Friday, January 20, 2017

அடக்கு முறைக்கு எதிரான உணர்வுபூர்வமான போராட்டம்

 
இயற்கைக்கு நன்றி கூறும் திருநாள் தைப்பொங்கல் தமிழர்களின் வாழ்வோடு ஒன்றித்த .தைப்பொங்கலுக்கு அடுத்த நாளை உழவுக்கு உதவிபுரிந்த  காளைக்கும் கோமாதாவுக்கும் உரிய  நாளாக தமிழ் மக்கள் கொண்டாடிவருகின்றனர். காளைகளையும் கோமாதாக்களையும் அலங்கரித்து அவற்றை வணங்கி பொங்கலிட்டுப் படைப்பார்கள்.தமிழரின் வீர விளையாட்டான ஏறுதழுவல் சிறப்பாக நடைபெறும். இதுவே மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது. காளையை அடக்குபவருக்கு காளை அடக்கும் வீரர் என்ற பட்டப்பெயர்  கிடைக்கிறது. தைமாதம் தமிழகத்தின் சில கிராமங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு பிரசித்தமானது.


இந்தியமண்ணின் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் கால் பாதித்த  பீட்டா எனும் அமைப்பு தடைவிதித்துள்ளது. PETA-  people  for  the ethical   treatment  of animals    என்று தன்னை அழைத்துக்கொள்ளும் இந்த அமைப்பு  1980  ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கிவருகிறது. ஆதரவற்று  வீதியில் அலையும் நாய், பூனை போன்ற விலங்குகளைப் பாதுகாப்பதே  தன்னுடைய பிரதான நோக்கம் என பீட்டா  பெருமையாகக் கூறுகிறது. விலங்குகளின் மீது அன்பு செலுத்துபவர்கள் பீட்டாவுக்கு ஆதரவுக்கரம் கொடுத்தனர். வீதியில் அலையும் விலங்குகளை மீட்கும் பீட்டாவால் அவற்றைப் பராமரிக்க முடியவில்லை. பதினைந்து நாட்களில் அவற்றை யாரும் தத்தெடுக்கவில்லை என்றால் அவற்றை கருணைக்கொலை செய்வதற்கு  அமெரிக்க அரசிடம் அனுமதிகோரியது.      பீட்டாவின் கோரிக்கைக்கு இணங்கிய அமெரிக்கா சட்டம் இயற்றி கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கியது. 2015   ஆம் ஆண்டு  35000 செல்லப்பிராணிகளை பீட்டா கொலை செய்தது.
செல்லப்பிராணி வளர்ப்பு அமெரிக்காவில் கோடிகளில் புரளும் வர்த்தகம்.   குறைந்த விலைக்கு  செல்லப்பிராணிகளை  யாரும் வாங்கக்கூடாது என்பதற்காகவே கருணைக்கொலை சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.  செல்லப்பிராணிகளைப் பாதுகாக்கும் சில நிறுவனங்கள் அமெரிக்காவில் இயங்கின்றன. பீட்டாவின்  உளவாளிகள் அவற்றை  இயங்கவிடாமல் தடுக்கின்றனர். 30 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு பீட்டா. 2014 ஆம் ஆண்டு   292 கோடி ரூபாவை வருமானமாகப் பெற்றது.   200 கோடி ரூபா நன்கொடையாகக் கிடைத்தது. இலட்சக்கணக்கான செல்லப்பிராணிகளைக் கொன்று குவித்த பீட்டாதான் ஜல்லிக்கட்டின் போது மாடு துன்புறுத்தப்படுகிறது என இந்திய நீதிமன்றத்தில் நிரூபித்து ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கி உள்ளது. அறிஞர் அண்ணா சொன்ன சட்டம் ஒரு இருட்டறை என்பதை பீட்டா நிரூபித்துள்ளது.


தமிழகத்தின் குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டைத் தடை செய்வதால் பீட்டாவுக்கு என்ன இலாபம். இலாபம் பீட்டாவுக்கு அல்ல பீட்டாவை வளர்க்கும் நிறுவனங்களுக்குத்தான் அதிக இலாபம். பீட்டா ஒரு அம்பு. ஜெர்சி இனப்பசுக்களை  தமிழகத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி   பால் வியாபாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பீட்டாவின் பின்னால் அணிவகுத்தி நிற்கின்றன.

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு எப்படியும் நடத்திவிட வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் திட சங்கற்பம் பூண்டனர். தைப்பொங்கலுக்கு முன்னர் கிராமங்களில் எழுச்சி கொண்ட போராட்டங்கள் சென்னை.மதுரை,திருச்சி போன்ற தமிழக நகரங்களையும் தொட்டன.  உயர் நீதிமன்றத் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தவேண்டும் என ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் தீர்மானித்தார்கள். ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாது என்பதில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் குறியாக இருக்கின்றன.
அலங்காநல்லூர் ,அவனியாபுரம்,வாடிவாசல் ஆகியன ஜல்லிக்கட்டுடன் நெருங்கிய தொடர்புடைய கிராமங்கள். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு  ஆர்வலர்கள்  ஒன்றுகூடினர்.  அதனைத் தடை செய்வதற்கு பொலிஸார் தயாராக நின்றனர். தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. பொலிஸார் தலையிட்டு விரட்டி அடித்தனர். எதற்கும் அஞ்சாது அங்கங்கே ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான  போராட்டம் கிராமத்தைத்தாண்டி நகரத்தை நோக்கி நகர்ந்தது. அதன் வீரியத்தை அடக்கமுடியாது தமிழக அரசு தடுமாறுகிறது. இளைஞளால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் மாணவர்களும் இணைந்தனர்.  மூன்று நாள் தொட போராட்டத்தால் தமிழக மக்களின் கவனம் ஜல்லிக்கட்டை நோக்கித் திரும்பியது.


 தமிழ் மக்களின் உணர்வுடன் கலந்த ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதிக்கும் வரை போராட்டம் நடைபெறும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாக் கலைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் களம் இறங்கி உள்ளனர். தமிழகத்தில் நடைபெறும்  போராட்டத்தை  வட இந்திய ஊடகங்கள் கவனத்தில் எடுக்கவில்லை. சேவக்,ஜடேஜா,அஸ்வின் ஆகியோரின் ட்வீட்கள் வடஇந்தியர்களைத்  திரும்பிப்பார்க்க வைத்தன.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் மத்தியில் காங்கிரஸும்  ஆட்சியில் இருக்கும் போதுதான் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக இப்போது தமிழகத்தை ஆட்சிசெய்யும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மத்தியில் ஆட்சி பீடத்தில் இருக்கும் பாரதீய ஜனதாவும் தமது எதிர்க் கட்சிகள் மீது குற்றத்தைச்சுமத்தி தப்பிக்க முனைந்தன. அதெல்லாம் பழையகதை இப்போது ஆட்சியில் இருக்கும் கட்சிகள்தான் ஜல்லிக்கட்டு நடக்க சட்டம் இயற்ற வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் உறுதிபடத் தெரிவித்துவிட்டனர். ஆந்திர அரசின் துணையுடன் ஜல்லிக்கட்டு,கிடா ஆட்டுச் சண்டை,சேவல் சண்டை என்பன நடந்தன. மத்திய அரசுஅதனைக்  கண்டுகொள்ளவில்லை. தமிழக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழக அரசு வாய்மூடி மெளனமாக இருக்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட முடியாது என மத்திய அரசு கையை விரிக்கிறது. தமிழகத்துக்குத்  தண்ணீர் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கர்நாடக அரசு உதாசீனம் செய்தபோது கை கட்டி வேடிக்கை பார்த்த பாரதீய ஜனதா அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலை வணங்குமாறு தமிழக மக்களுக்கு அறிவுரை சொல்கிறது.   பாரதீய ஜனதாவின் பங்காளியான ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவு பீட்டாவுக்கு உள்ளது. பாரதீய ஜனதாவின் முக்கியஸ்தர்களான கிரண்பேடி,மேனகா காந்தி போறவர்கள் பீட்டா அமைப்பில் இருக்கிறார்கள். தடையை மீறி  ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என பீட்டா சொல்கிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசைக் கலைக்கக்கோரும் உரிமை தனக்கிருப்பதாக வெளிநாட்டு நிறுவனமான பீட்டா நினைக்கிறது. தமிழக அரசைக் கலைக்கும் உரிமையை அரச சார்பற்ற நிறுவனத்துக்கு இந்திய அரசு கொடுத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஸ்பெய்ன் நாட்டில் நடைபெறும் காளை அடக்கும் போட்டி உலகப் பிரசித்தம் பெற்றது.   காளை அடக்கும் போட்டி என்ற பெயாரில் அங்கே காளை  கொல்லப்படுகிறது.   பீட்டாவின் பாச்சா அங்கே பலிக்கவில்லை.பெண் ஒட்டகத்தை அடைவதற்காக இரண்டு ஆண் ஒட்டகங்கள் மோதும் போட்டி துருக்கியில் நடைபெறுகிறது. ஸ்பெயினிலும் பிரான்ஸிலும் ஒரு தொன் கல்லை காளைகள் இழுக்கும் போட்டி நடைபெறுகிறது. அங்கெல்லாம் பீட்டாவால் வாலாட்ட முடியாது. தமிழகத்தில் மாடு துன்புறுத்தப்படுகிறது என குரல் கொடுக்கும் பீதடாவின் கண்ணில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மாட்டிறைச்சியில் கணக்குத் தெரியவில்லை. உலகில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிளையில் இருக்கிறது.
 இந்திய மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதனால் தமிழக ஆளுநர் மாளிகை , அரச அலுவலகங்கள் ஆகியவற்றை முற்றுகையிட போராட்டக்காரர்கள் தயாராக உள்ளனர். சென்னை ,மெரீனாவில் மட்டும் இலட்சக்கணக்கானோர் குவிந்து போராட்டம் நடத்துகின்றனர்.
வர்மா 

No comments: