Thursday, April 11, 2013

பா.ஜ.க.வின் புதிய வியூகம் கலக்கத்தில் காங்கிரஸ்


இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு அடக்கி வாசிப்பதனால் பாரதீய ஜனதாக்கட்சி களமிறங்கத்தயாராகிறது. இலங்கைப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் என்று பாரதீய ஜனதாக்கட்சி கருதுகிறது. இலங்கையை நட்பு நாடாக காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு கூறுகிறது. காங்கிரஸுடன் நட்புறவு பாராட்டி கொஞ்சுக்குலாவிய  திராவிட முன்னேற்றக்கழகம் இலங்கை நட்பு நாடு என்ற கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்திய வெளியுறவுக் கொள்கை என்பதை முதன்மைப்படுத்தி  இலங்கை விவகாரத்தில் தீவிரமாகச் செயற்படாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்தியப் பொதுத்தேர்தல் நடைபெறும் வகையில் பிரசாரத்தை முன்னெடுக்க பாரதீய ஜனதாக்கட்சி திட்டமிட்டுள்ளது. சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் மிக நெருக்கமாகச் செயற்படும் இலங்கை அரசாங்கம் இந்திய அரசின் வேண்டுகோள்களை உதாசீனப்படுத்துவதாக குற்றம் சாட்டுகிறது பாரதீய ஜனதாக்கட்சி .இந்தியாவின் பரம எதிரி நாடுகளான சீனாவையும் பாகிஸ்தானையும் இலங்கை அரவணைத்துச் செல்வதை இந்திய மக்கள் விரும்பமாட்டார்கள். இந்திய  நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது இது தொடர்பாக அனல் பறக்கும் பிரசாரத்தை பாரதீய ஜனதாக்கட்சி மேற்கொள்ளும்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில்  இருந்து திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேறி விட்டது. சமஜ்வாடியும் திருணாமூலும்  காங்கிரஸை மிரட்டுகின்றன. இக்கட்சிகளின் ஆதரவுடன் தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தப்பிப்பிழைத்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளில் ஒன்று காலை வாரினால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி கவிழ்ந்து விடும். அப்படிப்பட்ட ஒரு சந்தப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது பாரதீயஜனதாக்கட்சி.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு என்பவற்றினால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் ஆட்சி அமைக்கும் வகையில் தலைமைப்பீடத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது பாரதீய ஜனதாக்கட்சி. 

வாஜ்பாய் அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்னர் அத்வானிதான் அடுத்த பிரதமர் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடியை முன்னிறுத்தி தனது அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது பாரதீய ஜனதாக்கட்சி. அத்வானியின் செல்வாக்கு படிப்படியாகக்குறைக்கப்பட்டுள்ளது. ராகுலை முன்னிலைப்படுத்தி நாடாளுமன்றம் பொதுத்தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. நாடளாவிய ரீதியில் ராகுல் காந்திக்கு இருக்கும் செல்வாக்கு அத்வானிக்கு இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட பாரதீய ஜனதாக்கட்சி ராகுலுக்கு இணையாக நாடளாவிய ரீதியில் செல்வாக்கு உள்ள நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி உள்ளது. 

இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசு நேர்மையுடன் செயற்படவில்லை என்று ஜி.கே. வாசன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் செயற்பாடு உறுதியானதாக இல்லை. கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடாத்த அனுமதிக்கக்கூடாது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் எனபிரதமர் மன்மோகன் சிங்குடன்  கலந்துரையாடியதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளாளர்.

தமிழக அரசியல் நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாக இருப்பதை உணர்ந்து  கொண்ட ஜி.கே. வாசனின் இந்தச் செயற்பாட்டினால் திராவிட முன்னேற்றக்கழகம் மகிழ்ச்சியடைந்துள்ளது. பலம் குன்றிய நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜி.கே. வாசன் வெளியேறினால் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியை  அக்கட்சி எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஜி.கே வாசன் இளங்கோவன், ப. சிதம்பரம் ஆகிய தலைவர்களின் பின்னால் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் உள்ளனர். . ஜி.கே. வாசனின் பின்னால் பல தொண்டர்கள் உள்ளனர். ஆகையினால் ஜி.கே. வாசனைத் திருப்திப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது காங்கிரஸ் கட்சி. 

ஜெயலலிதாவின் கூட்டணியிலிருந்து வெளியேறிய விஜயகாந்த், காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து நாடாளுமன்றப் பொதுத்தேர்தலைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கருணாநிதியைக் கைவிட்டு விஜயகாந்த்துடன்  கைக்கோர்க்கலாம் என்று ராகுல்காந்தி கணக்குப் போட்டார். ராகுல்  காந்தியின் வியூகத்தைப் புரிந்து கொண்ட கருணாநிதி இலங்கைப்பிரச்சினையை முதன்மைப்படுத்தி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இருந்து வெளியேறினார்.

இந்திய மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேறியதால் அதிர்ச்சியடைந்த விஜயகாந்த் இந்திய நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளார். விஜயகாந்த்தின் இந்த அறிவிப்பை கட்சியில் உள்ள முக்கியஸ்தர்களõன தொண்டர்களும் விரும்பவில்லை. விஜயகாந்த்தின் கட்சியைச் சேர்ந்த ஐந்து சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் பக்கம் சாய்ந்து விட்டனர். ஏனையவர்களைப் பாதுகாப்பதற்காக தமிழகத்தில் உள்ள பெரிய கட்சியுடன் கூட்டணி சேரவேண்டிய இக்கட்டான நிலையில் விஜயகாந்த் உள்ளார்.

No comments: