அரசியலில் சக்தி மிக்கவராகத் திகழ்ந்த தமிழக
முதல்வர் செல்வி ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்குக்
காலமானார் என்ற செய்தி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை சோகத்தில்
ஆழ்த்தியுள்ளது. காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவு
ஆகிய நோய்த்தக்கத்தினால் கடந்த செப்ரெம்பர் மாதம் 22 ஆம்
திகதி சென்னை அப்பலோ வைத்தியசாலையில்
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களின் பின்னர்
சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மரணம்
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு
மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாம் கட்டத் தலைவர் இல்லாத கட்சியாக
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஜெயலலிதா கட்டி எழுப்பி உள்ளார். எம்.ஜி.ஆரின்
மறைவுக்குப் பின்னர் இரண்டாகப்
பிரிந்த கட்சியை மீண்டும் ஒன்றாக்கி அரியணையில் ஏற்றிய பெருமை
ஜெயலலிதாவைச்சாரும். அரசியல் சனக்கியாரான கருணாநிதிக்கு தக்க பதிலடி கொடுத்து
தந்து அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டவர் ஜெயலலிதா. வைகோ,ராமதாஸ்,
விஜயகாந்த ஆகியவர்களின்
கட்சிகளுக்கு அரசியல் அங்கீகரம்
பெற்றுக்கொடுத்தவர். தனது தேவை
முடிந்ததும் அவர்களை அரசியல் அநாதையாக்கி
தனது கட்சியை முன்னுக்குக் கொண்டு வந்த அரசியல் வித்தகர்.
ஜெயலிதாவின் இழப்பு
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மிகப்பெரிய பேரிடி. ஜெயலலிதாவின் மறைவுக்கு
இரங்கல் தெரிவித்த எதிர்க் கட்சிகளுக்கு ஜெயலலிதா இல்லாத அரசியல் மிகவும்
இலகுவானதாக இருக்கப்போகிறது.
ஜெயலலிதா
இறந்துவிட்டதாக கடந்த திங்கட்கிழமை மாலை
வெளியான செய்தியால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்கள் சோகத்தில் அளந்தனர். சிலர் கொதித்துப்போய் வன்முறையைக் கையில் எடுத்தனர். ஜெயலலிதா
இறக்கவில்லை என அப்பலோ அறிக்கை வெளியிட்டதால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
நிம்மதியாக நித்திரைக்குப் போனவர்கள் கலையில் எழுந்ததும் ஜெயலலிதா மரணமான
செய்தி அதிர்ச்சியளித்தது. ஜெயலலிதாவுக்கு
மாரடைப்பு வெளியான செய்தியைக் கேள்விப்பட்ட ஐந்து பேர் அதிர்ச்சியில்
இறந்துவிட்டனர். ஐவர் மாரடைப்பால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமாவும்
ஏழைகளுக்கு செய்த உதவியும் எம்.ஜி.ஆரை முதலமைச்சராக்கியது. எம்.ஜி.ஆரின் அரவணைப்பும்
ஆதரவும் ஜெயலலிதாவை முதல்வராக்கியது.
அரசியலுக்குள் நுழைந்த போது
அரசியல் பற்றிய பாலபாடம் எதுவுமே
தெரியாதவராக இருந்த ஜெயலலிதா தந்து ஆற்றலின் மூலம் அரசியல்வித்தகர்களை
எல்லாம் ஆட்டிப்படைத்தார்.
ஜெயலலிதாவின்
நம்பிக்கைக்குரிய பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராகப்
பதவி ஏற்றுள்ளார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளனர். இவர்கள் பதவிப்பிரமாணம்
செய்யும் வரை ஜெயலலிதாவின் மரணச்செய்தி
வெளியிடப்படவில்லை. ஜெயலலிதா மரணமான பின்னர் இரகசிய அரசியல்காய் நகர்த்தல்கள் பல நடைபெற்றுள்ளன. ஜெயலலிதாவின் இறுதிக்கிரியை இன்று மாலை
செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இனிமேல்தான் தமிழக அரசியல் சூடுபிடிக்க
உள்ளது.
No comments:
Post a Comment