Monday, December 5, 2011

தேர்தலுக்குத் தயாராகிறார் வைகோகை கொடுக்குமா சங்கரன் கோவில்?

தமிழகத்தின் முன்னாள் முதல்வரின் பார்வை திஹார் சிறையை நோக்கியே இருந்தது. ஸ்பெக்ரம் விவகாத்தில் சி.பி. ஐ.யினால் கைது செய்யப்பட்ட கனிமொழி பிணையில் விடுதலையாவது சிக்கலாக இருந்தது. கனிமொழி பிணை கோரி சமர்ப்பித்த நான்கு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. சிறையில் வாழ்வதற்குத் தன்னைப் பழக்கப்படுத்தினார் கனிமொழி. சிறைக்குச் செல்வது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு புதியதல்ல. ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழி கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்ததை திராவிட முன்னேற்றக் கழகத்தினால் ஜீரணிக்க முடியாதுள்ளது. கனிமொழி பிணையில் வந்தது கருணாநிதிக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
கனிமொழி சிறையில் இருந்ததனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகளைத் தீவிரமாகக் கவனிக்க முடியாத நிலையில் தவித்தார் கருணாநிதி. தமிழக அரசின் கெடுபிடிகளினால் வாக்களித்த மக்கள் கலங்கிப் போயுள்ளனர். எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய விஜயகாந்த் அடக்கி வாசித்தார். தற்பொழுது தான் ஜெயலலிதாவுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார். கருணாநிதியை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்த விஜயகாந்த், ஜெயலலிதா முதல்வரானதும் என்ன செய்வார் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டார். தமிழக மக்கள் படும் துன்பங்களுக்கு விஜயகாந்தும் ஒரு காரணம் தனது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்தார் விஜயகாந்த். அவர் எதிர்பார்த்தது போன்றே கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதேவேளை யாருமே எதிர்பார்க்காத வகையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியையும் மக்கள் அவருக்கு வழங்கினார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் செய்த தவறுகளினால் தான் கருணாநிதி முதல்வர் பதவியை இழந்தார்.
எதிர்க்கட்சி என்ற அங்கீகாரமும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லாமல் போனது. ஜெயலலிதா ஆட்சி பீடம் ஏறியதும் தவறுக்கு மேல் தவறு செய்யத் தொடங்கினார். உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வதற்கு விரும்பிய விஜயகாந்த் தமிழக அரசின் தவறுகளைத் தட்டிக் கேட்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்ட விஜயகாந்த் தமிழக அரசின் தவறுகளைப் பட்டியலிடத் தொடங்கிவிட்டார். விஜயகாந்தின் காலம் கடந்த ஞானத்தினால் ஆகப் போவது ஒன்றுமில்லை. விஜயகாந்தின் பேச்சுக்கு ஆதரவாளர்கள் கை தட்டுவார்கள். அதனால் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராகக் களமிறங்க வைகோ தயாராகி வருகிறார். சங்கரன் கோவில் தொகுதி இடைத் தேர்தலில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடப் போகிறது. சங்கரன் கோவில் வைகோவின் சொந்தத் தொகுதி கருணாநிதியும் வைகோவும் ஓரணியில் இருந்தபோது சங்கரன் கோவில் தொகுதியை வைகோவின் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. அதனால் கோபித்துக் கொண்ட வைகோ திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவுடன் கைகோர்த்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவினால் அவமானப்படுத்தப்பட்ட வைகோவின் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வாக்குப் பெற்று தனது பலத்தை நிரூபித்தார் வைகோ.
சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் மரணமாகிவிட்டார். அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை. அங்கு தேர்தலை சந்திக்க ஜெயலலிதாவும் வைகோவும் தயாராகி வருகின்றனர். அரசின் இலவசத் திட்டங்கள் சங்கரன் கோவில் தொகுதியில் மிக மும்மூரமாக விநியோகம் செய்யப்படுகின்றன. இடைத் தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட்டங்களை வைகோ நடத்தி வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின்போது நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் நேரடியாகப் போட்டியிட்டால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். ஆகையினால் சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்போட்டியிடாது ஒதுங்கலாம் என்ற எதிர்பார்ப்புற உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலின்போது சங்கரன் கோவில் தொகுதியில் சில இடங்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முதலிடம் பிடித்தது. சில இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தையே பிடித்தது. ஆகையினால் செல்வாக்கு இல்லாத சங்கரன் கோவில் தொகுதியில் இருந்து ஒதுங்கி ஜெயலலிதாவுக்கு கருணாநிதி நெருக்கடி கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விஜயகாந்த், இடதுசாரிகள் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரும் இதே நிலைப்பாட்டை எடுத்தால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி பிரகாசமானதாகி விடும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு04/12//11

No comments: