Friday, December 30, 2016

பாடல் பிறந்த கதை


கவியரசு கண்ணதாசன் தமிழ்த் திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. சராசரி மனிதனின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களே கண்ணதாசனின் கவிதைகளில் வெளிப்படும்.மனதைப் பாதித்த சம்பவங்கள் பாடலாக வெளிவரும்போது அடிமனதில் ஆழப்பதிந்துவிடுவது உண்மையே. கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்களில் பல அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவானவையே.

"நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தில் வரும் "சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே" என்ற பாடல் வரிகள் கேட்பவரின் மனதை உருகச்செய்பவை. தான் இறக்கப்போவதைத் தெரிந்துகொண்ட கதாநாயகன் தான் இறந்த பின்னர் திருமணம் செய்யும்படி மனைவியிடம் கூறுகிறான்.அப்போது கதாநாயகி தனது மனதில் உள்ள ஆதங்கத்தைப் பாடலாக வெளிப்படுத்துகிறாள்.

அந்தச்சந்தர்ப்பத்துக்காக கவிஞரால் எழுதப்பட்ட பாடல்தான்
"சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே""
"தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?, தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா?"
"ஒரு கொடியில் ஒருமுறை தான் மலரும் மலரல்லவா......
எனப் பாடல் வரிகள் செல்கிறது.

சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மிகச்சரியான பாடல்.இணை பிரிய நண்பர்கள்,  உயிருக்குயிரான காதலர்கள் கூட  தமக்குள்ள பிணக்கு ஏற்படும்போது இப்பாடலைப் பாடுவார்கள். ஆனால், அந்தப் பாடலை கவிஞர் எழுதிய சந்தர்ப்பம் வேறு.மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் கூறிய ஒரு சொல்லை வைத்துத்தான் கவிஞர் அப்பாடலை எழுதினர்.  
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்கான பாடல்களை எழுதுவதற்கு கவிஞர் கண்ணதாசனும் இசை அமைப்பதற்கு மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும் ஒப்பந்தம் செய்பப்பட்டனர். படப்பிடிப்பு மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.கவிஞர் பாடலைக் கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார். கவிஞருக்காக  விஸ்வநாதனும் அவரது குழுவினரும் காத்திருந்து காத்திருந்து ஏமாந்தனர். உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை.


ஸ்ரீதரின் வெற்றிப்படமான நெஞ்சில் ஓர் ஆலயம் 21 நாட்களில் எடுக்கப்பட்டு சாதனை புரிந்தபடம். அனைத்துப் பாடல்களையும் எழுதுவதற்கான முழுப் பணத்தையும் பெற்றுக்கொண்ட கண்ணதாசன் பாடல்களைக் கொடுக்காததனால் கோபமடைந்த ஸ்ரீதர், விஸ்வநாதனிடம் மிகவும் கடுமையகப் பேசிவிட்டார்.  படத்தை வெளியிட முடிவு செய்த நாளில் வெளியிட வேண்டும் என்ற ஸ்ரீதரின் துடிப்பு மெல்லிசை மன்னர் மீது கோபமாக வெளிப்பட்டது.

விஸ்வநாதனும் கண்ணதாசனும் மிக நெருக்கமான நண்பர்கள். விஸ்வநாதனின் சொல்லை கண்ணதாசன் தட்டியதில்லை. அவரை செல்லமாகக் கடிந்துகொள்ளும் உரிமையும் விஸ்வநாதனுக்கு மட்டும் உள்ளது.கண்ணதாசனைக் கண்டுபிடிப்பதற்காக சென்னை முழுவதும் சல்லடைபோட்டுத் தேடினார் விசுவநாதன். அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. கண்ணதாசனின் உறவினர்களும் நண்பர்களும் தேடியும் உருப்படியான தகவல் எதுவும் தெரியவில்லை.

சென்னைக்கு வெளியே மதுரை,திருச்சி எங்கும் கண்ணதாசனைத்  தேடி அலைந்தனர். எங்கேயும் அவர் இல்லை. பெங்களூரில் உள்ள லொட்ஜ் ஒன்றில் கவிஞர் இருப்பதாக   ஒருவர் தகவல் கொடுத்தார்.மெல்லிசை மன்னருக்குத் மிகவும் நம்பிக்கையான  ஒருவர் கொடுத்ததகவல் என்பதால் அடுத்த விமானத்தைப் பிடித்து அவர் பெங்களூருக்குப் பறந்தார்.
எதிர்பார்க்காத நேரத்தில் மெல்லிசை மன்னரைக் கண்ட கவிஞர் முகமெல்லாம் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார். மெல்லிசை மன்னரின் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. கவிஞர் 
   பாட்டெழுதிக் கொடாத கோபத்தில் இயக்குநர் ஸ்ரீதர் பேசிய பேச்சு எல்லாவற்றையும் மெல்லிசை மன்னர் கொட்டித்தீர்த்தார்.  மெல்லிசை மன்னரிக் கோபம் கவிஞருக்குப் புதிதல்ல.நம்ம விஸ்வநாதன் தானே பேசுகிறான். பேசிவிட்டு ஓயட்டும் என எண்ணிய கவிஞர் அமைதியாக இருந்தார்.

"நீ ஸ்ரீதரை ஏமாற்றிவிட்டு வந்துவிட்டாய். அவர் என்னை வாங்குவாங்கென்று  வாங்கிவிட்டார். வேண்டாம், இனி உன்னுடன் எந்த விதமான தொடர்பும் வைக்கப்போவதில்லை. இதுதான் கடைசிப் படம் இனி உனது பாட்டுக்கு நான் இசை அமைக்கப்போவதில்லை. நான் யாசை அமைக்கிற படங்களுக்கு நீ பாட்டு எழுத வேண்டாம்" என்று மெல்லிசைமன்னர் கண்டிப்பாகக் கூறினார்.

மெல்லிசைமன்னரின் சொற்கள் அனைத்தும் கவிஞரின் மார்பில் அம்பாகத் தைத்தன.
"விஸ்வநாதனா இப்படிச்சொன்னான்.என்னால் நம்ப முடியவில்லை. எனது பாட்டுக்கு இசை அமைக்க மாட்டேன் என்று சொன்னது நீ தானா விஸ்வநாதா" தனது மனதில் உள்ளதை வெளிப்படையாகக் கேட்டு விட வேண்டும் என கண்ணதாசன் நினைத்தார். ஆனால், கேட்கவில்லை.
கண்ணதாசனின்  நிழல் போல் எப்பவும் கூடவே இருப்பவர் கண்ணப்பன்.  .கண்ணப்பனைப் பார்த்து கண்ணப்பா எடு பேப்பரை என்றதும். கண்ணப்பன் கண்ணப்பன் எழுதத்  தயாராவார். கண்ணதாசன் சொல்லச்சொல்ல கண்ணப்பன் எழுதுவதுதான் வழமை. அன்று வழமைக்கு மாறாக கண்ணதாசன் தனது கைப்பட எழுதினார். மெல்லிசைமன்னரின் கோபம் இன்னமும் தணியவில்லை. அவர்  பேசப்பேச கவிஞர் எழுதிக்கொண்டே இருந்தார்.

கவிஞர் தான் எழுதிய பேப்பரை மெல்லிசைமன்னரின் கையில் கொடுத்தார். அதனை வசித்த மெல்லிசைமன்னரின் முகம் மாறியது. அவரின் கோபம் எப்படிப்போனதென்று தெரியாது. அவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. கவிஞரைக் கட்டிப்பிடித்து ஒருபாட்டம் அழுத்து தீர்த்தபின்,  அப் பாடல் வரிகளை மீண்டும் படித்தார்.
கவிஞர் தான்  கேட்க நினைத்ததை பாடலாக எழுதி இருந்தார். உனது பாடலுக்கு நான் இசை அமைக்க மாட்டேன் என மெல்லிசைமன்னர் கூறியதை மனதில் வைத்து கவிஞர் எழுதிய பாடல் இன்றும் ரீங்காரமிட்டுக்கொண்டிருகிறது.

”சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே .............
நண்பனின் சொல்லை ஜீரணிக்க முடியாமல் எழுதிய அப் பாடல் நெஞ்சில் ஓர் ஆலயம் படக்காட்சிக்கும் கனகச்சிதமாகப் பொருந்திவிட்டது.
ரமணி
மித்திரன்
17/10/2014

No comments: