Friday, September 7, 2012

மத்திய அரசைக் குறிவைத்துவியூகம் அமைக்கிறார் ஜெயலலிதா




இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஜெயலலிதா ஆரம்பித்துவிட்டார். சென்னையில் நடைபெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான உத்தரவை அதிரடியாக விடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்திடம் இழந்த ஆட்சியை மீண்டும் தட்டிப் பறித்தாலும் மத்திய அரசில் செல்வாக்கிழந்திருப்பதை ஜெயலலிதா விரும்பவில்லை. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை இழந்தாலும் மத்திய அரசில் கருணாநிதிக்கு இருக்கும் செல்வாக்கு அபரிமிதமானது. வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்த போது 13 மாதங்கள் மத்திய அரசில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பங்காளியாக இருந்தது. அதன் பின் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மாநிலத்திலும் மத்தியிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கோலோச்ச வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் கனவு.
தமிழகத்தில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவதன் மூலம் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் பேரம் பேசுவதையே ஜெயலலிதா விரும்புகிறார். தேசியக் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது. சகல கட்சிகளும் வாக்கு வங்கியை இழந்து மாநிலக் கட்சிகளின் தயவை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சில மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சிகளை மிரட்டும்படி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. மத்திய அரசை ஆட்டிப் படைக்கும் சக்தியைப் பெற வேண்டும் என்று ஜெயலலிதா விரும்புகிறார்.
எம்.ஜி.ஆரின் வெற்றியின் பின்னால் பெண்கள் இருந்தனர். கருணாநிதியும் பெண்களை நம்பியே தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்குப் பெண்கள்தான் காரணம் என்று ஸ்டாலின் புலம்பினார். பெண்கள் எனக்குப் பின்னால் இருப்பதை நன்கு உணர்ந்துகொண்ட ஜெயலலிதா, மாணவர்களின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். லப்டொப், சைக்கிள் என்பனவற்றை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி மாணவர்களின் வாக்கு வங்கியை உறுதி செய்துள்ளார்.
தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திட்டம் தீட்டியுள்ளார் ஜெயலலிதா. ஓ. பன்னீர்செல்வம், நந்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய அமைச்சர்கள் கொண்ட குழுவிடம் தமிழகத்தின் 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு செல்வாக்கு இல்லாத தொகுதி மக்களின் தேவைகளை இனம் கண்டு அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் குழுவுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார் ஜெயலலிதா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு மிகக் குறைவான தொகுதிகளையே ஜெயலலிதா ஒதுக்குவார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இன்று உள்ள கட்சிகள் பேரம் பேசும் நிலையை இழந்துள்ளன. இந்த நிலை தொடர வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் விருப்பம். தமிழகத்தின் 30 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று மத்திய அரசை ஆட்டிப் படைக்க வேண்டும் என்று ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும், கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதையும் இந்த நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு பரிசீலிக்கும். தமிழக சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்டச் செயலாளர்களும் இக்குழுவுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவதை நிறுத்த வேண்டும், கச்ச தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டு உலைகளிலும் உற்பத்தியாக உள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் தமிழக அரசுக்கே வழங்க வேண்டும், தமிழகத்துக்குத் தேவையான அளவு மண்ணெண்ணெயை மத்திய அரசு வழங்க வேண்டும் போன்ற 16 தீர்மானங்கள் இச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், சசிகலாவும் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயலலிதாவின் மீது விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட இந்த இருவரையும் ஜெயலலிதா தூக்கி எறிந்தார். செங்கோட்டையனை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றிய ஜெயலலிதா, அவருக்குக் கொடுக்கப்பட்ட வருவாய் துணை தலைமைச் செயலாளர் பதவியையும் பறித்தார். செங்கோட்டையனின் குடும்பத்தவர்கள் சுமத்திய குற்றச்சாட்டும் அவரது உதவியாளரின் தில்லுமுல்லும் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதனால் செங்கோட்டையன் அதிரடியாகத் தூக்கி எறியப்பட்டார்.
கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்ட செங்கோட்டையன் சில நாட்கள் அமைதியாக இருந்தார். சில நாட்களின் பின் மனதைத் தேற்றிக் கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டங்களில் ஜெயலலிதாவின் புகழ் பாடினார். சென்னையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டு மன்னிப்பு வழங்கப்பட்ட பின்சேர்த்துக் கொள்ளப்பட்ட உடன் பிறவாச் சகோதரி சசிகலா செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
மத்திய அரசில் தனது செல்வாக்கு நிறைவேறும் காலத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஜெயலலிதா.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு02/09/12

1 comment:

Jeyapalan said...

Jayalaitha should become the prime minister of India, such a courageous leader.