிறாள்
என்ற வரிகளின் மூலம் மக்கள் மௌனமாக இருக்கும் காரணத்தைப் புலப்படுத்துகிறார். மக்கள் எதற்காக மௌனமாக இருக்கிறார்கள் என்பதையும் மௌனமாகவே புரிய வைக்கிறார்.
வேலை இல்லாது இருக்கும் இளைஞனிடம் வேண்டுமென்றே என்ன செய்கிறாய் எனச் சிலர் கேட்பார்கள். சும்மா இருக்கிறேன் என்ற சொல் இளைஞனின் மனதில் கீறும் ரணங்களை,
""சும்மா'' என்னும் வார்த்தையன்றோ
சுமைகளின் இருப்புகள் எம்
இமைகளின் வழியே நீர் சொரியும்
சும்மா இருத்தல் கூட
ஒரு வகையில்
அணு அணுவாய்
மனதைக் கீறிடும்
சுகம் தரும் சுமைதான்
எனக் கூறுகிறார்.
புதிய கோணத்தில் சிந்தித்து கவிதைகளைப் படைக்கும் இவர் கவிதைக்கான கருக்கள்
என்னிடம் ஏதும் இல்லை என்கிறார்.
முகாரியை மாத்திரம் மீட்டித் திரிந்த
எம் இதய வீணைகளில் எதற்காக
பூ பாளத்தை மீட்ட முனைவதாக
பாசாங்கு செய்து கொள்கிறீர்கள்?
நொந்து போன எங்கள் இதயங்கள்
நொந்ததாகவே இருக்கட்டும்
இந்த மண்ணில் ஆழப் புதைந்து
கிடப்பவை பிணங்கள் மட்டுமல்ல
எங்கள் கனவுகளும்தான்
பிணங்களை மட்டுமே இந்த மண் கண்டதாய் கனவு கண்டு கொள்ளாதீர்
எத்தனையோ நடைப் பிணங்களையும்
இந்த மண் தன்னில் அலைய விட்டு
அழகு பார்த்துக் கொள்கிறது
என்ற கவி வரிகள் இந்த மண்ணின் துன்ப துயரங்களை பட்டியலிடுகின்றன.
எம் சான்றாதார
வாதங்கள் எல்லாம்
""பூதங்களிடம்'' தோற்றுப் போகின்றன
இப்படியே கழிந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு இராக்களும்
எங்களுக்காக மட்டும்
""அச்சப் பிராந்திய இரவுகளாக''
பிரகடனப்படுத்தப்படுகிறதோ?
என்ற வரிகள் எம் மூதாதையரின் வரலாற்றையும் ஆக்கிரமிப்பையும் வெளிப்படுத்துகின்ற அதேவேளை அச்சப்படுத்திய பூதங்களையும் ஞாபக மூட்டுகின்றன.
மீளும் நினைவுகள் 2 என்ற கவிதையின் மூலம் தனது கிராமத்தை மனதில் பதியவிட்டுள்ளார். முத்தான தலைப்புகளில் உள்ள 36 கவிதைகளும் மனதில் ஆழமாகப் பதியும் வகையில் புனையப்பட்டுள்ளன. சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமான கவிதைகள் இத் தொகுதியில் அடக்கப்பட்டுள்ளன. கவிதைகள் பிரசுரமான ஆண்டைக் குறிப்பிட்டிருந்தால் கவிதைகளின் பின்புலத் தையும் அவரின் வளர்ச்சியையும் அறியக் கூடியதாக இருந்திருக்கும்.
இன்றைய இளம் எழுத்தாளர்களில் பலர் தமது ஆளுமை, திறமை, அனுபவம், அறிவு என்ற வட்டத்துக்கு வெளியே நின்று சிந்திக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவராகவே வெ.துஷ்யந்தனும் மிளிர்கிறார்.
நூல்: மொழி பெயர்க்கப்படாத
மௌனங்கள்
(கவிதைத் தொகுதி)
ஆசிரியர்: வெற்றிவேல் துஷ்யந்தன்
வெளியீடு: ஜீவநதி, கலை அகம்
அல்வாய்
விலை ரூபா: 200/=
ரமணி
வீரகேசரிவாரவெளியீடு27/11/11

No comments: