Wednesday, September 19, 2012

ரணகளமான கூடங்குளம் மோதலில் முடிந்த போராட்டம்



   

கூடங்குளம் அணு உலைக்கு யுரேனியம் நிரப்பும் பணியை நிறுத்தக் கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்ததில் பொது மக்களும், பொலிஸாரும் காயமடைந்தனர். கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் எனக்கோரி தொடர் போராட்டமும் உண்ணாவிரதமும் நடைபெற்றன.
இந்த வெகுஜனப் போராட்டத்துக்கு உதயகுமார் தலைமை வகித்தார். அணு உலையால் ஏற்படும் ஆபத்து கதிர் வீச்சு என்பனவற்றினால் அதனைச் சுற்றியுள்ள மக்கள் பாதிப்படைவார்கள் என்பதால் நடந்த இந்த வெகுஜனப் போராட்டத்துக்குத் தமிழக அரசு ஆரம்பத்தில் ஆதரவு வழங்கியிருந்தது. பொதுமக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தைப் பொலிஸ் அதிகாரத்தின் மூலம் அடக்கியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது கரும்புள்ளி விழுந்துள்ளது.
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியினால் அணு உலைகள் பாதிக்கப்பட்டதனால் அணு உலைகளின் பாதுகாப்பில் நம்பிக்கையீனம் உண்டானமையால் ஜப்பான் அணு உலைகளை மூடியுள்ளது. உலகின் சில நாடுகள் அணு உலையை மூடுவது சம்பந்தமான ஆலோசனையைச்செய்து வருகின்றன.
அணு உலைகள் மூலமே ஜப்பான் மின்சாரத்தில் தன்னிறைவு கண்டது.
 கூடங்குளம் அணு உலை இயங்கத் தொடங்கினால் தமிழகத்தின் மின் பற்றாக்குறை நிவர்த்தியாகும். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை இழப்பதற்கு மின் வெட்டும் ஒரு காரணம். மின் வெட்டு இல்லாத தமிழகம் என்ற உறுதிமொழியுடன் ஆட்சி பீடம் ஏறிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது வாக்குறுதியை மீறி மின் வெட்டை அமுல்படுத்துகிறது.
தமிழகத்தின் மின்சாரத் தேவையை நிறைவு செய்வதற்காக அணு உலை வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன. சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காகவும் அணு உலைக்கு அருகில் உள்ள கிராம மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அணு உலை இயங்கக் கூடாது என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன.
அணு øலயைத் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அரசியலாக்கி விட்டன. அணு உலையை இயக்க வேண்டும் என்பதற்காகத் தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
இந்திய மத்திய அரசும் அணு உலை இயங்க வேண்டும் என்பதற்கான பல காரணங்களை முன் வைத்தது. அணு உலை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக ஒரு குழுவை மத்திய அரசு நியமித்தது. கூடங்குளம் அணு உலையைப் பார்வையிட்ட அக்குழு அணு உலை பாதுகாப்பானது என அறிவித்தது. இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் மூல காரணிகளில் ஒருவரும், இந்திய மக்களால் அதிகமாக நேசிக்கப்படுபவருமான அப்துல் கலாம், அணு உலை மிகப் பாதுகாப்பானது என உத்தரவாதமளித்துள்ளார். சுனாமி தாக்கினாலும் அணு உலை அசையாது என்று அடித்துக் கூறியுள்ளார்.
அணு உலைக்கு எதிரான போராட்டக்கõரர்கள் இதை எதையும் கருத்தில் எடுக்கவில்லை. போராட்டம் ஒன்றே அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது. அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணி ஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்டதும் அதனைத் தடுப்பதற்கு போராட்டக்காரர்கள் உறுதிபூண்டனர். பலத்த பொலிஸ் காவலுடன் யூரேனியம் நிரப்பும் ஏற்பாடு நடைபெற்றது. உயிரைக் கொடுத்தாவது அதனைத் தடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் உறுதி பூண்டனர்.
அணு மின் உலையைக் கைப்பற்ற உதயகுமார் தலைமையிலான போராட்டக்காரர்கள் முடிவு செய்தனர். அணு மின் நிலையத்தைப் போராட்டக்காரர்கள் கைப்பற்றப் போவதை அறிந்ததும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டது.
அணு மின் உலையை நோக்கிச் செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. அப்பகுதியினூடாகச் செல்லும் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டன. பிரதான பாதைகளில் பொலிஸார் குவிக்கப்பட்டதனால் கடற்கரைப் பக்கமாக அணுமின் உலையை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் விரைந்தனர். அதனைத் தடுத்து நிறுத்திய பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது. பொலிஸாரை நோக்கி கற்களும் மணலும் வீசப்பட்டன. பதிலுக்கு பொலிஸாரும் கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தினர். ஆண், பெண் சிறியவர், குழந்தைகள் என பேதம் பாராது பொலிஸõரின் குண்டாந்தடி பதம் பார்த்தது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு வெளிநாட்டு உதவி கிடைக்கிறது என்ற சந்தேகத்தை இந்திய அரசு வெளியிட்டது. போராட்டக்காரர்கள் அதனை மறுத்தனர். கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருவதாக தெரிவிக்கப்பட்ட போது போராட்டக்காரர்கள் அதனை முற்றாக மறுத்தார்கள்.
போராட்டத்தில் பங்குபற்றுமாறு போராட்டக்காரர்கள் கிராமங்களில் அறிவித்தல் விடுத்தனர்.
இப்போராட்டத்தில் உயிரிழப்பவர்களுக்கு ஐந்து இலட்சம் முதல் ஏழு இலட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டது. இதற்கான 32 பேர் கொண்ட நிதிக் குழு அமைக்கப்பட்டதாகவும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் பங்குபற்றுபவர்கள் இறந்தால் அல்லது காயமடைந்தால் அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் நஷ்டஈடு வழங்குவது வழமை. ஆனால், போராட்டம் நடத்தும் இயக்கம் இப்படியான அறிவித்தலை விடுத்ததனால் அவர்களுக்கான நிதி வெளிநாட்டிலிருந்து கிடைக்கிறதோ என்ற குற்றசாட்டு உண்மையாக இருக்கலாம். போராட்டக்காரர்களே தமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளனர். உண்மையான போராட்டக்காரர்களுடன் பணத்திற்கு ஆசைப்பட்டவர்களும் கலந்து கொண்டு போராட்டத்தைத் திசை திருப்பியுள்ளனரோ என்ற சந்தேகமும் நிலவுகிறது. தமிழகம் ஒளிர்வதற்கு அணு மின் உலை வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றாலும், இச்சம்பவம் தமிழக அரசுக்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.
வர்மா
சூரன்..ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு16/09/12

No comments: