Tuesday, January 3, 2017

சசிகலாவின் பிடியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

 
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகப்பெரிய  கட்சியாக கட்டி எழுப்பிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா என்ற பெண் ஆளுமை இந்திய மத்திய மாநில  ஆண் தலைவர்களின் அரசியல் வியூகங்களை உடைத்தெறிந்தது. ஜெயலலிதா மறைந்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை சசிகலா கைப்பற்றியுள்ளார். ஜெயலலிதா இருக்கும் வரை கட்சியில் அவர் மட்டும் தான் தலைவர். ஜெயலலிதாவுக்கு அடுத்த  இடத்தில் இருப்பவர் யார் என்ற கேள்விக்கு இடமிருக்கவில்லை.

உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா,  நலமாகி வீட்டுக்குத் திரும்புவார் என்றே அனைவரும் நம்பிக்கொண்டிருந்தனர்.நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவின் சடலம் தான் அங்கிருந்து வெளியேறும் என நினைத்த சிலர் சாதுரியமாகக் காய் நகர்த்தியுள்ளனர் என்பதை அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் அறியக்கூடியதாக உள்ளது. ஜெயலலிதாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது தலைமையை நிரப்பக்கூடிய தலைவர்  கழகத்தில் இல்லை. அவரது இடத்தை சசிகலா நிரப்புவார் என கழக நிர்வாகிகள் நம்புகின்றனர்.

 சினிமாவிலும் அரசியலிலும் எம்.ஜி ஆரால் வளர்க்கப்பட்டவர் ஜெயலலிதா.எம்.ஜி ஆரின் உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தவர்கள் அவரின் ரசிகர்கள். எம்,ஜி ஆர் உயிருடன் இருக்கும் போது அவருக்கு அடுத்த இடத்தில் ஜெயலலிதாவை  வைத்துப் பார்த்தவர்கள்  எம்.ஜி ஆரின் ரசிகர்கள் எம்..ஜி ஆருக்கு ஈடாக ஜெயலலிதா இருப்பாரா  என்ற கேள்வி அப்போது எழுந்தது. கடைசி காலத்தில் எம்.ஜி. ஆரை மிஞ்சும் வகையில் கட்சியை வழி நடத்தியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இடத்தில் சசிகலாவை நினைத்துப் பார்க்க முடியாது என தொண்டர்கள் குமுறுகிறார்கள்.தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்துள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக்  கழக விதிகளின் பிரகாரம் பொதுச்செயலாளராவதற்குரிய தகுதி சசிகலாவுக்கு இல்லை. அவர் தகுதி பெறும் காலம் வரும் வரை இன்னொருவரை அந்த இடத்தில் இருத்துவதற்கு நிர்வாகிகள் விரும்பவில்லை. ஜெயலலிதாவின் விசுவாசியான  பன்னீர்ச்செல்வ‌ம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதை சசிகலாவின் மன்னார்குடி குடும்பம் விரும்பவில்லை. அதற்கு பன்னீர்ச்செல்வ‌த்தின் எதிரிகளும் துணைபோயுள்ளனர். உட்கட்சித் தேர்தல் நடத்தி பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். என்ற  கழக விதியைப் புறக்கணித்து.  சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். இத் தீர்மானம் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தும் தீர்மானம் என்பதை அவர்கள் உணரவில்லை.

எம்.ஜி. ஆர் கட்சியை ஆரம்பித்தபோது அரசியல் சட்ட வல்லுனர்கள் அவரின் பின்னால் நின்றார்கள்.அதனால்தான் பொதுச்செயலாளர் தெரிவு பற்றிய சிக்கலான விதி சேர்க்கப்பட்டுள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களையும் தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றும் வகையில் இத் தீர்மானம் அமைந்துள்ளது. ஏகமனதாக கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்த பொதுச்செயலாளர் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்வு பற்றிய விதி முறை அமுல்படுத்தப்படவில்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனு கோரப்படவில்லை. தேர்தல் ஆணையகத்துக்கு இது பற்றி யாராவது புகார் கொடுத்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம்.


இந்திய அரசியல் கட்சிகளில் பெரும்பாலனவை வாரிசுகளின் கைகளில் உள்ளன.வாரிசு அரசியல்தான் இந்தியாவில் தலை தூக்கி உள்ளது. எம்.ஜி ஆருக்கு வாரிசு இல்லை. ஜெயலலிதா திருமணம் முடிக்கவில்லை சசிகலாவுக்கும் வாரிசு இல்லை. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் விட்ட அதே தவறை சசிகலா விடமாட்டார். தனது குடும்பத்தில் உள்ள ஒருவரை தனக்கு அடுத்த தலைவராக உருவாக்கி விடுவார். அவரது கணவன் அதற்குரிய ஆலோசனையைக் கொடுப்பார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலாவது பொதுச்செயலாளராக எம்.ஜி.ஆர்  பொறுப்பேற்றார். அவர் இறந்தபின்னர் நெடுஞ்செழியன் பொதுச்செயலாளரானார்.எம்ஜி.ஆரின் மனைவி ஜானகி முதலமைச்சரான பின்னர் கட்சி இரண்டாகியது. ஜெயலலிதாவின் தலைமையில் கட்சி ஒன்றானபின்னர்  ஜெயலலிதா பொதுச்செயலாளரானார்.  அந்த இடைவெளியை சசிகலாவை வைத்து நிரப்பி உள்ளார்கள்.
  தமிழகத்தை  ஆட்சிசெய்யும் கட்சி, இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி இப்படிப்பட்ட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் கட்சிக்கு  பொதுச்செயலாளராகும் தகுதி சசிகலாவுக்கு இருக்கா என பொது வெளியில் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வரும். ஜெயலலிதாவுடன் 33 வருடங்கள் வாழ்ந்த அந்த ஒரே ஒரு தகுதி போதும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  நிர்வாகிகள் அடித்துக் கூறுகின்றனர். சசிகலாவை எதிர்த்து சில தலைவர்கள் போர்க்கொடி தூக்குவர்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு எல்லாம் புஷ் வாணமாகியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களும் பெட்டிப்பாம்பாக அடங்கி விட்டனர்.


ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.சசிகலாவுக்கு வக்காலத்து  வாங்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ஜெயலலிதாவைத் தூக்கி எறிந்துவிட்டு சசிகலாவின் புகழைப் பாடத்தொடங்கி  விட்டனர். சில வேளைகளில் சசிகலாவிடம் ஆலோசனை கேட்கும் படி ஜெயலலிதா சொன்னதாக இப்போது தான் சொல்கிறார்கள்.  சின்னம்மா  என்ற அடைமொழி புதிதாக இருக்கிறது என்ற விமர்சனம் மேலோங்கி உள்ளது. சின்னம்மாவிடம் கேளுங்கள் என ஜெயலலிதா சொன்னதாக இப்போது சொல்கிறார்கள். சின்னம்மா எமக்குப் புதிதல்ல என்பது அவர்களது வாதம்.

உயர் பதவியில் உள்ளவர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அடிமட்டத் தொண்டர்கள் சிலர் சசிகலாவுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். சென்னை,புதுக்கோட்டை,நெல்லை,பெரம்பலூர் ஈரோடு,நாமக்கல்,வேலூர்  போன்ற இடங்களில் சசிகலாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அங்குள்ள மகளின் அணி,மீனவர் அணி போன்றவை சசிகலாவை கடுமையாக எதிர்க்கின்றன. சில இடங்களில் சசிகலாவின் கட் அவுட்கள் சேதமாக்கப்பட்டன. சசிகலாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.. ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி  செலுத்தச்சென்ற சுவாதி ஆனந்தன் என்னும் தொண்டர் சசிகலாவின் நியமனத்துக்கு   எதிர்ப்புத் தெரிவித்து நஞ்சு அருந்தினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் சிலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சிலர் சேர்ந்து விட்டதாகத் தகவல்கள் வருகின்றன.

சசிகலாவை பொதுச்செயலாளராக்கியத்தில் வெற்றி பெற்ற தம்பித்துரை அவர்  முதலமைச்சராக வேண்டும் என  அழைப்பு விடுத்துள்ளார். மதுசூதனன்,செங்கோட்டையன்,பி.எச். பாண்டியன் சைதை துரைசாமி,ஆர்.பி.உதயகுமார்,கடம்பூர் ராஜு,சேவூர் ராமச்சந்திரன்,ஓ.எஸ்.மணியன்  போன்றோரும் இக்கருத்தை முன்னரே தெரிவித்திருந்தனர். ஜெயலலிதவைக் கடுமையாயக் எதிர்த்தவர் சைதை துரைசாமி. ஜெயலலிதா இருக்கும் இடம் கோயில் அங்கு செருப்புடன் செல்ல மாட்டேன் என்றவர் ஓ.எஸ்.மணியன். பன்னீர்ச்செல்வ‌த்துக்கு எதிராக மறைமுகமாக காய் நகர்த்தியவர்கள்   இப்போது வெளிப்படையாக அவரை எதிர்க்கத் தொடங்கிவிட்டனர்.   திரிசங்குவின் நிலையில் பன்னீர்ச்செல்வ‌ம் இருக்கிறார். தனக்கு எதிராகக் களம் இறக்கப்பட்ட சசிகலாவை வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் திணறுகிறார் பன்னீர்ச்செல்வ‌ம்.
 பன்னீர்ச்செல்வ‌த்தை கைக்குள்  வைத்துக்கொண்டு தமிழகத்தில் கால் ஊன்ற பாரதீய ஜனதா விரும்புகிறது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகளை பாரதீய ஜனதாக் கட்சி விரும்பவில்லை. மத்திய அரசுடன் முரண்படாமல் மிகுதி நான்கரை வருடங்களை ஓட்டுவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. அதனால்தான்  மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற ஜெயலலிதா போட்டிருந்த முட்டுக்கட்டைகளை தமிழக அரசு விலக்கிக் கொண்டுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்  நடக்கும் கூத்துகளை  திராவிட முன்னேற்றக் கழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. சசிகலாவின் நியமனம் பற்றிய ஆச்சரியம் அகலுவதற்கிடையில் திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 போயஸ்கார்டன் ஜெயலலிதாவின் நினைவிடமாகுமா  வாரிசு இல்லாத ஜெயலலிதாவின் சொத்துகள் கழகத்தின் வசமாகுமா என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கப்போவதில்லை. அரசியலுக்கு வரமாட்டேன் என ஜெயலலிதாவுக்கு சத்தியம் செய்து கொடுத்தவர் ஜெயலலிதாவின் சமாதியின் முன்னிலையில் அரசியல் பிரவேசம் செய்துள்ளார்.

சசிகலாவை அரசியலுக்கு கொண்டுவர தீட்டப்பட்ட திட்டம் கனகச்சிதமாக நிறைவேற்றப்பட்டு விட்டது. ஜெயலலிதாவின் மரணத்தால் வெற்றிடமான  ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும். கூட்டணிக் கட்சிகளின் உதவி இன்றி இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும்  தமிழக சட்ட மன்றத் தேர்தலிலும் ஜெயித்துக் காட்டியவர் ஜெயலலிதா. அந்த வெற்றியைத் தக்கவைக்க வேண்டிய மிகப்பரிய பொறுப்பு சசிகலாவின்  தலையில் சுமத்தப்பட்டுள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற  உறுப்பினர்களும் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களும் சசிகலாவை எதிர்த்து கலகம் செய்ய மாட்டார்கள். நான்கரை வருடம் ஆட்சி செய்யும் அதிகாரத்தை இழப்பதற்கு அவர்கள் விரும்பமாட்டார்கள்.  ஆகையினால் சசிகலாவுக்கு எதிராக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் சலசலப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.
வர்மா


No comments: