Monday, May 16, 2016

தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல்


அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் ஐந்து வருட ஆட்சியில் தமிழகம் முன்னேறியதா? அல்லது படுகுழியில்  விழுந்ததா?  என்பதைத் தீர்மானிக்கும்  தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தமிழகம் முன்னேறி உள்ளது. சட்டம் ஒழுங்கு  சிறப்பாக உள்ளது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி உயர்வடைந்துள்ளது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌மும் தமிழகம் பின்தங்கி உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தொழில் துறை வளர்ச்சி அடையவில்லை என்று  எதிர்க்கட்சிகளும் பிரசாரம் செய்து ஓய்ந்து போயுள்ளன.

ஐந்து வருட ஆட்சியின் பயனை அறுவடை செய்ய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் தயாராக இருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌  ஆட்சியின் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் எதிர்க்கட்சிகள், வாக்காளர்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன. தமிழகத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டபோது எதிர்க் கட்சிகள் சிதறுண்டு இருந்ததனால் ஜெயலலிதாவுக்குச் சாதகமான நிலை  இருந்தது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றதனால் தமிழக சட்ட சபைத் தேர்தலிலும் துணிச்சலுடன் தனித்து களம் இறங்கி உள்ளார் ஜெயலலிதா. பலமான  கூட்டணி அமைத்தால் ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றலாம் எனக் கருதிய எதிரணித் தலைவர்கள்  வாக்கு வங்கி உள்ள கட்சிகளை நோக்கித் திரும்பினர்..

. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனித் தனியே போட்டியிட்டதனால் படுதோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கழக‌மும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இணைந்தன. திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கும் இடையே சுமார் ஐந்து சதவீத  வெற்றி வாய்ப்பு இருப்பதனால் விஜயகாந்தின் வருகையை கருணாநிதி பெரிதும் எதிர் பார்த்தார்.  கருணாநிதி முதலமைச்சராக இருந்த  போது  அவரை விட்டுக்கு அனுப்புவதற்காக ஜெயலலிதாவுடன் கை கோர்த்த விஜயகாந்த் இன்று ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றுவதற்காக முழு வீச்சில் களம் இறங்கவில்லை.

   திராவிட முன்னேற்றக் கழக‌ம், பாரதீய  ஜனதாக் கட்சி, மக்கள் நலக் கூட்டணி ஆகியவற்றுடன் ரகசியமாகவும் பகிரங்கமாகவும் பேச்சு வார்த்தை நடத்தி தனது நிலைமையை ஸ்திரப்படுத்துவதில் முனைப்பாக இருந்தார்.  விஜயகாந்த் வருவர் என்ற நம்பிக்கையில் பழம் நழுவி பாலில் விழும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டபின் நிம்மதியாகப் படுத்துறங்கினார் கருணாநிதி. காலையில் எழுந்து பார்த்த போது வைகோவின் பாசறையில் விஜயகாந்த் தஞ்சமடைந்திருந்தார். கருணாநிதியின் நிம்மதியைக் கெடுத்த வைகோவின் செயலால் ஜெயலலிதா மகிழ்ச்சியடைந்தார். கருணாநிதியும் விஜயகாந்தும்  சேரக்கூடாது என ஜெயலலிதா  விரும்பினார். ஜெயலலிதாவின் விருப்பத்தை வைகோ நிறைவேற்றியதால் கருணாநிதி நிம்மதி இன்றித் தவித்தார்.

ஜெயலலிதாவை எப்படி வீழ்த்தலாம்  என எதிர்க்கட்சிகள்  தலையைப் பிய்த்துக்கொண்டு இருந்தபோது ஜெயலலிதாவின் கோட்டைக்குள் இருந்து அவருக்கு எதிரானவர்கள் புறப்பட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ அமைச்சர்களின்  நம்பிக்கைக்குரியவர்களின் வீடுகளில் இருந்து கோடிக்கணக்கான பணம்  கைப்பற்றப்பட்டது. தேர்தலைக் கண்காணிக்கும் பறக்கும் படையுடன் மத்திய அரசின் கீழ் உள்ள வருமானவரித்துறையும் கைகோர்த்துக்கொண்டு தேடுதல்களை நடத்துகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தை முடக்குவதற்காக மத்திய அரசு பின்னணியில் காரியமாற்றுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திராவிடக் கழகங்களுக்கு எதிரான பலமான அணியாக மக்கள் நலக் கூட்டணியை  கட்டி  எழுப்பிய வைகோ அதனை சிதறடித்துவிட்டார். திராவிட முன்னேற்றக் கழக‌மும் பாரதீய ஜனதாக் கட்சியும் விஜயகாந்துக்கு வலைவீசி காத்திருக்கையில் அவரை மக்கள் நலக் கூட்டணியில் இணைத்து பெருமிதமடைந்த வைகோ தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கியதால் மூன்றாவது அணி  கலகலத்துப் போயுள்ளது. வைகோவின் முடிவை கூட்டணித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வைகோ போட்டியிடாதது மக்கள் நலக் கூட்டணிக்கு பின்னடைவு என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
திராவிடக் கழகங்களுக்கு எதிரான வாக்குகள் மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போயுள்ளது.  அந்த வாக்குகளை பாட்டாளி மக்கள் கட்சியும் சீமானின்  கட்சியும் பங்கு போடும் நிலை எழுந்துள்ளது. இந்த வாக்குகளால் அக்கட்சிகளால் வெற்றி பெற முடியாது.தேர்தலுக்கு முன்னரே மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஆளுக்கு ஒருபக்கம் நிற்பதால் அதன் மீது இருந்த நம்பிக்கை குறைந்துள்ளது.விஜயகாந்தின் நடவடிக்கைகள் கண்ணியம் மிக்க வாக்களர்களை சிந்திக்க வைத்துள்ளது.
.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் வேட்பாளர் தெரிவில் பாரிய தவறிழைத்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் வேட்பாளர்களாக  அறிவிக்கப்பட்டவர்களின் சந்தோசம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அவர்கள் மாற்றப்பட்டு புதியவர்கள் .அறிவிக்கப்பட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழக‌த்திலும் வேட்பாளர்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால் வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். மக்கள் சேவைக்காக தேர்தலில் போட்டியிடுபவர்களில் பலர்  கோடீஸ்வரர்கள். ஏழைகளை  எந்தக்கட்சியும் வேட்பாளர்களாக அறிவிப்பதில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.


தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சியின் வேட்பாளர்களில் 28 சதவீதம் பேர் தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
  திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ,இந்திய  கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களில் அளித்திருக்கும் விவரங்களை ஆய்வுசெய்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு மற்றும் தமிழக தேர்தல் கண்காணிப்புக் குழு ஆகியவை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
சட்டமன்றத் தேர்தலில் 3776 பேர் போட்டியிடுகின்றனர். பிரதான கட்சிகளின் சார்பில் 997 பேர் போட்டியிடுகின்றனர்.து குறித்து பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் 16 பேர் மீது கடுமையான குற்றங்களைச் செய்துள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் 157 பேர் தங்கள் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு போன்ற கடுமையான வழக்குகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி தொகுதி வேட்பாளரான ராமச்சந்திரன் மீது 3 கொலை வழக்குகளும்  திராவிட முன்னேற்றக் கழக கே.பி.பி சாமி,    பட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்  ஆர். ஹரிகரன் ஆகியோர் மீது தலா ஒரு வழக்கும் இருக்கிறது.
கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்கள்  திராவிட முன்னேற்றக் கழக த்தில்   41 பேரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  36 பேரும் உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 37 வேட்பாளர்கள் மீது கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளன.

வழக்குகள் ஒரு புறமிருக்க இந்த முறை பிரதான கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துக்களின் மதிப்பும் அதிகரித்துள்ளது.
வேட்பாளர்களின் சராசரி வருமானம் 4.35 கோடி எனத் தகவல்
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 4.35 கோடி எனவும் ஜெயராம் வெங்கடேசன் பிபிசியிடம் கூறினார்.
பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் 997 வேட்பாளர்களில் 553 வேட்பாளர்கள் ஒரு கோடிக்கு மேல் சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் 32 பேருக்கும்  திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களில் 133 பேருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக. வேட்பாளர்களில் 156 பேருக்கும் ஒரு கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது.
அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி தொகுதியின் வேட்பாளர் எச் வசந்தகுமார் தனக்கு சுமார் 337 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 113 கோடி ரூபாய் சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். கருணாநிதியின் சொத்தும் அதிகரித்துள்ளது.
  
தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின்  5.75 சதவீத  வாக்கு இழப்பால்  திராவிட முன்னேற்றக் கழக‌ம் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக என்டிடிவியின் நிறுவனர் பிரணாய் ராய் கருத்து தெரிவித்துள்ளார்.  .   கடந்த கால தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று பிரபல கருத்துக் கணிப்பியல் நிபுணரும்   என்டிடிவி நிறுவனருமான பிரணாய் ராய் குழு கணித்துள்ளது. இதன்படி இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் 5 முதல்வர் வேட்பாளர்களோடு கட்சிகள் களத்தில் நிற்கின்றன. இதில் 36.5 சதவீத வாக்குகளை பெறும் அணி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்றும் அதோடு தற்போதைய நிலையில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ அணியிலிருந்து 5.75 சதவீத வாக்குகள் பிரிந்து  திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்குச் செல்லும் நிலையே உள்ளது 

 1984-ம் ஆண்டிற்கு பிறகு தமிழக மக்கள் ஒருமுறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் மறுமுறை  திராவிட முன்னேற்றக் கழக‌ம் என்றே வாக்களித்து வந்துள்ளனர். அதோடு சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியமைக்கும் கட்சி அடுத்த தேர்தலில் பெருவாரியான வாக்கு சதவீதத்தை இழந்து தோல்வியையே தழுவியுள்ளது. இதுவும் வரலாறு. கடந்த 2011 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ கூட்டணி 203 இடங்களை கைப்பற்றியது அதுபோல 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் கைப்பற்றியது. இது சட்டசபை தேர்தலில் 217 இடங்களை பெறுவதற்கு சமமான வெற்றியாகும். இந்த தேர்தலை பொறுத்தமட்டில் இதுவரை இல்லாத அளவில் 3 வது அணியாக சிறு சிறு கட்சிகளை கொண்ட மக்கள் நலக் கூட்டணியானது விஜயகாந்த் தலைமையில் 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது. அன்புமணி ராமதாஸ் தலைமையில் பட்டாளி மக்கள் கட்சியும்  232 தொகுதிகளில் தேர்தலை சந்திக்கிறது.சீமானின் கட்சியும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இது பல்வேறு வகைகளில் வாக்குகளை பிரிப்பதால் 36.5 சதவீதம் வாக்குகள் பெறும் கட்சி   ஆட்சி அமைக்க முடியும். 

தமிழக சட்ட சபைத் தேர்தலில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும். எந்தக் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்.வெற்றி பெறும் தலைவர் யார்? எத்தனை வாக்குகளால் வெற்றி பெறுவார்.தோல்வியடையும் தலைவர் யார்?  போன்ற கேள்விகளுடன் பந்தயம்  பிடிப்பவர்கள் இரகசியமாக களம் இறங்கி உள்ளனர்.  தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் பக்கம் வெற்றி அலை இருந்தது. ஆகையினால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ ஆட்சியைத் தக்க வைக்கும்  என்று அதிகமானோர் பணம் கட்டியுள்ளனர்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம்  வெற்றி பெற்றால் பல மடங்கு பணம்  கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதனால்  திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் வெற்றிக்காக பந்தயம் பிடிப்போர் மறை முகமாக வேலை செய்வதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிருத்தப்படும் மூன்று  முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுமே வயது முதிர்வு மற்றும்  ஆரோக்கிய குறைபாடால் அவதிப்படுவது இந்த தேர்தலின் ஒரு பெரும் சோகம். 93 வயதில் காலடி எடுத்து வைக்க உள்ள கருணாநிதியால் நடக்க முடியாது. 69 வயதாகும் ஜெயலலிதாவில் நின்றபடி பேச முடியவில்லை. இவர்களுக்கு மாற்றாக வந்துள்ளேன் என்று கூறிய விஜயகாந்த்தால் பிறர் உதவியின்றி நடக்க முடியவில்லை.  கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உள்ளது. விஜயகாந்தின் நிலை பரிதாமாக உள்ளது
.இரண்டு கைகளையும்  குவித்து கும்பிட்ட வேட்பாளரின் தலைவிதியை எழுதுவதற்கு தமது ஆள்கட்டி விரல் மூலம் பதிலளிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.
வர்மா
நன்றி  துளியம் 










2 comments:

Yarlpavanan said...

அருமையான தகவல்
சிறந்த பதிவு

வர்மா said...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...
அருமையான தகவல்
சிறந்த பதிவு


தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா