Showing posts with label யாழ்ப்பாண‌ம். Show all posts
Showing posts with label யாழ்ப்பாண‌ம். Show all posts

Wednesday, November 12, 2025

இவர்கள் எனது நண்பர்கள்


 சத்தியமாகச் சொல்கிறேன்

இவர்கள் எனது நண்பர்கள்

நீங்கள் நம்பினாலும்

நம்பாவிட்டாலும்

இவர்கள் எனது நண்பர்கள்

 

வகை வகையான நண்பர்கள்

வித விதமான நண்பர்கள்

தினிசு தினிசான நண்பர்கள்

புதிசு புதிசான நண்பர்கள்

 

எனக்குத் தெரிந்த நண்பர்கள்

என்னைத் தெரிந்த நண்பர்கள்

ஒத்த கருத்துடைய நண்பர்கள்

மாற்றுக் கருத்துடைய நண்பர்கள்

 

கெளரவ நண்பர்கள்

அகமறியும் நண்பர்கள்

புகழ் விரும்பும் நண்பர்கள்

பெருமை பேசும் நண்பர்கள்

 

எல்லை தாண்டும் நண்பர்கள்

கல்லை எறியும் நண்பர்கள்

தொல்லை தரும் நண்பர்கள்

பல்லைக் காட்டும் நண்பர்கள்

 

முகம் காட்டும் நண்பர்கள்

முகத்தை மறைகும் நண்பர்கள்

அகம்பாவ நண்பர்கள்

மதம்  பிடித்த நண்பர்கள்

 

புரளி பேசும் நண்பர்கள்

பரணி பாடும் நண்பர்கள்

அரட்டை அடிக்கும் நண்பர்கள்

குறட்டை விடும் நண்பர்கள்

 

பாங்கான படங்களுடன்

பவனி வரும் நண்பர்கள்

சிங்காரச் சிறுக்கிகளால்

சீரழியும் நண்பர்கள்

 

தற்பெருமை பேசும் நண்பர்கள்

தம்பட்டம் அடிக்கும் நண்பர்கள்

பொய்பரப்பும் நண்பர்கள்

புகழ் பாடும் நண்பர்கள்

 

லைக் போடாத நண்பர்கள்

வாழ்த்து சொல்லாத நண்பர்கள்

அனுதாபம் சொல்லாத நண்பர்கள்

பின்னூட்டம்  போடாத நண்பர்கள்

 

எட்டாம் வகுப்பை எட்டாத‌வனும்

பத்தாம் வகுப்பை தாண்டாதவனும்

பல்கலைக் கழக பட்டதாரி என‌

பந்தா காட்டும் நண்பர்கள்

 

சத்தியமாகச் சொல்கிறேன்

இவர்கள் எனது நண்பர்கள்

நீங்கள் நம்பினாலும்

நம்பாவிட்டாலும்

இவர்கள் எனது நண்பர்கள்

 

 

 

சூரன்.ஏ.ரவிவர்மா

ஜீவநதி

ஆடி 2025

 

 

 

Wednesday, June 18, 2025

ஒட்டுக்குழுவுடன் ஒட்டிஉறவாடும் சந்தர்ப்பவாத அரசியல்


  கொள்கை,கோட்பாடு என்ற அரசியல் மலினப்பட்டு சந்தர்ப்பவாத அரசியல்தலைதூக்கி உள்ளது.

எது நடக்கக்கூடாதொ அதுவெல்லாம் நடது முடிந்துவிட்டது.தேர்தல் காலத்தில் மேடை போட்டி பேசிய      பேச்சுகள்,அடிய ஆட்டங்கள்,சாபங்கள், சபதங்கள் எல்லாம் பொசுக்கென்று போய்விட்டது.இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களை ஏமாற்றி விட்டன.  பரம்பரை பரம்பரையாக வாக்களித்தவர்களை  இன்றைய தலைவர்கள் எனச் சொல்பவர்கள் நட்டாற்றில் விட்டுவிட்டனர்.

 10 கட்சிகள், 15 சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிட்ட போதும்,  தனக்குப் பிடித்தமான சின்னத்துக்கு அல்லது வேட்பாளருக்கு புள்ளடியிட்டவர்கள் ஏமாந்து போயுள்ளனர்.

வேட்பாளர் அல்லது  சின்னம் சரியாக  இருக்கும் என நம்பித்தான் வாக்க்காளர் புள்ளடியிடுவார்.  அந்தப் புள்ளடி, அரசியல் சதுரங்கத்தில் பிழையாகிவிட்டது.

வீட்டுக்கும், சைக்கிளுக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்    சங்குக்கு வாக்களித்தார்கள்.

வீட்டை விட்டு வெளியிலை வந்து தனிகுடித்தனம் செய்யும் சங்குக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் சைக்கிளுக்கு வாக்களித்தார்கள். இவர்களுக்கு வீட்டையும்  பிடிக்காது.

 இப்ப சைக்கிளும்,சங்கும் சேர்ந்து விட்டன.

இவர்களை நம்பி வாக்களித்தவர்கள்   நடுத்தெருவில்.

இவர்கள் பதவி ஆசனத்தில் பரம அரசியல் எதிரியான வீணை வீட்டுக்குள்ளை போட்டுது.

முன்னாள் முதலமைச்சர்,  முன்னாள் மேயர் [மான்]   இரண்டு பேரும் வீட்டுக்கை தஞ்சமடைசிருக்கினம்.

சைக்கிளும்,சங்கும்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருகினமாம். 

வாக்களித்த மக்களுக்குத் தெரியாமல் அதென்ன  புரிந்துணர்வு. பதவிக்காகவே புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது மக்களுக்கு நன்றாகப் புரிகிறது.

யாழ்ப்பாண மாநகரசபையை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் தமிழ் அரசுக் கட்சி வென்றுள்ளது.டக்ளஸைத் தேடி  வீடு போனதுதான்  இங்கு  பேசு பொருளாகி உள்ளது. தமிழ்க் கட்சிகள் எவையுடனும் டக்ளஸ்,கருணா,  பிள்ளையான் ஆகியோர் இணைய மாட்டார்கள் என்ற கோட்பாடு தவிடுபொடியாகி  உள்ளது.

வவுனியாவில்    நிலைமை வ்வேறு விதமாக  உள்ளது.அங்கு அங்குக்கும், தபால் பெட்டிக்கும் பதவியைக் கொடுப்பதற்காக வீடும், சைக்கிளும் கைகோர்த்துள்ளன.

 மட்டக்களப்பில் தமிழ் அரசுக் கட்சி ஹக்கீமுடன்  இணைந்து ஆட்சியைப் பிடித்துள்ளது. ஹக்கீம் துரோகம் செய்துவிட்டதாக பதியுதீன்  புலம்புகிறார்.தமிழ், முஸ்லீம்  பிரிவினைக்கு அங்கு  தூபமிடப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது இலங்கை பூராவும்  இந்த நிலை தான்  உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று இறுமாப்புடன்  இருந்த என்பிபி   உள்ளுராட்சித் தேர்தலில் சறுக்கியது.

ஆட்சியில் இருகும்  மக்கள் ஐக்கிய சக்தியை விட அதிக  உள்ளூராட்சி சபைகளில் எதிர்க் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வென்று மிரட்டியுள்ளன. சுயேட்சைக் குழுக்களுடனும், சிறிய கட்சிகளுடனும் அனுரவின் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. சில இடங்களில் டீல் ஓகேயானது.

கொழும்பை அனுரவின் அரசு கைப்பற்றியது. வேறு சில இடங்களில் நம்பியவர்கள் காலை வாரியதால் ஆட்சி அமைக்கம் உடியாத நிலை உள்ளது. 

மக்கள் ஐக்கிய சக்தி 151 உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்றது.சில சபைகளில்  எதிர்க்கட்சிகளின் கை ஓங்கியதால் அட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது.

கண்டி மாவட்டத்தில் உள்ள கடுகண்ணாவை நகர சபையில் என்பிபி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லை. அங்கு சாதிர்யமாகக் காய் நகர்த்திய  சஜித்  ,அனுரவைத் தோறக்டித்தார். 

குருநாகல் மாவட்டத்தில் உள்ள குளியாப்பிட்டி பிரதேச சபையிலும் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டது.   தேசிய மக்கள் சக்தி 21 இடங்களை வென்றது, ஆனால் மற்ற கட்சிகளும்,, குழுக்களும்  25 இடங்களீல்  வெற்றி பெற்றன.

  தேசிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இரண்டும் கவுன்சில் தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை நிறுத்தின. . ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர்   வெற்றி பெற்றார்.

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வெள்ளிக்கிழமைஇரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அங்கு NPP க்கு 17 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு மொத்தம் 21 இடங்களும் இருந்தன.   சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ச‌ர்வஜன பலய உறுப்பினரின்    பெயர் அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை என்ற காரணத்திற்காக வாக்கெடுப்பு  முன்னர் சபையில் அவர்  இருந்து வெளியேற்றப்பட்டர். இரகசிய  வாக்கெடுப்பில் என்பிபி வெற்றி  பெற்றது.

 கொழும்பிலும், மதவாச்சியிலும் நடைபெற்ற இரகசிய வாக்களிப்பில்  முறைகெடு நடந்ததாக எதிர்க் கட்சிகள்  குற்றம் சாட்டியுள்ளன.

ஜனநாயகத் தேர்தல் முறையை அரசியல் தலைவர்கள் கேலிக்கூத்தாக்கி விட்டனர்.  

குப்பை அள்ளவும், லைற்றுப் போடவும், றோட்டுத் திருத்தவும்  இந்தக் கூத்து

ஒரு விரல் புரட்சி வரும் வரை காதிருப்போம்

   

Monday, August 22, 2022

உயிரோடு விளையாடும் மருந்துகளின் விலையேற்றம்


 

பொருளாதார நெருக்கடியின் விளைவாக இலங்கையில் பொருட்களின் விலை கண்டபடி ஏறி உள்ளது. மா,சீனி,பால்  ,அரிசி போன்ற‌வற்றுக்கு கட்டுப்பாட்டு விலை உள்ளது. ஆனால், கட்டுக் கோப்பில்லாமல் அவை விற்பனை செய்யப்பட்டன. பால்மா குடித்தவர்கள்,  தேநீருடன் திருப்தியடைகின்றனர்.  பிஸ்கற்ர்றின் விலை உயர்வார் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. எரிபொருள்,எரிவாயு விலை ஏற்றாம் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. விலை உயர்ந்த உணவு தேவை இல்லை என்றால் வாங்காமல் விட்டுவிடலாம். மருந்துகளை அப்ப்டி விட்டுவிட்டுப் போக  முடியாது. மருந்துடன் உயி வாழ்பவர்கள்  இதனால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 60 மருந்து பொருட்களின் விலை  40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 6 வாரத்துக்கு முன்பு 30 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் 2வது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

உணவு, பெட்ரோல், டீசல் உள்பட அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மருந்து விலை ஏற்றம் என்பது மக்களை இன்னும் சிரமத்தில் தள்ளும். மேலும் ஏற்கனவே பணப்பிரச்சனையில் இருக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வானது இன்னும் கூடுதல் பிரச்சனையாக அமையும்.

நோய்எதிர்ப்பு சக்திக்கான ஆன்ட்பாடி, வலி நிவாரணிகள்(பெயின் கில்லர்), இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்கனவே அறுவை சிகிச்சைகள் கைவிடப்பட்டுள்ள நிலையில் மருந்து பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து விற்பனை நிலையங்களுக்கு  ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளதுடன், தற்போதைய நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 10% மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளன.   மருந்துகளின் விலை உயர்வு காரணமாக விற்பனையும் குறைந்துள்ளது என சங்கத்தின் ஊடகச் செயலாளர் ஏ.எச்.டி.எஸ்.சுரங்கா தெரிவிதுள்ளார்.

 தற்போதைய மருந்து விலைகள்,மின்வெட்டு காரணமாக மருந்து விற்பனை நிலையங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சில மருந்துகள் மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால், விலை உயர்வால் மக்கள் மருந்துகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ற்போது மக்கள் வாங்கும் சக்தியை இழந்து வருவதால் மருந்துகளை வாங்க முடியாத நிலை உள்ளது

 மூன்று மாதங்களுக்கு ஒரே நேரத்தில் மருந்துகளை வாங்கும் மக்கள், இப்போது ஒரு வாரத்திற்கு மட்டுமே அவற்றை வாங்குகிறார்கள்.

  புற்றுநோய்க்கான மருந்துகள், குழந்தைகளுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகள்,  ஆஸ்துமாவுக்கான மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன.  எரிபொருள் நெருக்கடி காரணமாக தீவு முழுவதும் உள்ள மருந்தகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 இலங்கையில் உள்ள  சுமார் 6,000 மருந்தகங்கள் விரைவில் மூடப்படுவதைத் தடுக்க மருந்தகங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட வேண்டும்.   ஹாட்லைன்கள் மூலம் ஒரு நாளைக்கு 350 க்கும் மேற்பட்ட  அழைப்புகள்  மருந்துகள் கேட்கின்றன.  இந்த நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் இல்லாமல்,  சேவையை நடத்த முடியாது, இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். 

எரிபொருள் தட்டுப்பாடு இத்துறையை நேரடியாக பாதித்த போதிலும், அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் இன்னும் கிடைக்கவில்லை. இன்சுலின் மற்றும் சப்போசிட்டரிகள் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட வேண்டும், மேலும் அவை செயல்படுவதற்கு ஜெனரேட்டர்கள் தேவை, அதே நேரத்தில் மருந்துகள்சகல  மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். இரண்டிற்கும் எரிபொருள் தேவை. கோவிட்௧9 காலத்தைப் போலவே இந்த  சேவையையும் அத்தியாவசியமாக்குமாறு அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும்   பதில் கிடைக்கவில்லை.

மருந்துப் பொருட்களின் விலையைக் குறைப்பதது இப்போதைக்குச் சாத்தியமில்லை. மருந்து விநியோகிப்பதற்கான எரிபொருளைத் துரிதமாகக் கொடுப்பதற்குரிய ஏற்பாட்டை காலதாமதமின்றி அரசாங்கம்  மேற்கொள்ள வேண்டும்.

 

Tuesday, March 15, 2022

பகையாளியான பங்காளிகள்

 கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக  இரவு பகலாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்  ஒடி ஓடி  பிரசாரம் செய்தவர்களை அரசாங்கம் தூக்கி எறியத் தயாராகிவிட்டது.

  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    ஒரம் கட்டத்தொட்ங்கிவிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களையும் பிரதான உறுப்பினர்களையும் அரசாங்கம் கண்டு கொள்வதில்லை. அரசாங்கத்தில் இருந்து வெளியேறப் போவதாக  மிரட்டும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரலுக்கு எந்த விதமான எதிர்வலைகளும் கிளம்பவில்லை. அதனால்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரல் தானாக அமைதியாகிவிடும்.

 முழு நாடும் சரியான பாதையை நோக்கி” என்ற திட்டத்தை அண்மையில் ஆரம்பித்த அரசாங்கத்தில்  அங்கம் வகிக்கும்  11கட்சிகள்  தனியாகச் செயற்பட முடிவு செய்துள்ளன., தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தலைமையில் ஒரு பரந்த கூட்டணியை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன. குமாரதுங்கவும் இதையே வழிநடத்துவார் என்றும் தி மோர்னிங் தெரிவித்துள்ளது.

“நாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக உணர்கிறோம். ஆம், நாங்கள் கூட்டணி அமைப்பதற்கான விவாத கட்டத்தில் இருக்கிறோம், அதுவும் நிச்சயம் நடக்கும். யார் வழிநடத்துவது என்பது குறித்து, நாம் இன்னும் முடிவு செய்ய வேண்டும். 1997ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாதம் ஒருமுறை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அரசாங்கம் மற்றும் நாடு தொடர்பான தீர்மானங்கள் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் இருந்தது. இப்போது தெளிவாக, அரசாங்கத்தின் முக்கிய நபர்கள் மட்டுமே தங்கள் சொந்த கூட்டங்களைக் கொண்டுள்ளனர், நாங்கள் இரண்டாம் தர குடிமக்களைப் போல ஒதுக்கி வைக்கப்படுகிறோம். இனி யாரும் மகிழ்ச்சியாக இல்லை” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

அமைச்சர்களுடன் கலந்துரையாடாமல் ஜனாதிபதி தனக்குத் தோன்றியவாறு தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், அதனால் இலாகாக்கள் இழந்தாலும் இழப்பதற்கு எதுவுமில்லை என அரசியல் கட்சி உறுப்பினர்கள் கருதுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

"ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவுகளை எடுப்பதில்லை, எனவே யாராவது தங்கள் இலாகாக்களை இழந்தாலும் உண்மையில் இழப்பதற்கு எதுவும் இல்லை" என்று தி மோனிங் தெரிவித்தது.

சந்திரிகா அல்லது மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய 11 கட்சிகள்  இந்தக் கூட்டனியில் இணையலாம் எனக் கருதப்படுகிறது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமான அரசியல் உறவைக் கொண்டிருந்த விமல்  வீரவன்ச, உதய கம்பன் பில ஆகியோர்  பஷிலின் அரசியல் வருகைக்குப் பின்னர் அரசாங்கத்தை மிக  மோசமக விமர்சிக்கத்தொடங்கினர்.  அரசாங்கத்தின் அமைச்சர்கள்  நிதி அமைசரை விமர்சித்ததை ஜ்னாதிபதி ரசிக்கவில்லை. அவர்களின் அமைச்சுப்  பதவி பறிக்கப்பட்டது. தங்களைப் பற்றி நன்கு தெரிந்த மகிந்த  இருப்பதால் அமைச்சுப் பதவியில் ஜனாதிபதி கைவைக்க மாட்டார் என நம்பியவர்களின் நம்பிக்கை பொய்த்தது. இது  மற்றவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது.

இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்னால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இலங்கை அரசுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தையவர் விமல் வீசவன்ச. அன்றைய அரசாங்கத்துக்கு அவர் தேவையாக இருந்தார். விமலின் உதவி தேவை இல்லை என இன்றைய அரசாங்கம் கருதுகிறது.

இதேவேளை,   நேற்று (7) தெரிவித்ததாவது, அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் நாட்டை "சரியான பாதையில்" கொண்டு செல்ல தனியான வேலைத்திட்டத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளன. நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளாகக் கருதப்படும் முன்மொழிவுகளை முன்வைத்து, தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), தேசிய சுதந்திர முன்னணி (NFF), ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, பிவித்துரு ஹெல உறுமய (PHU), தேசிய காங்கிரஸ்,     லங்கா மக்கள் கட்சி, விஜய தரணி தேசிய சபை, ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் யுத்தகம தேசிய அமைப்பு  ஆகிய 11 கட்சிகள்  மார்ச் 6 ஆம் திகதி கூடி தமது எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடின.

“மார்ச் 6ஆம் திகதி பத்து அங்கத்துவக் கட்சிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியல் பேச்சுக்களை நடத்தியதுடன், நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்று ஒப்புக்கொண்டன. இப்போதுதான் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. எங்களின் முன்மொழிவுகளை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அப்படி நடந்தால், ஆட்சியில் இருந்து கொண்டு, பொதுமக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியும். ஆனால், பிரச்சினைகள் இருப்பின் அந்த நேரத்தில் மதிப்பீடு செய்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும்” என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பேராசிரியர் விதாரண தெரிவித்தார்

ஜனாதிபதி கோட்டபாயவையும், பிரதமர் மஹிந்தவையும் அரியணையில் ஏறுவதற்கு ஒன்றுகூடிய  அரசியல் கட்சிகள் அவர்களை  அரசில் இருந்து அகறுவதற்கு ஒன்றிணைகின்றன. தமக்கு விருப்பமானவர்களை அரியணையில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் தமக்கு விருப்பம் இல்லை என்றால் அரியணையில் இருந்து குப்புற விழுத்த வேண்டும் என்ற கொள்கையுடன் செய்யும் அரசியலால் நாட்டுக்கு எந்த வித நன்மையும் ஏற்படப்போவதில்லை.

Wednesday, August 18, 2021

உதைபந்தாட்ட நிர்வாகிகளுக்கு யாழ்ப்பாணத்தில் வரவேற்பு

யாழ்ப்பாண‌த்துக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா உதைபந்தாட்ட சம்மேளனத்தின்  புதிய  நிர்வாகிகளை அங்குள்ள உதைபந்தாட்ட லீக்குகள் வரவேற்பளித்து கெளரவித்தன.

   நடப்பு வருட தலைவர் ஜஸ்வர் உமர், பொது செயலாளர்  .உபாலி ஹேவகே, உப தலைவர்   இ.ஆர்னோல்ட், பிரதி பொது செயலாளர் நிர்வாகம்  தி.வரதராசன், பொருளாளர்  .செல்லர், உப பொருளாளர்  அ.நாகராஜன் ஆகியோரை  வரவேற்று கெளரவிக்கும் வைபவங்கள் வவுனியா, முல்லைத்தீவு, பூநகரி, யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றன.

உதைபந்தாட்ட லீக்குகளின் கழக நிர்வாகிகள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், மாகாண விளையாட்டுத்துறை அதிகாரிகள், மாகாண உடற்கல்வி பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள்,  மீள் குடியேற்றத்தை ஏற்படுத்தி வரும் பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ,வலிகாமம் மேற்கு  பிரதேசசபை தவிசாளர் க.நடனேந்திரன்,    யாழ் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞான அலகின் சிரேஷ்ட விரிவுரையாளர், ஊடகவியலாளர்கள்  ஆகியோரைச் சந்தித்த புதிய நிர்வாகிகள் எதிர்கால கிராமத்தை நோக்கிய உதைபந்தாட்டம் தொடர்பில் கலந்துரையாடினார்

இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும்   மைதான புன‌ரமைப்பு கட்டுமான வேலைகள், பயிற்சிகள், சுற்றுப்போட்டிகள், மத்தியஸ்தர் அபிவிருத்தி, லீக்குகளின் நிதிப் பங்களிப்பு, வளப்பங்கீடு போன்றன வெகு விரைவில் சம காலத்தில் ஆரம்பிக்கப்படும் என தலைவர் ஜஸ்வர் உமர், தெரிவித்தார்.

  வடபகுதியின் அதிகப்படியான வாக்குகளே த‌ன்னை வெற்றி பெற செய்ததாக‌த் தெரிவித்த ஜஸ்வர் உமர்,  வரவேற்பு வழங்கிய லீக்குகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

Friday, July 30, 2021

தீதும் நன்றும்

 

கும்மிருட்டைக்  கிழித்துக்கொண்டு பெரும் சத்தத்துடன் காட்டுப் பாதையில் அந்த உழவு இயந்திரம் சென்று கொண்டிருந்தது.  அதன் பின்னால் கொழுவப்பட்ட பெட்டியில்  இருபத்தைந்து இளைஞர்கள் இருட்டை வெறித்தபடி  பார்த்துக்கொண்டிருந்தனர். அச்சம்,பழிவாங்கல், இலட்சியம் என்பன அவர்களின் கண்களில் மின்னின.

அவர்கள் அனைவரும் புதியவர்கள்,  முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள். வெவ்வேறு கிராமங்களில் வசிப்பவர்கள். இப்படி ஒன்றாக ஒருநாள் இணைவோம் என அவர்கள் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். ஒருவரை ஒருவர் வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தனர். ஏதோ ஒரு இலட்சியம் அவர்களை ஒன்றிணைத்துள்ளது. ஒருவருடன் ஒருவர் பேச ஆசைதான். ஆனால், சூழ்நிலை அவர்களுக்கு  இடம் கொடுக்கவில்லை. சீருடையுடன் துப்பாக்கி ஏந்தியவர்கள் அவர்களைச் சுற்றி இருந்தனர்.

உழவு இயந்திரத்தைச் செலுத்துபவரின்  இரண்டு பக்கங்களிலும் துப்பாக்கியுடன் இருந்த நால்வர் இருட்டைக் கூர்ந்து அவதானித்தபடி இருந்தனர். உழவு இயந்திரத்தின் சத்தத்தால் அச்சப்பட்ட  பறவைகளும் ,குரங்குகளும்  தூக்கம் கலைந்து பாதுகாப்புத் தேடிச் சென்றன.

தமது மக்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை. அவர்கள் பாதுகாப்பாக அச்சமின்றி சுதந்திரமாக வாழ வேண்டும் என தலைவர்கள் பொது மேடைகளில் ஆவேசமாகப் பேசினார்கள். கைதட்டல்கள், விசிலடிப்புகள், இரத்தத்திலகங்களுடன் கூட்டம் கலைந்துவிடும். தலைவர்கள் நிம்மதியாகத் தூங்குவார்கள். அவர்களது ஆவேசப் பேச்சுகளால் தூக்கம் கலைந்த இளைஞர்கள் தீப்பிளம்பானார்கள். தலைவர்கள் சொன்னதைஇரகசியமாகச் செய்து முடித்தார்கள்.

தீவிரவாத இளைஞர்களை பொலிஸார்  சல்லடை போட்டுத் தேடினார்கள். பொலிஸாரின் இழப்பு அதிகரித்ததால் இராணுவம் அழைக்கப்பட்டது.  தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தனது முழு சக்தியையும் பாவித்தது. அது இரு தரப்பிலும் பயங்கரவாதமாக மாறியது.

 திடீரென ஆங்காங்கே சில மின்னல் கீற்றுகளுடன் துப்பாக்கிச் சத்தங்கள் எழுந்தன. உழவு இயந்திரப் பெட்டியில் இருந்தவர்கள் எழுந்தனர்.

"எளும்ப வேண்டாம். இருங்கோ" என யாரோ சத்தமிட்டனர். துப்பாக்கிச் சத்தம் அதிகரித்ததால் அது யாருக்கும் கேட்கவில்லை. கேட்டாலும் அதற்குக் கட்டுப்படும் மன நிலையிலும் அவர்கள் இல்லை. எழுந்தவர்கள்  பொத்து பொத்தென இரத்தம் சொட்டச் சொட்ட விழுந்தனர்.

உழவு இயந்திரம்  வேகமாக ஓடியது. துப்பாக்கியுடன் இருந்தவர்கள் திருப்பிச் சுட்டனர். அமைதியான காடு அல்லோல கல்லோலப்பட்டது.

நந்தனுக்கு சுய நினைவு திரும்பிய  போது அவனுக்குப் புரியாத பாஷையில் சிலர் கதைத்தனர். மெதுவாகக் கண்ணைத் திற‌ந்து பார்த்தான். இடதுகை தோள் மூட்டில் பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. முரட்டுத் தோற்ற‌முடைய சிலர் மங்கலாக‌த் தெரிந்தனர்.

இந்த வைத்தியசாலைக்கு எப்படி வந்தேன்? இடதுகை தோள்மூட்டில் எப்படிக் காயம் ஏற்பட்டது? இது எந்த இடம்? என்னை சுற்றி இருப்பவர்கள் யார்? போன்ற கேள்விகள் அவன் முன் தோன்றின. பழைய ஞாபகங்கள் நந்தனின் ம‌னத்திரையில் ஓடின.

கைதடியும் அதன் சுற்றுப்பகுதியும் நந்தனுக்கு  ஞாபகத்தில்  வந்துபோனது. இலங்கையில் நடைபெறும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக்கொண்டுவர இந்திய அமைதி காக்கும் படை ஆயுதங்களுடன் வந்து இற‌ங்கிய காலம் அது. சமாதானம் பேச வந்தவர்கள் சண்டித்தனம் காட்டினார்கள். இலங்கை அரசுக்கு எதிரான உள் நாட்டுப் போர் இந்திய அரசுக்கு எதிராகத்  திசைமாறியது.

இலங்கையில் நடக்கும் யுத்தத்தில் பங்கு பெறாமல் ஒதுங்கி இருந்த குடும்பங்களில் நந்தனின் குடும்மும் ஒன்று. சுற்றி வளைப்பு, கைது,விசாரணை எல்லாம் பழகிப் போய்விட்டது.

சாவகச்சேரி சந்தையில் நந்தனின் தகப்பன் மரக்கறி வியாபாரம் செய்து குடும்பத்தைப் பார்த்தார்.  படிப்பு ஏறாததால் பாடசாலையை முடித்துக்கொண்ட நந்தன் தகப்பனுக்கு உதவியாக இருந்தான். தாய், இரண்டு சகோதர்கள் என அளவான குடும்பம். வருமானம் பெரிதாக இல்லை என்றாலும்  மகிழ்ச்சியான   வாழ்க்கை அமைந்தது.

இந்திய ஹெலிக்கொப்டர் சாவகச்சேரிச் சந்தையின்  மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் நந்தனின் தகப்பனும் சதைப் பிண்டமானார். மரக்கறி கொள்முதல் செய்வதற்காகத் தோட்டத்துகுச் சென்றதால் நந்தன் தப்பினான்.அடுத்து என்ன செய்வதெனத் தெரியாது தவித்தது நந்தனின் குடும்பம்.

