Tuesday, May 29, 2012

திக்குத்தெரியாத...



  கொழும்பிலிருந்துபுறப்பட்ட இரவுநேரப்புகையிரதம் நான்குமணித்தியாலம் தாமதமாக கண்டிபுகையிரதநிலையத்தைச்சென்றடைந்தது. கண்டிபுகையிரதநிலையம் அன்றுவழமைக்குமாறாக இருந்தது. பயணிகளைவிட அதிகளவி இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிந்திருந்தனர்.
  நீண்டதூரம் பயணம் பயணம்செய்தபுகைவண்டி பெருமூச்சுடன் கண்டிபுகையிரதநிலையத்தில் நின்றதும் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு இறங்கினர்.
  புகைவண்டியின்வாசலின் நின்றபடி இருபக்கங்களும் நிதானமாகப்பார்த்தான் அவன். வழக்கத்துக்குமாறான இறுக்கமும் பாதுகாப்பும் அவன் மனதை உறுத்தியது. பின்னால் நின்ற அவசரப்பயணி அவன் முதுகைச்சுரண்டினான். முதுகில் சுரண்டியவனைப்பார்த்துவிட்டு புகைவண்டியை விட்டு இறங்கினான். அவ்னை விலத்திக்கொண்டு அவசரமாக இறங்கியவர்கள் வெளியேறும் இடத்தை நோக்கிச்சென்றனர்.
   புகையிரதத்துக்காகக் காத்து நின்றவர்களின் அடையாளாட்டைகளை சிலபொலிஸார் பார்த்தபடி கேள்விகளைக்கேட்டனர். சில பொலிஸாரும் இராணுவத்தினரும் பொதிகளைச்சோதித்தனர். மெதுவாக நடந்தபடி தொலைபேசியின்மூலம் யாருடனோகதைத்தான் அவன்.நடந்தபடியே மீண்டும் யாருடனோகதைத்தபடி தலையை இருபக்கமும் ஆட்டியபடி வெளியேறும் இடத்தை நோக்கிச்சென்றான் அவன். அவனது நடத்தைகள் அனைத்தையும் இரண்டுகண்கள் அவதானித்துக்கொண்டிருந்தன.
  புகயிரத்தைவிட்டு வெறியேறும் இடத்தில் நீண்டவரிசயில் பலர் நின்றனர்.அவனும் அந்தவரிசையுடன் சேர்ந்தான். அவனுக்குப்பின்னால் இன்னும் சிலர்சேர்ந்து அந்தவரிசையை நீளமாக்கினர்.  அவனது நடவடிக்கைகளைக்கவனித்துக்கொண்டிருந்தகண்களுக்குரியவன் அவனருகேசென்று அடையாள அட்டையைக்கேட்டான்.எனக்குமுன்னால் ஐந்துபேர் நிற்கிறார்கள். இவன் ஏன் இடையில் வந்து என்னிடம் அடையாள அட்டையைக்கேட்கிறான் என அவன் நினைத்தான். அவனிடம் அடையாள அட்டையக்கேட்டவர் புலனாய்வு அதிகாரி என்பதுஅவனுக்குத்தெரியாது.மிரட்டியபடி அடையாள அட்டையைக்காட்டும்படி அதிகாரி கேட்டார்.  அவன் தனது அடையாள அட்டையைக்க்கொடுத்தான். அடையள அட்டையில் உள்ளபடம் அவனதுமுகத்தை ஒத்திருக்கிறதா என்று பார்க்காது மறுபக்கத்தைப்பார்த்தார் அந்த அதிகாரி. அங்கே தமிழ் எழுத்து இருந்தது. வரிசையைவிட்டு வெளிய வரும்படி கூறினார் அந்த அதிகாரி.
  வரிசையில்நின்றவர்களிடயே சலசலப்பு ஏற்பட்டது.புகையிரதமேடையில் நின்றவர்களவனை வினோதமாகப்பார்த்தனர். அவனதுதோளிலிருந்த பாக்கைவாங்கி ஒவ்வொருசிப்பாகத்த்டிறந்துபார்த்தார் அந்த அதிகாரி. மாற்று உடுப்புகளும் ஆங்கில நாவலும் அந்த பாக்கினுள் இருந்தன. அவனுடைய கையடக்கத்தொலைபேசியை வாங்கிய அந்தப்புலனாய்வு அதிகாரி அதிலிருந்த இலக்கங்களைப்பார்த்தார். திருப்தியாகத்தலையை ஆட்டியபடி தன்னுடன் வருமாறுகூறிவிட்டு முன்னேசென்றார்.
   என்னசெய்வதெனத்தெரியாது அவன் திகைத்து நிற்கையில் முதுகில் யாரோ சுரண்டினார்கள்.திரும்பிப்பார்த்தான். இரண்டு பொலிஸ்காரர்கள் நடக்கும்படி சைகை காட்டினார்கள்.எதுவும்பேசாமல் அந்தப்புலனாய்வு அதிகாரியைப்பின் தொடர்ந்தான் அவன்.அவனுக்குப்பாதுகாப்பாக இரண்டு பொலிஸ்காரர்கள் பின்தொடர்ந்தனர்.
புகையிரதநிலையத்துக்கு வெளியேநின்ற பஸ்சில் அவனை ஏற்றினார்கள்.அவன் உள்ளே நோட்டம்விட்டான்.பதினைந்துபேர் இருந்தார்கள். அவர்களில் மூவர் பெண்கள். அவனுக்காகவே காத்துக்கொண்டு நின்றதுபோன்று அவன் ஏறியதும் பஸ் புறப்பட்டது.       புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டபஸ் பொலிஸ்நிலையத்தினுள்ளேசென்றுநின்றது.எல்லோரையும் இறங்கச்சொன்னார்கள்.அவனும் இறங்கினான்.அவனுடையகால் கூசியது.முதன்முதலாக பொலிஸ்நிலையத்தினுள் கால்பதித்தான்.ரயில்நிலையத்தில் அவர்களைக்கைதுசெய்தஅதிகாரியின் பின்னால் வரிசையாகச்சென்றார்கள்.
  அந்த அதிகாரி அவனைத்தான் முதலில்தனதுஅறைக்கு அழைத்தார்.பெயர்.விலாசம் போன்ற விபரங்களை எழுதிவிட்டு மணிக்கூடு, மோதிரம், சப்பாத்து, பெல்ட் எல்லாவற்றையும் அருகே நின்றபொஸிடம் கொடுக்கச்சொன்னார். ஐந்துவருடங்களாக விரலிலிருந்துகழற்றாத அந்தமோதிரத்தைக்கவலையுடன் கழற்றிக்கொடுத்தான். அவனுக்கு மிகமிகத்தேவையான ஒரு ஜீவன் பிறந்தநாள்பரிசாகக்கொடுத்தமோதிரம் அது.
   அவனை ஒருகூட்டுக்குள்விட்டுப்பூட்டினார்கள்.ஆறுபேர் இருக்கக்கூடிய அக்கூட்டினுள்பத்தாவது ஆளாக அவன் தள்ளப்பட்டான்.குப்பென்று ஒருதுர்நாற்றம் அவன் மூக்கினுள் நுழைந்தது.அப்படி ஒரு மோசமான நாற்றத்தை அவன் வாழ்நாளில் அனுபவித்ததில்லை.   புதிய விருந்தாளியை எல்லோரும் ஆர்வத்துடன் பார்த்தார்கள்.ஒருவன் நீட்டி நிமிர்ந்து நல்ல நித்திரை.இன்னொருவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.அவனுக்குப்பக்கத்தில் இருந்தவன் பீடியை ரசித்துச்சுவைத்து புகையை வெளியே விட்டான்.அவனுக்குவயிற்றைக்குமட்டிக்கொண்டு வந்தது.   கண்களில் நீர் நிறைந்து அவனையுமறியாமல் கன்னத்தில் வடிந்தது. கம்பிகளின் வழியாகவெளியே பார்த்தான். அப்போது அவனது முதுகில் யாரோதட்டினார்கள்.பீடி குடித்தவன் ஒரு அசட்டுச்சிரிப்புடன் எங்கேபிடித்தார்கள் என சிங்களத்தில் கேட்டான். வெறுப்படைந்த அவன் பேசாமலிருந்தான். தமிழா எனக்கேட்டான்.ஆம் என்பதற்கு அடையாளமாகத்த்லையை மேலும் கீழும் ஆட்டினான்.
 "எங்கே பிடிச்சாங்க"
 "ரயில்வே ஸ்டேசன்லை"
  "என்ன செய்தாய்"
  "ஒண்டும் செய்லலை"
  "அப்ப ஏன் பிடிச்சாங்க?"
   "தெரியாது"
  "பொக்கற்றிலை காசு இருக்கா?"
  அவன் பொக்கற்றினுள் கையை விட்டு நூறு ரூபத்தாளை எடுத்தான்.அவசரமாகக்காசைப்பறித்த பீடிக்காரன் தனது பொக்கற்றினுள் திணித்தான்.
"யோசிக்க வேணாம்.விசாரிச்சுச்சு வுட்டுடுவாணுங்க கஞ்சாகேசில ஆறுமாசம் உள்ள இருந்தனான். வெளியவந்து ஒரு கொளமை தான் புடிச்சுட்டானுங்க.இனி ஆற் மாசமோ ஒரு வருசமோ தெரியாது. அந்திக்கு உன்னை விட்டுடுவானுங்க"நூறு ரூபா அவனை சினேகிதனாக்கியது.
 "பிரபுயாரு?"கூண்டுக்குவெளியே நின்ற பொலிஸ் சிங்களத்தில் கேட்டான்.
  நான் தான் பிரபு என அவன் சிங்களத்தில் கூறினான்.கதவைதிறந்து அவனை அழைத்துச்சென்றான்.ரயில் நிலையத்தில் அவனைக்கைதுசெய்த அதிகாரி கதிரையில் அவனை இருக்கச்சொன்னார்.இன்னும் சில அதிகாரிகளும் அந்த அறையினுள் இருந்தார்கள்.
  "என்ன பெயர்" அதிகாரி தமிழில் கேட்டார்.
  "பிரபு" என்றான்.
  "பிரபுவா? பிரபாவா?"
 அவர் கேட்டதும் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை பிரபுவுக்குச்சில்லிட்டது.
  "என்ன பதிலைக்காணம்?"
   பிரபா இல்லை. பிரபு என அவன் சிங்களத்தில் கூறினான்.
  "இங்க இருக்கிற எல்லாருக்கும் தமிழ் நல்லாத்தெரியும்.நீ சிங்களத்திலகதைச்சு கஸ்ரப்பட வேண்டாம்" என  அந்த அதிகாரி கூறினார்.
 "சொந்த இடம் எது?"
 "கண்டி"
 "கொழும்பில என்ன செய்யிறாய்"?
 "படிக்கிறன்"
"என்ன படிக்கிறாய்"?
 "ஏ.எல்"
 "இப்ப ஸ்கூல் லீவா?'
 "இல்லை"
 "அப்ப ஏன் இங்கை வந்தாய்?"
  அந்தக்கேள்விக்குப் பிரபுவால் பதில்கூற முடியவில்லை.
  "யாழ்ப்பாணத்திலை யாரைத்தெரியும்"?
   "யாரையும் தெரியாது"
  "உன்ரை போனிலை யாழ்ப்பாணநம்பர்கள் கனக்க கிடக்கு"?
  "பிரண்ட்ஸ்"
  "யாரையும்தெரியாதெண்டா எப்பிடி பிரண்ட்ஸ்"?
   "கொம்பியூட்டர் கிளாஸ்ல படிக்குற பிரண்ட்ஸ்"
  அன்று வெளியான தமிழ்ப்பத்திரிகை ஒன்றைப்பிரபுவிடம் கொடுத்து "இதைப்படிடா" என்றார் அந்த அதிகாரி.அப்போதுதான் அவர்கள் தன்னை ஏன் கைது செய்தார்கள் என்ற உண்மை அவனுக்குத்தெரியவந்தது.கொழும்பிலே குண்டு வெடித்த இரவுதான் அவன் ரயில் ஏறியது அவனுக்கு ஞாபகம் வந்தது.
  கொழும்பில் குண்டுவெடிப்பு ஐந்துபேர்பலி.பதினைந்திபேர் படுகாயம் என்ற பெரிய எழுத்துக்களுடன் கொழும்பில் நடந்த குண்டு வெடிப்புப்பற்றிய படங்களும் செய்தியும் அந்தத்தமிழ்ப்பத்திரிகையின் முன்பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது.
 "படியடா" என்று அந்த அதிகாரி கோபத்துடன் கூறினார்.தலையை இடமும்  வலமுமாக அசைத்து முடியாது என்றான் அவன்.
  "படிக்கச்சொல்லுறன். ஏலாதுன்னுந்தலையை ஆட்டிறாய்" எனக்கோபத்துடன் கூறிய அதிகாரி பிரபுவின் முகத்தில் ஓங்கி அடித்தார். சுருண்டுவிழுந்த பிரபுவின் மூக்கால் இரத்தம் வடிந்தது.
  மிகவும் ஆத்திரத்துடன்பிரபுவின் சேட்டைப்பிடித்து உலுக்கிய அந்த அதிகாரி தமிழ்ப்பேப்பரை அவன் முகத்துக்கு முன்னால் பிடித்து "படிக்கபோறியா இல்லையா?" என்று கேட்டார்.
 இரத்தத்தையும் கண்ணீரயும் துடைத்தபடி வார்த்தையை வெளியிடத்தயங்கிய பிரபு தன்னால் படிக்கமுடியாதென இடமும் வலமுமாகத்தலையை அசைத்தான். அந்த அதிகாரி பிரபுவின் முகத்தில் ஓங்கிக்குத்தினார்.அவன் வாயிலிருந்து இரத்தம் வடிந்தது.
  "நான் படிக்கிறது சிங்கள மீடியம்" என்று தட்டுத்தடுமாறியபடி சிங்களத்தில் சொன்னான் பிரபு. அவனை அடிக்கக் கையை ஓங்கிய அதிகாரி திகைத்துப்போய்நின்றார்.

சூரன்.ஏ.ரவிவர்மா
ஞானம்  வைகாசி 2007

No comments: