Sunday, July 17, 2016

அடக்க வந்தவரின் உயிரைப்பறித்த காளை


ஸ்பெய்ன் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளில் காளை அடக்கும் போட்டி பிரபலமானது. மிகப் பெரியதொரு மைதானத்தில் பண்டைய உடை அணிந்த ஒருவர் சீறிவரும் காளைக்கு முன்னால் சிவப்புத்துணியைக் காட்டி அம்புகளால் குத்தி காளையைக்கொல்வார்.  ஆயிரக்கணக்கான   ரசிகர்கள் மைதானத்திச் சுற்றி இருந்து ஆரவாரம் செய்வார்கள். கடந்த வாரம்  நடைபெற்ற காளை அடக்கும் போட்டியில் விக்ரர் பாரியோ என்ற 29 வயதான இளம் வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். 21 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற மிக மோசமான உயிர்ப்பலி இதுவாகும்.
ஸ்பெய்ன் நாட்டின் தெரிதல் எனும் நகரில் நடைபெற்ற காளை அடக்கும் போட்டியைக் காண  வழக்கம் போல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குழுமி இருந்தனர். பாரியோவின் வீரத்தைக் காண்பதற்காக அவரது காதல் மனைவி ரிகுயில் செனாவும் பார்வையாளர் பகுதியில் இருந்தார்.சீறிவந்த காளையில் முதுகில் பாரியோ சில அம்புகளைச் செலுத்தினார். ரசிகர்கள் ஆரவாரம் செய்து பாரியோவை உற்சாகப்படுத்தினர்.


செகோவியா நகரில் பிறந்தவர் பாரியோ. மாட்ரிட் அருகே இந்த நகரம் உள்ளது. கோல்ப் கிளப் ஒன்றில் இவர் பணியாற்றி வந்தார். நீண்ட காலமாகவே காளை பிடி வீரராக வேண்டும் என்ற ஆர்வத்தில் அதற்காக பயிற்சி பெற்று வீரராக மாறினார்.  2012ம் ஆண்டு முதல் இவர் முழுமையான காளைச் சண்டை வீரராக மாறி காளைகளை அடக்கி வந்தார் ஸ்பெய்ன் நாட்டின் தெரியல் என்ற நகரில்தான் இந்த காளைச் சண்டைப் போட்டி நடந்தது. வருடா வருடம் நடக்கும் பெரியா டெல் ஏஞ்செல் என்ற திருவிழாவின் ஒரு பகுதியாக காளைச் சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாரியோவின் வெற்றியை எதிர்பார்த்திருந்த வேளையில் திடீரெனத்திரும்பிய காளை பாரியோவின் நெஞ்சைக்குத்திக்கிழித்து அவரைத் தூக்கி எறிந்தது. பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறந்தனர். விசைந்து சென்ற பாதுகாவலர்கள் பாரியோவை  மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பினர். கணவனின் வீரத்தைக் காணவந்த செனா  அவரின் மரன ஓலத்தைக் கேட்டுத் துடித்தார். கணவனின் வெற்றியைக் கண்டு ரசிக்க விரும்பிய செனா அவரின் மரணத்தைக் கண்டு கலங்கினார்.


காளை அடக்கும் போட்டியில் ஏற்கெனவே  பல வீரர்கள் மடிந்தனர். காளை கட்டுமீறி பார்வையாளர் பகுதிக்குள் புகுந்ததனால் பார்வையாலர்கள் பலர் இறந்தனர்.  1984 ஆம் ஆண்டு  நடந்த போட்டிகளின்போது 5 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பிரபலமான காளை பிடி வீரர் பிரான்சிஸ்கோ ரிவேராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1985 ஆம் ஆண்டு ஜோஸ் ஜியோ என்ற வீரர் மரணமானார். பிரபலமான வீரரான மனோலா மொண்டிலுயு, ரமொன் சொரொ ஆகிய  இருவரும் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கும் ஸ்பெயினில் நடைபெறும்  காளை அடக்கும் போட்டிக்குமிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஜல்லிக் கட்டின் போது காளைக்கு எதுவித துன்பமும் நேர்வதில்லை. ஆனால், ஸ்பெயினில்  நடைபெறும் காளை அடக்கும் போட்டியின் போது அம்புகளால் குத்தப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக காளை அடக்கப்படுகிறது. இந்தியாவில் ஜல்லிக்கட்டுக்குத்தடை விதிக்கபட்டுள்ளது.  இந்தியாவைக் குறிவைக்கும் பீட்டா  போன்ற அமைப்புகளின் பட்டியலில் ஸ்பெய்ன் என்றொரு  நாடு  இல்லை.
வர்மா



No comments: