Thursday, May 3, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 31

கணவனின் விருப்பத்துக்காக மது அருந்தி விருந்துகளில் ஆடிப்பாடி மகிழும் சீரழிவை வெளிப்படுத்திய படம் தான் 1972ஆம் ஆண்டு வெளியான அவள் திரைப்படம். வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற குறிப்புடன் வெளியான இப்படத்திற்கு பலத்த விமர்சனங்கள் எழுந்த போதும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.வெண்ணிற ஆடை நிர்மலாவைக் கற்பழிக்கத் துரத்துகிறார் ஸ்ரீகாந்த். மூக்கு முட்டக் குடித்து விட்டு மனைவியின் அபயக்குரலுக்கு உதவ முடியாத நிலையில் கிடக்கிறார். அப்போது குளோசப்பில் தெரியும் துப்பாக்கியிலிருந்து புறப்படும் தோட்டா ஸ்ரீகாந்தின் உயிரைக் குடிக்கிறது. ஸ்ரீகாந்தைச் சுட்டுக்கொலை செய்தது யார் என்ற பரபரப்புடன் படம் ஆரம்பமாகிறது.
சசிகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் ஸ்ரீகாந்தினால் சசிகுமாரின் வாழ்க்கை திசை மாறுகிறது. எந்தவிதமான தீய பழக்கமும் இல்லாத சசிகுமாருக்கு மதுப்பழக்கத்தை அறிமுகப்படுத்துகிறார் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்தின் விருப்பத்துக்காக வேண்டா வெறுப்பாக மது அருந்திய சசிகுமார் இறுதியில் மதுவுக்கு அடிமையாகிறார்.
விருந்துகளில் மது அருந்தி வந்த சசிகுமார் வீட்டிலும் மது அருந்த ஆரம்பித்து வருகிறார். தனக்குத் துணையாகக் குடிப்பதற்கு ஸ்ரீகாந்தின் வீட்டிற்கு அழைக்கிறார். மனைவி வெண்ணிற ஆடை நிர்மலாவையும் வற்புறுத்திக் குடிக்க வைக்கிறார். சசிகுமாரின் விருப்பத்துக்காக குடிக்க ஆரம்பித்த வெண்ணிற ஆடை நிர்மலாவும் குடிக்கு அடிமையாகிறார். விருந்துகளுக்குச் செல்லும் சசிகுமார் மனைவி நிர்மலாவையும் நண்பன் ஸ்ரீகாந்தையும் அழைத்துச் செல்கிறார். விருந்துக்குச் செல்லும் வெண்ணிற ஆடை நிர்மலா குடித்து விட்டு ஆடிப்பாடுவார் சசிகுமார் மற்றவர்களுடன் சேர்ந்து பார்த்து ரசிப்பார்.
ஸ்ரீகாந்தை தனது உற்ற நண்பனாக நம்புகிறார் சசிகுமார். ஸ்ரீகாந்தின் காமக்கண்கள் வெண்ணிற ஆடை நிர்மலாவின் உடம்பை மேயத் தொடங்குகிறது. வெண்ணிற ஆடை நிர்மலாவை அனுபவிக்க வேண்டும் என்ற காமத் தீ ஸ்ரீகாந்தின் மனதில் கொளுந்து விட்டுஎரியத் தொடங்கியது. ஸ்ரீகாந்த் எதிர்பார்த்த அந்த சந்தர்ப்பம் ஒருநாள் கிட்டியது. அளவுக்குமிஞ்சிய மது அருந்திய சசிகுமார் மதுபோதையில் வீழ்ந்து கிடக்கிறார். அப்போது தன் ஆசையைத் தீர்ப்பதற்காக வெண்ணிற ஆடை நிர்மலாவை நெருங்குகிறான் ஸ்ரீகாந்த். மது அருந்தினாலும் மானமிழக்க விரும்பாத வெண்ணிற ஆடை நிர்மலா ஸ்ரீகாந்திடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாள். அப்போதுதான் அந்தத் துப்பாக்கி ஸ்ரீகாந்தை சுட்டுத்தள்ளுகிறது.
சசிகுமார் வெண்ணிற ஆடை நிர்மலா, ஸ்ரீ காந்த் ,டி.கே.பசுபதி சந்திரபாபு, மனோரம்மா, விஜயமாலா , வீரசாமி ஆகியோருடன் திருப்பு முனையான கதாபாத்திரத்தில் ஏ.வி.எம். ராஜன் நடித்தார். சசிகுமாரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இப்படம் வெளியான சில நாட்களில் தீ விபத்தில் சசிகுமாரும் மனைவியும் மரணமானார்கள் வளர்ந்து வந்த சிறந்த நடிகரைத் திரை உலகம் இழந்து விட்டது.
வெண்ணிற ஆடை நிர்மலா பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்தார். அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன் என்ற பாடலும் வெண்ணிற ஆடை நிர்மலாவின் நடிப்பும் இன்னமும் மனதைவிட்டு நீங்கவில்லை. இப்படத்துக்குப் பின்னர் கற்பழிக்கும் வில்லனாக மாறிவிட்டார் ஸ்ரீகாந்த்.
தோரஹா என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகி பரபரப்புடன் வெற்றி பெற்ற படத்தை தமிழில் அவள் என்ற பெயரில் சுந்தர்லால் நஹாதா தயாரித்தார். சங்கர் கணேஷின் இசை படத்துக்கு மெருகூட்டியது. வசனம் ஏ.எல்.நாராயணன். இயக்கம் ஏ.சி.திருலோகசுந்தர்.
ரமணி
மித்திரன்06/05/12 

3 comments:

Anonymous said...

Hello Sir.,
I am continuously reading your Blog and all information about films r really good and amazing... Good to continue....

Anonymous said...
This comment has been removed by the author.
வர்மா said...

you are welcome
anpudan
varmaa