Friday, December 9, 2016

ஜெயலலிதா இல்லாது வெறிச்சோடிய தமிழகம்

 
தமிழக அரசியலில் சக்தி மிக்க  ஆளுமையாக தன்னை  வளர்த்துக்கொண்டவர் ஜெயலலிதா. பலம்  மிக்க அரசியல் தலைவரான கருணாநிதியை   எதிர்த்து அரசியலில் உச்சத்தைத் தொட்டவர் எம்.ஜி.ஆர். அரசியல்  சதுரங்கத்தில் சரியான  திசையில் காய் நகர்த்தும் கருணாநிதியின்  சாதுரியத்தை தவிடு பொடியாக்கியவர் எம்.ஜி.ஆர். அவரால்  உருவாக்கப்பட்ட  அண்ணா திராவிட முன்னேறக் கழகம்  கருணாநிதியின் அரசியல் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. சினிமாவின் செல்வாக்கு எம்.ஜி.ஆரை முதல்வராக்கியது என்றார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின்  மனதில் இருந்த இரக்கம்,மனிதாபிமானம்   என்பனதான் அரசியல் வானில் அவரை உச்சத்துக்குக் கொண்டு போனது.

சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஜெயலலிதா அரசியலில் அவரை தன் குருவாக மனதார ஏற்றுக்கொண்டார். ஜெயலலிதாவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த எம்.ஜி.ஆர் அரசியலில் தனக்கு அடுத்த நிலைக்கு அவரை உயர்த்தினார். ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் முக்கியத்துவம் கொடுப்பதை  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஏனைய தலைவர்கள் விரும்பவில்லை. ஜெயலலிதாவை மாநிலங்களவை உறுப்பினராக்கிய எம்.ஜி.ஆர் அவரை  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்கினார். எம்.ஜி ஆர் இறந்தபின் கழகம் இரண்டாகியது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் பின்னால் சிலரும் ஜெயலலிதாவின் பின்னால் சிலரும் நின்றதால் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. தேர்தலில் கட்சி படுதோல்வியடைந்தது. ஜானகியும் ஜெயலலிதாவும் தோல்வியடைந்தனர். 
எம்.ஜி. ஆரால் ஆரம்பிக்கப்பட்ட  கட்சியின் நிலையைப் பார்த்த ஜானகி ஒதுங்கிக்கொண்டார். ஜெயலலலிதாவின் கை  ஓங்கியது. எம்.ஜி ஆரின் பெயரை முன்னிறுத்தி தமிழகத்தின் முதலமைச்சரானார்  ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும்வரை தமிழக முத்தலமைச்ச்ர் கதிரையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கருணாநிதி அவரின் மறைவுக்குப் பின்னர் முதலமைச்சரானார். முதல்வர் பதவியில் இருந்து தன்னை யாரும் அசைக்க முடியாது என நினைத்த கருணாநிதிக்கு  ஜெயலலிதா செக் வைத்தார். ஜெயலலிதாவின் திட்டமிடலும் அரசியல் வியூகமும் கருணாநிதிக்கு சவால் விடுத்ததோடு  அவரை அரியணையில் இருந்து இறக்கியது. தமிழக அரசியலைத் தாண்டி மத்திய அரசிலும் ஜெயலலிதாவின் செல்வாக்கு கோலோச்சியது.ஜெயலலிதாவை வீழ்த் எடுத்த  முயற்சிகள் அணைத்தும் வீணாகின.

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஜெயலலிதாவை அரியணையில் இருந்து இறக்க வேண்டும் என விரும்பின. அதற்காக ஒன்றுசேர அவை முன்வரவில்லை. இச்சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திய ஜெயலலிதா வாக்கு வங்கி இல்லாத சிறிய கட்சிகளுடன் ஒன்றிணைந்து தேர்தல்களைச் சந்தித்து வெற்றி பெற்றார். கட்சியாக நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற, தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தமிழகத்தின் சகலகட்சிகளும்  கூட்டணி சேர்ந்து தேர்தலைச்சந்தித்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனிஒரு கட்சியாக தேர்தலைச்சந்தித்து வெற்றி பெற வியூகம் வகுத்தவர் ஜெயலலிதா. 
  
இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது.  ஜெயலலிதாவின்  அரசியல் எதிரியான கருணாநிதி உடல் நிலை பாதிக்கபட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. முறைப்படி ஸ்டாலினைத் தலைவராக அறிவிப்பதற்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.வைகோ, ராமதாஸ் ஆகிய இருவரும் அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டார்கள். அடுத்து என்ன செய்வதெனத் தெரியாது திருமாவளவன் தடுமாறுகிறார். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் போட்டியாகக் களம்  இறங்கிய விஜயகாந்த் அரசியல் அரங்கில் எள்ளி நகையாளப்படுகிறார். தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதீய ஜனதாவும் தமிழகத்தில் கால் பதிக்க முயற்சி  செய்து தோற்றுப் போயுள்ளன.  கொம்யூனிஸ்ட் கட்சியும் மாக்சிஸ்ட்  கட்சியும் அறிக்கை வெளியிட்டு தமது இருப்பை வெளிக்காட்டுகின்றன.


 . அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதாவைத் தவிர வேறு தலைவர்கள் யாரும் இல்லை. அரசியல் கட்சிகள் அனைத்திலும் தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவர் ஒருவர் அடையாளம் கட்டப்பட்டுள்ளார். பல கட்சிகள் தலைவரின் வாரிசை அடுத்த தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளன ஜெயலலிதாவுக்கு குடும்பம் இல்லாததால் மக்களுக்காகவே நான் என்ற கோஷத்தை முன்வைத்துள்ளார். அதை தொண்டர்கள் மலை போல் நம்பி உள்ளனர். ஜெயலலிதாவுக்காக எதையும் செய்ய அவர்கள் தயாராக  இருந்தனர். ஜெயலலிதாவுக்கு எதிராக 20 க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஒரு வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டபோது தமிழகம் கலவர பூமியானது. கல்லூரி பஸ் ஒன்று எரிக்கப்பட்டு மூன்று மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள்.  மேன்முறையீட்டில்  அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். பெங்களூரில் நடைபெறும் சொத்துக்குவிப்பு வழக்கு உட்பட சிலவழக்குகள்  நிலுவையில் உள்ளன.


அண்ணா திராவிட  முன்னேற்றக் கழக பெயரிலும் கொடியிலும் அண்ணாத்துரை இருக்கிறார். எம்.ஜி.ஆர் ஓரம் கட்டப்பட்டும் இரண்டு தசாப்தம் கடந்துவிட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் ஜெயலலிதா. ஜெயலலிதாதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற நிலைப்பாடு தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனால் ஜெயலலிதா மகிழ்ச்சியடைந்தார். ஆனால், கட்சியின் எதிர்காலத்துக்கு இது அப்பு வைக்கும் என்பதை அவர் உணரத்தவறிவிட்டார். ஜெயலலிதாவின் மரணம் கட்சிக்குள் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டது. ஜெயலலிதாவுக்கு அடுத்த தலைவர் யாரென்பதை கட்சிப் பிரமுகர்களாலும் தொண்டர்களாலும் அடையாளம் காணமுடியவில்லை.

ஜெயலலிதா குற்றவாளி என நீதி மன்றம் இரண்டு முறை தீர்ப்பளித்தபோது இரண்டு முறையும் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான  பன்னீர்ச்செல்வ‌த்தை முதலமைச்சராக்கினார். ஜெயலலிதா இல்லாதபோது அவரால் கைகாட்டப்பட்ட பன்னீர்ச்செல்வ‌த்தைத் தலைவராக ஏற்றுக்கொள்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்  தலைவர்கள் தயாராக இல்லை. ஜெயலலிதா முதல்வராக் இருந்தபோது அவரது  காலில் விழுந்த கூட்டம் பன்னீர்ச்செல்வ‌த்துக்குத் தலைவணங்க விரும்பவில்லை. ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் தமிழகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாரதீய ஜனதா விரும்புகிறது. ஜெயலலிதா  இறந்ததைக் கேள்விப்பட்டதும் மத்திய அமைச்சர்  வெங்கையா நாயுடு உடனடியாகத் தமிழகத்துக்கு விஜயம்செய்து ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்யும் வரை சகலதையும் கண்காணித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி முதலில்  சசிகலாவின் தலையில் கைவைத்து  ஆறுதல் கூரியபின்னர் முதலமைச்சர் பன்னீர்ச்செல்வ‌தைக் கட்டிப்பிடித்து தேற்றினார்.

ஜெயலலிதா இல்லாத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த  தலைவர் சசிகலா என்பதை மறைமுகமாக பிரதமர் மோடி மறைமுகமாக வெளிக்காட்டி உள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தின்பின்னர் குழப்ப நிலை எற்படகூடாது என்பதற்காக கள்ள மெளனம் கடைப்பிடிக்கப்படுகிறது.  ஜெயலலிதாவின் இடத்தில் சசிகலாவை வைத்துப்பார்க்க கழகத்தின் அடிமட்டத் தொண்டர்கள் விரும்பமாட்டார்கள்.அறிஞர் அண்ணாவும் எம்.ஜி.ஆரும் முதலமைச்சராக இருக்கும் போது மரணமானார்கள். உடனடியாக தற்காலிக முதலமைச்சர் நியமிக்கப்பட்டு இறுதிக்கிரியை முறைப்படி முதலமைச்சரும் இதர அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்தார்கள். ஜெயலலிதா இறந்த உடனே முதலமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பூத உடலுடன் மந்திரிசபையின் புகைப்படமும் வெளியானதை மனிதாபினமானம்  உள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது சசிகலாவின் உறவினர்களும் அவரது கணவன் நடராஜனும் துரத்தப்பட்டனர்.. ஜெயலலிதாவின் உடலைச்சுற்றி துரத்தப்பட்டவர்கள் தான் நின்றார்கள். ஜெயலலிதாவை நம்பிய தொண்டர்கள் கண்ணீரும் கம்பலையுமாக  தொலை தூரத்தில் நின்றார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக தொண்டாற்றியவர்கள் ஜெயலலிதாவின் மறைவில் இருந்து   இன்னமும்  மீளவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தை யாராலும் உடைக்க முடியாது என  ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட நடராஜன் அறிக்கை விட்டுள்ளார்.   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளவர்களுக்கு விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கையாகவே இதனைக் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

 ஜெயலலிதாவின் மறைவைக்  கேள்விப்பட்ட அதிர்ச்சியிலும் துயரத்திலும் இருந்து விடுபட முன்னரே சசிகலாவை முன்னிறுத்தும் பணிகள் ஆரம்பமாகிவிட்டன.தமிழகத்தின் சில பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தன.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவர் என ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்ய முதலே செய்திகள் வெளிவரத்தொடங்க்விட்டன. நாடி பிடித்துப்பார்க்கும் செய்தியாக   இது பரவ விடப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் அதனை விவாதித்து உயிர் கொடுத்துள்ளன.

.அரசியலில் கோலோச்சும் ஆண் தலைமைத்துவத்துக்குச் சவால் விட்டு காட்டியவர் ஜெயலலிதா. அவர் விட்டுச்சென்ற இடைவெளி அரசியலில் நிரந்தரமாக இருக்கும் ஜெயலலிதாவின்  ஆளுமைக்கு ஈடாக ஒரு தலைமை உருவாகமுடியாது. தமிழக அரசியலிலும்  மத்திய அரசியலிலும் ஜெயலலிதாவைப்போல சாதுரியமாகக்  காய் நகர்த்தக்கூடிய ஆற்றல் மிக்க தலைமை உருவாவது சாத்தியமில்லை .  
வர்மா      

No comments: