ஜல்லிக்கட்டுக்கு
விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி
தமிழகத்தில் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் கலவரம், கல்லெறி,
தீவைப்பு, கண்ணீர்ப்புகைக்குண்டு வீச்சு,தடியடி ஆகியவற்றுடன் பொலிஸாரால் முடித்து
வைக்கப்பட்டது. தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டு எனப் பெருமையாக உரிமை
கோரப்படும் ஜல்லிக்கட்டுக்கு பீட்டா எனும் வெளிநாட்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தின்
மூலம் தடைவிதித்தது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டை இந்த வருடம்
நடத்த வேண்டும் என விரும்பிய
ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்தினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிராமப்புறங்களில் ஆரம்பமான
போராட்டங்கள் நகரங்களுக்குப் பரவியது. கிராமத்தவன் பட்டணத்துக்காரன் என்ற வேறுபாடு நிர்மூலமாகி
தமிழ்ப் பாரம்பரியம் என்ற அடையாளம் தமிழகத்தை ஒன்று திரட்டியது. ஜனவரி மாதம் 16 ஆம் திகதி மெரீனாவில் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட
அறவழிப் போராட்டம் உலகையே அதிசயத்துடன் திரும்பிப் பார்க்க வைத்தது. எந்த ஒரு நல்ல
காரியத்துக்கும் தமிழர்கள் ஒற்றுமையாக
நிற்க மாட்டார்கள் என்ற அவப்பெயர் மறைந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய சில
மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அறவழிப் போராட்டம் தமிழகத்தை நேர்கோட்டில் பயணிக்க
வைத்தது.
மாணவர்களின்
போராட்டத்தினால் கவரப்பட்ட இளைஞர்களும் பொதுமக்களும் தாமாகவே முன்வந்து மெரீனாவில்
குவிந்தனர். நூறு ஆயிரமானது ஆயிரம் இலட்சமானது. தடை ஏதும் இன்றி வருடா வருடம்
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும், ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கிய பீட்டா அமைப்பு
இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒரே குரலில் ஒலித்தது.
சென்னையில் ஓங்கி ஒலித்த குரல் . திருச்சி,மதுரை,கோவை ஆகிய நகரங்களிலும்
அதிர்ந்தது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம்
ரயில் மறியல் போராட்டம் நடத்தியது. கழகத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும்
கைது செய்யப்பட்டனர். பொது மக்களுக்கு
இடைஞ்சல் கொடுத்த ரயில் மறியல்
போராட்டம் பொது மக்களுக்கு தொந்தரவு கொடுக்காத மாணவர்களின் போராட்டத்தின் முன்னால்
பொசுங்கிவிட்டது. மாணவர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் ஒருநாள் அடையாள போராட்டம்
நடத்தியது. கமல்,ரஜினி,அஜித் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாணவர்களின் எழுச்சியின்
முன்னால் நட்சத்திரங்கள் ஒளி இழந்தன.
தைப்பொங்கலுக்கு
முன்னர் சாதகமான தீர்ப்பு வரும் என தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள்
உறுதிபடத் தெரிவித்தனர். வழக்கு விசாரணை
தள்ளிப் போனதால் அவர்கள் மெளனமாகினர். தமிழக சட்ட சபையில் அவசர சட்டம்
பிறப்பித்து ஜல்லிக்கட்டை நடத்த வகை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும்
சட்ட அறிஞர்களும் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கினர். எதையாவது செய்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டிய நெருக்கடியில் பன்னீர்ச்செல்வத்துக்கு ஏற்பட்டது. அவசர அவசரமாக டெல்லிக்குச்சென்று பிரதம்
மோடியைச்சந்தித்த பன்னீர்ச்செல்வத்துக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்கவில்லை. ஜல்லிக்கட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால்
உதவி செய்ய முடியாது. தமிழக அரசு என்ன செய்தாலும் உடனிருப்பேன் என மோடி உத்தரவாதம்
கொடுத்தார்.
தமிழகத்தில் உருவாகிய ஜல்லிக்கட்டு
அரசியல் டில்லியில் முடிவுக்கு வந்தது. ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஏதுவாக சகல
உதவிகளையும் மத்திய அரசு செய்தது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று
அமைச்சுகள் ஜல்லிக்கட்டு நடைபெற அனுமதி
அளிக்கப்போவதாக உறுதிமொழி கொடுத்தன.மத்திய அரசின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட
அவசரச்சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்
வழங்கினார். திராவிட முன்னேற்றக் கழகம் அட்சியில் இருந்தபோது இயற்றப்பட்ட
அவசரச்சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதல் இன்றி
நிறைவேற்றப்பட்டது.. இப்போது நிறைவேற்றப்பட்ட அவசரச்சட்டத்துக்கு ஜனாதிபதி
ஒப்பபுதல் அளித்துள்ளார். தமிழக சட்ட சபையில்
நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பினால் அங்கும் தடை இன்றி
நிறைவேற்றப்படும். அதன் பின்னர் நீதிமன்றத்துக்குப் போனாலும் ஜல்லிக்கட்டைத் தடை
செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தடை செய்த
ஜல்லிக்கட்டை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பாரதீய ஜனதாக் கட்சியும் சேர்ந்து
தடையை நீக்கின.ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் ஆதரவு தமக்குக் கிடைக்கும் என இந்திய
மத்திய அரசும் தமிழக அரசும் கருதின. இது மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றி என்பதில் தமிழக மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை
நீங்கிவிட்டது. வாடிவாசல் திறக்கப்படும் காளைகள் துள்ளிப்பாயும்.
ஜல்லிக்கட்டு எனது தலைமையில் நடைபெறும் என டில்லியில் பன்னீர்ச்செல்வம்
முழங்கினார்
ஜல்லிக்கட்டை நடத்துவதற்குரிய ஏற்பாட்டை தமிழக அரசு செய்தது. முதலமைச்சரும்
ஏனைய அமைச்சர்களும் ஜல்லிக்கட்டுக்குத் தலைமை வகிக்க தயாரானார்கள். ஜல்லிக்கட்டு
நடத்த வேண்டும் எனப் போராடிய மாணவர்கள் தமிழக அரசின் ஜல்லிக்கட்டுக்குத்
ஒப்புக்கொள்ளவில்லை. வெறும் வாய்வார்த்தை அரசியலை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக
இல்லை. மெரீனாவில் குவிந்துள்ள மக்களை அப்புறப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலையில்
தமிழக அரசு சிக்கியது. இந்திய குடியரசு தினத்துக்கு முன்னர் போராட்டத்தை
முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய நெருக்கடிநிலை உருவானது.
ஜல்லிக்கட்டை நடத்திவிட்டால் போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்படும் என நினைத்த
தமிழக அரசு மதுரையில் ஜல்லிக்கட்டை
நடத்துவதற்கு துரிதமாக ஏற்பாடு செய்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.ஜல்லிக்கட்டை
ஆரம்பித்து வைப்பதற்காக மதுரைக்குச்சென்ற முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் திருப்பி
அனுப்பப்பட்டார். ஜல்லிக்கட்டுத் தடையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நீக்கியது
என்பதைப் பறைசாற்றுவதற்காக தமிழக
அமைச்சர்கள் ஜல்லிக்கட்டை நடத்த முற்பட்டபோது மாணவர்களும் போராட்டக்காரர்களும் தடுத்து நிறுத்தினர். இவற்றை முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் ஏற்பட்ட
அவமானமாகவே தமிழக அரசு பார்த்தது.
அவசரகாலச்சட்டத்துக்காக 23 ஆம் திகதி திங்கட்கிழமை தமிழக சட்ட சபை கூட
உள்ளது. அதன் பின்னர் வெற்றிக் கொண்டாட்டத்துடன் வீடு திரும்பலாம் என
போராட்டக்காரர்கள் நினைத்தனர்.ஒரு கிழமை நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில்
இலட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். எந்த ஒரு அசம்பாவிதமும்
நடைபெறவில்லை.பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எதுவித இடையூறும்
ஏற்படவில்லை.குப்பைகள் கஞ்சல்கள் இல்லாத
சுத்தமாக மெரீனா காட்சியளித்தது.
திங்கட்கிழமை அதிகாலை வழக்கத்துக்கு மாறாக
அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
மெரீனாவுக்குச் செல்லும்பாதை மூடப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான தடை
நீக்கப்பட்டு விட்டதால் அனைவரும் களைந்து செல்ல வேண்டும் என பொலிஸார் அறிவித்தனர்.
போராட்டக்காரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இரண்டு மணிநேரத்தினுள் கலைந்து செல்லுமாறு கோரப்பட்டது.
பொதுமக்களின் நண்பன் எனக்கூறும்
பொலிஸ் தனது சுய முகத்தை வெளிக்காட்டியது.
ஆண்,பெண் என்ற பேதமின்றி ,சிறுவர் பெரியவர் என்ற வேறுபாடின்றி முதியவர் கர்ப்பிணி என்ற பாகுபாடின்றி
தாக்குதல் நடைபெற்றது. வீதியில் நின்ற வாகனங்கள் பொலிஸாரால் அடித்து
நொறுக்கப்பட்டன. வாகனங்கள், குடிசைகள்
சந்தை என்பன தீக்கிரையக்கப்பட்டன.
அமைதியாக நடந்த அறவழிப் போராட்டத்தை பொலிஸார் வன்முறையாக மாற்றினார்கள்.
மெரீனாவுக்கு அருகே இருந்த மீனவர் கிராமம் பொலிஸாரால் சூறையாடப்பட்டது.
பத்திரிகையளர்கள் தாக்கப்பட்டனர். அவர்களது புகைப்படக் கருவிகளும் வீடியோ
கருவிகளும் அடித்து உடைக்கப்பட்டன.
இந்த வன்செயல்கள் அனைத்தும்
தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகின. அதனைக் கருத்தில் எடுக்காத பொலிஸார் தமது நோக்கத்தை நிறைவேற்றினர். ஐஸ்
ஹவுஸ் காவல் நிலையம் தீக்கிரையக்கப்பட்டது. பொலிஸ் வாகனங்கள் தீயில்
பொசுங்கின.
பொலிஸாரின் அராஜகத்தை
தொலைக்காட்சியில் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மாணவர்களின்
போராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத சக்திகளை அப்புறப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை
எடுக்கப்பட்டதாக தமிழக பொலிஸ் ஆணையர் அறிவித்தார். இதுபோன்ற ஒரு அறவழிப்
போராட்டம் இனி ஒரு போதும் நடைபெறக்கூடாது
என்ற நோக்கிலேயே இந்தக் கொடூரமான தாக்குதல் நடைபெற்றது என்பது மறுக்க முடியாத
உண்மை. போராட்டக்கரர்களுக்கு அபாய சமிக்ஞை ஒன்றை வெளிப்படுத்த பொலிஸார் எடுத்த இந்த அதிரடி அவர்களுக்கு எதிராகத் திரும்பி விட்டது.
பொலிஸார் சொல்வதுபோல தேச விரோத சக்திகள் தீவைத்ததற்கான பதிவுகள் எவையும்
முன்வைக்கப்படவில்லை. வ்கனங்கள், வீடுக, சந்தை என்பனவற்றுக்கு பொலிஸார்
தீவைக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகள்
தொடர்ந்து ஒளிபரப்பி உண்மையை
வெளிக்கொணர்ந்த்தன. பெண் பொலிஸ் துணியால் முகத்தை
முகத்தை மூடிக்கொண்டு ஓடி ஓடித்
தீவைக்கும் காட்சி மக்களைப் பதற வைத்துள்ளது. சமூக வலைத்தளங்கள் இணைய தளங்கள்
அனைத்திலும் இந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
திருச்சியைத்தவிர தமிழகத்தின் ஏனைய
இடங்களிலும் இதே போன்ற வன்செயல் மூலமாக போராட்டக்காரர்கள் விரட்டப்பட்டனர். தமிழக
அரசும் இந்திய மத்திய அரசும் இந்த அராஜகத்துக்கு
மெளனமாக அங்கீகரம் வழங்கி உள்ளது. மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்கி
அவசரகாலச்சட்டத்தை நிறைவேற்றிய மத்திய மாநில அரசுகள் மாணவர்களின் மீதான
தாக்குதலுக்கு கண்டனம் எதுவும் வெளியிடவில்லை. அறவழிப்போராட்டகாரர்கள் மீது
தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு இந்த அரசாங்கம் பதில்
சொல்லாது. வேறு ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தபின்னர் தான் அந்தக் கறுப்பு ஆடு அடையாளம்
கட்டப்படும்.
அறவழிப்போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதாக மத்திய மாநில அரசுகள் நினைக்கின்றன.
கனன்று கொண்டிருக்கும் பாராட்ட உணர்வு எப்போது வெளிவரும் என்பதை யாராலுக் சரியாகக்
கணித்துக் கூற முடியாது.
வர்மா
No comments:
Post a Comment