புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்வேளையில் மத்திய அரசில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயற்சிக்கிறார் ஜெயலலிதா. இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக் காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியும் தடுமாறிக் கொண்டிருக்கிறன. டில்லிக் கட்சிகளின் தடுமாற்றத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய ஜெயலலிதா ஜனாதிபதி வேட்பாளராக மக்களவையின் முன்னாள் சபாநாயர் சங்கமாவின் பெயரை முன்மெõழிந்துள்ளார்.
இந்தியப் பிரதமர், ஜனாதிபதி ஆகியோரைத் தெரிவு செய்யும் உரிமை வட மாநிலக் கட்சிகளின் ஏகபோக உரிமையாக இருக்கிறது. அந்த உரிமையில் அதிரடியாகத் தலையிட்டு தமிழகத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியை கொதிப்படைய வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி முன் நிறுத்திய ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றிக்கு கருணாநிதி பெரும் பங்காற்றினார். இந்தியாவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தன் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்று கருதுகிறார் ஜெயலலிதா.
இந்திய பிரதமரைத் தெரிவு செய்யும் இரண்டு சந்தர்ப்பங்கள் தமிழகத்துக்குக் கிடைத்தன. நேரு மறைந்தபோது இந்தியாவின் எதிர்காலம் பெருந் தலைவர் காமராஜனின் தலையில் சுமத்தப்பட்டது.
நேருவின் மகள் இந்திரா காந்தியைப் பிரதமராக்கி அழகுபார்த்தார் காமராஜர், அரசியல் மாற்றங்களின் பின்னர் இந்திரா காந்தி பெருந் தலைவர் காமராஜரைத் தூக்கி எறிந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய மூப்பனார், கருணாநிதியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டபோது அடுத்த பிரதமரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் தமிழகத்துக்கு கிடைத்தது.
பழங்குடி இனத்தவரான சங்மாவை ஜனாதிபதி வேட்பாளர் அறிவித்து நாடி பார்த்துள்ளார் ஜெயலலிதா. ஒடிஸா மாநில முதல்வரான நவீன் பட் நாயக் ஒருவர்தான் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். தேசிய கட்சிகளிலுள்ள பழங்குடி இனத் தலைவர்களிடமும் மாநிலக் கட்சித் தலைவர்களுடனும் தொடர்பு கொண்டு சங்மாவுக்கு ஆதரவு வழங்குமாறு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்வானி உள்ளிட்ட பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு சங்மாவுக்கு ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெயலலிதா. இடதுசாரித் தலைவர்களான பரதன், பிரகாஷ் காரக் ஆகியோரிடமும் சங்மாவுக்கு ஆதரவாக வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெயலலிதா. தமிழக சட்ட மன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியையும் மாக்ஸிஸ் கட்சியையும் புறந்தள்ளிய ஜெயலலிதா தனது காரியம் நடைபெற வேண்டும் என்பதற்காக வட மாநிலத்தில் உள்ள தலைவர்களிடம் சரணடைந்துள்ளார்.
இந்திய ஜனாதிபதித் தேர்தலில் சங்மாவை ஜெயலலிதா முன்னிறுத்தியதால் அவர் மீது மிகுந்த கடுப்பில் உள்ளது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் பரம எதிரிகளில் ஒருவர் சங்மா. சோனியா வெளிநாட்டுக் காரி என்று அவமானப்படுத்தியவர் சங்மா. ஆகையினால் சங்மாவை வீழ்த்துவதற்குரிய வியூகத்தை வகுக்கத் தயாராக உள்ளது காங்கிரஸ் கட்சி. தமிழக இடைத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் வேட்பாளரை அறிவிக்க முன்னர் தனது வேட்பாளரை அறிவித்து அதிர்ச்சியளித்தார் ஜெயலலிதா.
இந்திய ஜனாதிபத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் தமது வேட்பாளரை அறிவிக்க தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் சங்மாவை முன் மொழிந்து இந்திய அரசியலை தன்பால் ஈர்த்துள்ளார் ஜெயலலிதா.
இந்தியாவின் ஜனாதிபதியாகும் ஆசை சங்மாவிடம் உள்ளது. ஜெயலலிதா பற்ற வைத்த பொறியினால் கவரப்பட்ட சங்மா சோனியா காந்தியைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டார். சங்மாவைச் சந்திப்பதற்கு விரும்பாத சோனியா சந்திப்புக்கு மறுத்து விட்டார். சங்மாவைச் சந்திக்க சோனியா மறுத்ததினால் அவருடைய நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய ஜனாதிபதியாவதற்கு சங்கமா விரும்புகிறார். சோனியா இத்தாலியக்காரி, வெளிநாட்டுப் பெண் என்று தான் கூறிய தவறை உணர்ந்து அதற்காக மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறார். அரசியல் நிரந்தர எதிரியுமில்லை நிரந்தர நண்பனும் இல்லை என்ற கோட்பாட்டைக் காலம் கடந்து உணர்ந்துள்ளார் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்மா. கட்சித் தலைவரான தன்னை விட உயர்ந்த ஸ்தானத்துக்குச் சங்மா செல்வதை சரத் பவார் விரும்பமாட்டார். ஆகையினால் தேசியவாத காங்கிரஸ் கட்சியே சங்மாவுக்கு ஆதரவு வழங்கமாட்டாது.
இந்திய மத்திய அரசில் செல்வாக்குச் செலுத்துவதில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே பலத்த போட்டி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் செல்வாக்குடன் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை முறியடிப்பதற்காகவே சங்மா என்ற அஸ்திரத்தை ஏவியுள்ளார் ஜெயலலிதா. இந்திய அரசியலில் அதிகம் செல்வாக்குள்ள நரேந்திர மோடி, லல்லு பிரசாத் யாதவ், மம்தா பனர்ஜி, சரத் பவார், மாயாவதி போன்ற வட மாநிலத் தலைவர்கள் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு சாதகமான பதிலளிக்கமாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையிலான இந்திய ஜனாதிபதித் தேர்தல் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான பலப் பரீட்சையாக மாறியுள்ளது.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு27/05/12
No comments:
Post a Comment