தகப்பனின் இழப்பில் இருந்து மெது மெதுவாக வெளியே வந்த நந்தன் தனக்கு உதவியாக மரக்கறி வியாபாரத்துக்கு தாயை அழைத்துச் சென்றான். அவனது சகோதரர்கள் இருவரும் பாடசாலையில் படிக்கின்றனர் தகப்பனின் மறைவு நந்தனை உலுக்கியது. இந்திய இராணுவத்தைக் காணும்போதெல்லாம் இரத்த‌ம் துடித்தது. மிகவும் அமைதியான நந்தனின் குணாம்சம் தகப்பனின் கொடூர மரணத்தால் மாறியது.

இயக்கத்துக்கு ஆட்களைச் சேர்ப்பதாக நந்தனின் நண்பன் ஒருவர் கூறினான். அவனுடன் கதைத்து விபரம் அறிந்தபின்னர் தனது பெயரையும் சேர்க்கும்படி சொன்னான் நந்தன். நண்பன் கொடுத்த தகவலின் படி இரவு எட்டு மணிக்கு வாசிகசாலையடியில் நந்தன் காத்திருந்தான். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் நந்தனின் பெயரைக் கூறி அழைத்துச் சென்றார். உள் வீதியூடாக மட்டுவிலை நோக்கிச் சென்றது அந்த மோட்டார் சைக்கிள்.

சண்டை சுற்றிவளைப்பு என்பனவற்றால் மட்டுவிலுக்கு அப்பால் உள்ள கிராமங்களைப் பற்றி  நந்தனுக்கு எதுவும்  தெரியாது.சுமார் அரை மணித்தியாலத்தின் பின்னர் புலிகளின் முகாம் ஒன்றுக்குள் அந்த மோட்டார் சைக்கிள் நுழைந்தது.  நந்தனை அழைத்துச் சென்றவர் அவனை ஒருவரிடம் கையளித்தார் அவர் நந்தனிடம் சில  கேள்விகளைக் கேட்டார். நந்தன் பதிலளித்தான். நந்தனின் பெயர் விபரம் எல்லாம் பதிந்த  பின்னர் அவனை இன்னொருவரிடம் ஒப்படைத்தார்.

நந்தனை அழைத்துச் சென்ற‌வர் அந்த முகாமில் உள்ள கட்டடத்தின் ஒரு அறைக்குள் விட்டார்.  அங்கே  இன்னும் பலர் இருந்தனர். சிறிது நேரத்தில் அனைவருக்கும் சாப்பாடு கொடுக்கப்பட்டது. அறைக் கதவு  திறந்து இருந்தது. ஆனால், துப்பாக்கி ஏந்தியவர்கள் வாசலில் இருந்தார்கள்.  நந்தனை விட வயதில் கூடியவர்களும்  அவனை விட வயது குறைந்தவர்களும் இருந்தார்கள்.

கையில் துண்டுடன் வந்த ஒருவர் ஒவ்வொரு பெயராக வாசித்தார். பெயருக்குரியவகள் எழுந்து வெளியே சென்றனர். நந்தனின் பெயர் வாசிக்கப்பட்டபோது நந்தன் எழுந்து சென்றான். அந்தக் கட்டடத்துக்கு வெளியே வரிசையாகச் சென்றனர். நந்தனுக்குப் பின்னாலும் சிலர் சென்றனர்.முன்னால் சென்றவர்கள் உழவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்ட  பெட்டியில் ஏறினார்கள். நந்தனும்  ஏறினான்.

முன்னுக்கும் பின்னுக்கும் துப்பாக்கி ஏந்திய மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்புடன் உழவு இயந்திரம் அந்த முகாமை விட்டு வெளியேறியது. சுமார் ஒரு மணி நேரப் பயண‌த்தின் பின்னர் கடற்கரையைச் சென்ற‌டைந்தது உழவு இயந்திரம். உழவு இயந்திரத்தில் இருந்த அனைவரும்  வேறு ஒரு குழுவிடம் கையளிக்கப்பட்டனர். அங்கேயும் துப்பாக்கி ஏந்தியவர்கள் காவல் காத்தனர். ஆனால், அவர்களின் கைகளில் நவீன துப்பாக்கிகள் இருந்தன.இப்படி ஒரு துப்பாக்கியுடன் நான் வலம் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை  என நந்தன் நினைத்தான்.

உழவு இயந்திரத்தில் வந்தவர்களை பெயர் சொல்லி கடல் பக்கம் அழைத்துச் சென்றார்கள். கடலினுள் மரத்தாலான பாதை போடப்பட்டிருந்தது.அதன் மேல் சென்றவர்கள் பாதையில் கட்டப்பட்டிருந்த  போட்களில்  ஏறினார்கள்.  பத்துக்கும் மேற்பட்ட போட்கள்  ஒரே நேரத்தில் கடலைக் கிழித்துக்கொன்டு புறப்பட்டன. கடல் பயணம் நந்தனுக்கு புதியது. மனது படபடத்து பயப்பட்டான்.

கடற்க‌ரை வெளிச்சங்கள் மெல்ல மெல்லத் தூரமாகி ம‌றைந்தன. கண்ணுக் கெட்டிய தூரத்துக்கு தண்ணீர்தான் தெரிந்தது.மேலே நட்சத்திரங்கள் மின்னின. எங்கோ தூரத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டன.

போட் பயணம் அமைதியாக இருந்தது. நந்தன் இருந்த  போட்டுக்குள் துப்பாக்கியுடன் சிலர் இருந்தனர். எந்தத் திசையை நோக்கிச் செல்கிறோம் எனத்தெரியாமல் ஒருவரை ஒருவர் அச்சத்துடன் பார்த்தனர்.

" போன கிழமை நேவி அடிச்சு இந்த இடத்திலைதான் ரண்டு போட் தாண்டது. நாப்பது பேர்செத்துப்போச்சினம்" என துப்பாக்கி ஏந்திய ஒருவர் சொன்னார்.

அது உண்மையோ பொய்யோ தெரியாது நந்தனுக்கு வயிற்றைக் கலக்கியது. மற்றவர்களும்  மிரட்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.துப்பாக்கி ஏந்திய இன்னொருவர் சிரித்ததை யாரும் கவனிக்கவில்லை.

பதை பதைக்கும் போட் பயணம் ஒருவாறு முடிவுக்கு வந்தது. இடுப்பளவு தண்ணீரில் அனைவரும் இற‌ங்கி நடந்தனர். நந்தனும் இன்னும் சிலரும் உழவு இயந்திரப் பெட்டி  ஒன்றில் ஏற்றப்பட்டனர். ஆட்கள் சரி பார்க்கப்பட்ட பின்னர் வேறு சிலர் அவர்களைப் பொறுப்பேற்றனர். கடற்கரையில் இருந்து புறப்பட்ட உழவு  இயந்திரம், காட்டுப்பாதையை  நோக்கிச் சென்றது.

நந்தனை யாரோ தட்டி எழுப்பினார்கள். நந்தன் மெதுவாக கண்னைத் திறந்து பார்த்தான். அவனைச் சுற்றி இந்திய இராணுவம் நின்றது. யாரைக் கொல்ல வேண்டும் என சபதம் எடுத்து வீட்டை விட்டுப் புற‌ப்பட்டானோ அந்த  இராணுவத்திடம் தான் கைதியாக இருப்பதை  எண்ணி வெட்கப்பட்டான்.

காட்டுக்குள் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்து தான் கைது செய்யப்பட்டிருப்பதை நந்தன் புரிந்து கொன்டான்.   உழவு இயந்திரத்தில் தன்னுடன் வந்த யாராவது இருக்கிறார்களா என மெதுவாக நோட்டமிட்டான். தெரிந்தவர்கள் யாரும் இல்லை.

இந்திய இராணுவத்துடன் சில தமிழ் இளைஞர்களும் துப்பாக்கியுடன் நின்றார்கள். தமிழ் தெரிந்த இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் நந்தனை விசாரணை செய்தார். பெயர்,ஊர்,தகப்பன்,தாய்,சகோதரங்கள் போன்றவற்றை நந்தன் மறைக்காமல் சொன்னான். இந்திய இராணுவத்தின் தாக்குதலில் தகப்பன் கொல்லப்பட்டதையும், இயக்கத்துக்கு விரும்பிப் போனதையும் சொல்லவில்லை.

 

பாடசாலை மைதானத்தைச்  சுற்றி முள்ளுக் கம்பி அடித்து திறந்த வெளிச் சிறையில் நந்தனைப் போல் நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டனர். நான்கு மாதங்களின் பின்னர் சமையல் கூடத்தில் நந்தனுக்கு வேலை கொடுக்கப்பட்டது.அப்போது அவனுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்தது. ஆனாலும், சமையல் கூடத்தை விட்டு வெளியில் எங்கும் செல்ல நந்தனுக்கு அனுமதியில்லை. நந்தன் தங்கி இருக்கும் சமையல் கூடம்  மிகப் பெரிய முகாமின் மத்தியில் உள்ளது. இது தான் வாழ்க்கை இந்த முகாம் காட்டுக்கு மத்தியில் இருக்கிறதா நகரத்தில் இருக்கிறதா அல்லது கிராமத்தில் இருக்கிறதா என நந்தனுக்குத் தெரியாது.

  நந்தன் கைது செய்யப்பட்டு ஒரு வ‌ருடம் கடந்து விட்டது.தாயும் சகோதரர்களும் எப்படி இருப்பார்கள் எனத்தெரியாமல் தினமும் தவிப்பான். தான் இயக்கத்துக்குப் போகும் தகவலை நந்தன் தாய்க்குத் தெரிவிக்கவில்லை. இந்திய ஆமியால் கைது செய்யப்பட்ட‌ சிலர் விடுதலையானார்கள்.  தான் விடுதலையாகி வீட்டுக்குப் போனால் இயக்கம் வந்து என்ன செய்யும் எனத்தெரியாது நந்தன் குழம்பினான்.

 அந்த முகாமின் பொறுப்பதிகாரியான இந்தியத் தமிழர் சமையல் கூடத்துக்கு வரும்போது நந்தனுடன் சகஜமாகக் கதைப்பார். அது அவனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அந்த அதிகாரி வேறு முகாமுக்கு மாற்றமாகி போவதாக அங்குள்ளவர்கள் கதைத்தனர். அதனால் நந்தன் கவலையடைந்தான்.

சமையல் கூடத்துக்கு வந்த அந்த அதிகாரி நந்தனுடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு  என்னுடன் வருகிறாயா எனக் கேட்டார்.

நந்தன் பதில் எதுவும் கூறாமல் தயங்கினான்.தன்னுடன் வந்தால் சமையல் வேலை செய்ய வேண்டாம். பயிற்சி தந்து துப்பாக்கி தருவதாக‌  விளக்கமளித்தார்.

கால மாற்றம் நந்தனை வேறுபாதையில் கொண்டு சென்றது. இந்திய இராணுவத்திடம் கைதியாக அகப்பட்ட பல இளைஞர்கள் இப்போது இந்திய இராணுவத்துடன் சேர்ந்து ஆயுதம் ஏந்தி தாம் கொண்ட கொள்கைக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். ஆயுதப் பயிற்சி பெற நந்தன் ஒப்புக்கொண்டான்.

இராணுவப்பயிற்சி முடிந்ததும் மீண்டும் அந்த அதிகாரியிடம் நந்தன் ஒப்படைக்கப்பட்டான். அவர் இப்போது முகாமுக்குப் பொறுப்பதிகாரி அல்ல.சுற்றி வளைத்து தேடுதல் நடத்தும் சிறப்புப் படையின்  பிரதான அதிகாரி. புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கும் தகவல்களை விசாரித்து இந்திய இராணுவத்துக்கு எதிராக செயற்படுபவர்களைக் கைது செய்வதுதான் அந்த அதிகாரியின் பிரதான கடமை அதற்காகவே நந்தனைப் போன்ற‌வர்களைத் தனக்கு அருகில்  வைத்திருக்கிறார்.

அந்த அதிகாரியின் கீழ் நந்தன் பணியாற்றத் தொடங்கி ஆறு மாதம் கடந்து விட்டது. இப்போது அவனது பெயர் ரொபேட். இந்திய இராணுவத்துடன் இணைந்ததால் அவனது பாஷையும் மாறிவிட்டது. அவனது பிற‌ப்பிடம் யாழ்ப்பாணம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அதனை வெளிக்காட்ட அவனும் விரும்பவில்லை.

தேடுதல் வேட்டையின் போது பல‌ முறை நேரடி மோதல்கள் நடைபெற்றன. பலர் காயமடைந்தனர். சிலர் இறந்தனர். அவர்களில் இந்திய இராணுவத்தினரும், தமிழ் இளைஞர்களும் அடக்கம்.  அந்த அதிகாரியின் தலைமையிலான குழு வவுனியா,கிளிநொச்சி,பரந்தன் என பல இடங்களிலும் தேடுதல் நடத்தி இயக்கத்துக்கு எதிராக செயற்பட்டது.

ஒரு நாள்  அவர்களுக்குக் கிடைத்த  புலனாய்வுத் தகவலை அடுத்து நள்ளிரவில் இரண்டு ட்ரக்களில் புற‌ப்பட்டனர்.  அதிகாலையில் அவர்கள் அனைவரும் ஒரு கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். அந்தக் கிராமத்தில் இருந்து வேலைக்குச் சென்ற அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். கிராமத்துக்குள் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருள் விலகி வெளிச்சம் பரவியபோது  தாங்கள் கைதடியில் நிற்பதை நந்தன் அறிந்துகொண்டான். தேடுத‌ல், பாதுகாப்பு என்பனவற்றுக்காக பலாலியில் இருந்துவந்த பெருமளவான இந்திய இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்துகொண்டனர்.

வீடுவீடாகச் சென்ற இந்திய இராணுவத்தினர் ஆண்களின் அடையாள அட்டைடையை வாங்கிக்கொண்டு அருகில் உள்ள பாடசாலைக்குச் செல்லும்படி  கூறினர். ஆண்களும், இளைஞர்களும் மரணப் பீதியுடன் இராணுவத்தின் பின்னால் சென்றனர். பெண்களும், குழந்தைகளும் அழுது குழறி மண்றாடினர். ஒரு சிலர் கையெடுத்துக்கும்பிட்டு, காலில் விழுந்து கெஞ்சினர். இராணுவக் கட்டளையின் செவிகளில் அவை எவையும் விழவில்லை.

 

பிரதான அதிகாரியும் அவருக்குப் பாதுகாப்புக்காகச் சென்றவர்களும் நந்தனின் கிராமத்துக்குள் நுழைந்தனர். தாயையும், சகோதரர்களையும் சந்திக்கலாமா உறவினர்களைக் காணலாமா என அவன் மனம் பரபரத்தது. அந்தக் கிராமத்தில் உள்ள அனைவரையும் நந்தன் அடையாளம் கண்டுகொண்டான்.யாராவது தன்னை அடையாளம் கண்டு உதவி கேட்பார்களோ என‌ நந்தன் அச்சப்பட்டான். பயத்துடன் இராணுவத்தைப் பார்த்தவர்கள் நந்தனைக் கவனிக்கவில்லை.

பிரதான அதிகாரி சைகை காட்டியதும் துணைக்கு வந்த இராணுவத்தினர் பச்சைக் கலர் அடித்த வீட்டைச் சுற்றி வளைத்தனர்.மேலதிகாரியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து செயற்பட்ட நந்தன் முதன் முதலாக  பதற்றப்பட்டான். வீட்டுக்குள் சென்ற  இராணுவத்தினர் நந்தனின் தாய் மாமனான கோபாலை இழுத்துவந்தனர்.கோபாலின் மனைவியும் பிள்ளைகளும் பெரும் சத்தமிட்டபடி பின்னால் வந்தனர்.பிரதான அதிகாரி கோபாலை விசாரித்தார்.

"பேரென்ன"

"கோபால்"

'புலிக்கு சப்போட்டா"

"இல்லை"

'பொய் சொல்லாதை"

"இல்லை, ஐயா நான் கூலி வேலை செய்யிறனான்."

"எனக்கு எல்லாம் தெரியும். போன கிளமை ஐஞ்சு பேர் இங்கை தங்கினவை"

"இல்லை. ஐயா ஒருவரும் இங்கை வரேல்லை"

"எங்களைப்பற்றி சொல்லிக்குடுக்கிறது நீ தானே"

"இல்லை ஐயா, ஒருதரும் வரேல்லை."

கோபாலும் அவரது குடும்பத்தினரும் மன்றாடினர். வீட்டுக்குள் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்திய இராணுவத்தினர் வெறும் கையுடன் வெளியே வந்தனர். கோபாலின் மகன் சயந்தனுடன் சற்று தூரம் சென்ற அந்த அதிகாரி தனியாக விசாரித்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு இல்லை என தலையாட்டி பதில் சொன்னதை அனைவரும் அவதானித்தனர்

"ரொபேட் ரண்டு  பேரையும் கூட்டிப்போ" என‌ அதிகாரி  உத்தரவிட்டார்.யாரந்த ரொபேட் என கோபாலின் குடும்பத்தினர் பார்த்தனர். அவர்கள் நந்தனை அடையாள‌ம் கண்டனர்.

கோபாலின்  கையைப் பிடித்து நந்தன் கூட்டிச் சென்றான். இன்னொரு இராணுவச் சிப்பாய் கோபாலின் மகன் சஜந்தனைக் கூட்டிச் சென்றான்.

"அட சண்டாளா என்ரை  மனிசனை பழிவாங்கிட்டியே" என கோபாலின் மனைவி பெருங்குரலெடுத்து அலறிய சத்ம் அந்தக் கிராமம் எங்கும் எதிரொலித்தது.

 

காற்று வெளி  இணையசஞ்சிகை

சித்திரை 2021

சூரன்.ஏ.ரவிவர்மா