Friday, August 31, 2012

வரலாற்று நாயகன்ஆம்ஸ்ரோங்



அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான "நாஸா'வால் கடந்த 1969 இல் சந்திரமண்டல ஆய்வுக்கென அனுப்பப்பட்டிருந்த அப்பலோ  11 விண்கலத்தில் தனது 39 ஆவது வயதில் பயணித்து சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்து சாதனை படைத்த நீல் ஆம்ஸ்ரோங் தனது 82 ஆவது அகவையில் கடந்த ஞாயிறன்று (26/08/12)காலமானார்.

அமெரிக்க, ஒஹியோ மாகாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட நீல் ஆம்ஸ்ரோங் விண்வெளி ஆராய்ச்சியில் வெற்றிகண்ட பின்னர், "நாஸா' வின் விண்வெளி ஆராய்ச்சித்துறையில் ஆலோசகராகவும் மற்றும் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளையும் வகித்து வந்தவர். இந்த மாத முற்பகுதியில் இருதய சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்த அவர் அதன் பின்னர் அடிக்கடி மூச்சுத் திணறலால் அவஸ்தைப்பட்டு வந்தார்.
இது குறித்து, அன்னாரின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள ""அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இருதய நோயால் பாதிக்கப்பட்டுவந்த எங்கள் குடும்பத் தலைவரின் மறைவு குறித்த துயரமான செய்தியை இதயம் நொருங்கிய நிலையில் இத்தால் வெளியிடுகின்றோம். நீல் பாசமிகு கணவனாக, தந்தையாக, பாட்டனாக, சகோதரனாக மற்றும் நல்லதோர் நண்பனாக வாழ்ந்து மறைந்துள்ளார்.
 நல்லிதயம் படைத்ததோர் மனிதரை நாம்     இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் உலகம் பூராகவுமுள்ள இளைய தலைமுறையினருக்கு உதாரண புருஷராக வாழ்ந்து எமது நாட்டிற்கும் பெருமை தேடித் தந்த அவரின் அயரா உழைப்பை நாம் எமது நெஞ்சங்களில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம். நீலைக் கண்ணியப்படுத்த விரும்புவோரிடம் நாம் உருக்கமாக வேண்டுவது யாதெனில்,
முன்னுதாரணமான அவரது சேவை மனப்பான்மையை, கண்ணியத்தை என்றுமே கௌரவப்படுத்துங்கள். அடுத்த தடவை நீங்கள் தெளிவான இரவில் வெளியே நடந்து செல்கையில் உங்களைப் பார்த்து புன்னகைக்கும் சந்திரனைப் பார்க்கும்போது எங்கள் நீல் ஆம்ஸ்ரோங்கை நினைவு'' கூர்ந்து அவருக்கு கண்ஜாடை காட்டுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீல் ஆம்ஸ்ரோங்கின் மறைவு குறித்து "நாஸா' வெளியிட்செய்தியில், விண்வெளி சாதனை வீரரும், முன்னாள் சோதனை விமானியும், சந்திரனில் முதன்முதலாக காலடி பதித்தவருமான எமது மரியாதைக்குரிய நீல் ஆம்ஸ்ரோங்கின் மறைவு குறித்து எமது ஆழ்ந்த அனுதாபங்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது அனுதாபச் செய்தியில், "கடந்த 1969 ஆம் ஆண்டில் அப்பலோ விண்கலத்தில் சந்திரமண்டல ஆய்வுக்கென நீல் ஆம்ஸ்ரோங்கும், அவரது சகாக்கள் இருவரும் எமது நாட்டின் ஒட்டுமொத்த அபிலாஷைகளை சுமந்தபடியே சென்றிருந்தனர். அவர் சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்த மனிதன் என்ற வகையில், அவரது மனித சாதனை என்றுமே மறக்கப்படமாட்டாது.

""என குறிப்பிட்டுள்ளயார். குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரொம்னியும் தேசியத் தலைவர்கள் மண்டபத்தில் நீல்ஆம்ஸ்ரோங்குக்கு இன்று இடமொன்று கிடைத்துள்ளது. பூமி ஈன்றெடுத்த தனது முதலாவது மகனை சந்திரன் இழந்துவிட்டது' என தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 1930 ஓகஸ்ட் 5ஆம் திகதி ஒஹியோ மாகாணத்தில் வாபகெனட்டாவுக்கு அருகேயுள்ள நகரொன்றில் பிறந்த நீல் ஆம்ஸ்ரோங் அமெரிக்க இராணுவத்தில் இணைந்ததுடன் கொரிய யுத்தத்திலும் பங்குபற்றினார். பின்னர், "நாஸா' விண்வெளி ஆய்வு நிலையத்திற்கான விமானங்களையும் விண்கலங்களையும் இயக்கும் விமானியாகப் பணியாற்றினார்.

கடந்த 1957 இற்கும் 1975 இற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் விண்வெளிப்பயண பந்தயத்தில் அமெரிக்காவும், சோவியத்யூனியனும் போட்டிபோட்டுக் கொண்டிருந்தன. விண்வெளி ஆய்வில் யார் முதலாவதாக ஈடுபடுவதென்ற போட்டியில் இறங்கிய இரண்டு வல்லரசுகளுக்குமிடையேயான அரசியல் யுத்தமாகவும் அது மாறிவிட்டிருந்தது. சோவியத் யூனியன் "ஸ்புட்னிக் 1' என்ற தனது செய்மதியை 1957 ஒக்டோபர் 4 ஆம் திகதி விண்ணுக்கு ஏவி, தனது முதலாவது இலக்கை அடைந்தது. ஒருமாதம் கழிந்த நிலையில், சோவியத் தனது ஸ்புட்னிக் 11 செய்மதியில் "லைக்கா' என்ற நாயையும் விண்வெளிக்கு அனுப்பியது.
1961இல் அமெரிக்கா மூன்று வயதான "ஹாம்' என்ற பெயருடைய வாலில்லாக் குருங்கை MR  2 என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது. அதன்பின்னர் 1961 ஏப்ரல் 12 இல் "வொஸ்டொக் 1' எனும் விண்கலம் மூலம் சோவியத் விண்வெளி வீரர் யூரி கஹாரின் உலகை வலம் வந்தார். ஆயினும், 1968இல் அவர் தனது 34ஆவது வயதில் ஜெட் விமான விபத்தில் உயிரிழந்தார்.

 1961இல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எவ்.கென்னடி காங்கிரஸ் மாநாட்டு உரையில், "அப்பலோ' விண்வெளி ஆய்வுக்கென "நாஸா' நிறுவனத்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், சந்திரனில் காலடி பதிக்கும் சாதனையை அமெரிக்கா நிலைநாட்ட வேண்டுமெனவும் கோரியிருந்தார். அதன் பிரகாரம் அப்பலோ விண்வெளி நடவடிக்கைகள் "நாஸா'வால் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 1969 ஜூலை 16ஆம் திகதி சந்திரமண்டலத்திற்கு அனுப்பப்பட்ட அப்பலோ  ஐஐ விண்கலத்தின் கொமாண்டராக நீல் ஆம்ஸ்ரோங்கும், சக வீரர்களான எட்வின் புஸ் ஆல்ட்ரின் மற்றும் விமானமோட்டி மைக்கேல் கொலின்ஸ் ஆகியோர் செயற்பட்டனர். நான்கு நாட்கள் கடந்த நிலையில், 
உலகெங்குமுள்ளஅரை பில்லியன் மக்கள் சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ரோங் கால் பதித்த அந்த சாதனை நிகழ்வை பார்த்து ரசித்தனர். அடுத்த வருடமே  "நாஸா'வின் விண்கல அறிவியல் துறை பிரதி இணை நிர்வாகியாக கடமையாற்றிய அவர் ஒருவருடத்தின் பின்னர், சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் பொறியியல் பேராசிரியாகவும் பணியாற்றினார். 

கமராக்களைக் கண்டால் ஓடி ஒளிந்துகொள்ளும் சுபாவமுடைய நீல் ஆம்ஸ்ரோங், ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விண்வெளி பற்றிய கொள்கையினை ஏற்று, விண்வெளிக் கப்பல்களை உருவாக்கி ஆய்வு செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டுமென       கடந்த 2010ஆம் ஆண்டு பொது மக்கள் முன்னிலையில் வலியுறுத்திப்பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மெட்ரோநியூஸ்31/08/12

No comments: