Saturday, February 4, 2017

மல்லுக்கட்டில் முந்திய பன்னீர்ச்செல்வ‌ம் அதிர்ச்சியில் சசிகலா


ஜெயலலிதா மறைந்தபின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரம்  பன்னீர்ச்செல்வ‌த்தின் கைகளுக்குச் செல்லும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஜெயலலிதாவுக்கு அடுத்தது யார் என்ற கேள்வி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்ததில்லை. கழகத்தின் ஒரே ஒரு தலைவர் ஜெயலலிதாதான்.  மற்றைய கட்சிகளைப் போன்று இரண்டாம் கட்டத்தலைவர் என்ற பேச்சுக்கு இடம் இருக்கவில்லை. ஜெயலலிதா குற்றவாளி என இரண்டு முறை நீதிமன்றம் தீர்ப்பளித்த போது இரண்டு முறையும் பன்னீர்ச்செல்வ‌த்தின் கையில் முதலமைச்சர் பதவியைக் கொடுத்துவிட்டு அவர் சிறைக்குச்சென்றார். ஜெயலலிதாவின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பெற்ற பன்னீர்ச்செல்வ‌ம் தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்புக்கு சசிகலா தரப்பு முட்டுக்கட்டை போட்டது.

ஜெயலலிதாவின் பின்னால் அடக்க ஒடுக்கமாக குனிந்த தலை நிமிராமல் வலம் வந்த சசிகலாவுக்கு அதிகார ஆசை  ஏற்பட்டதால் பன்னீர்ச்செல்வ‌த்துக்குத் தலைவலி தொடங்கியது. சசிகலாவின்  கணவன் நடராஜனின் அரசியல் சித்து விளையாட்டு அனைவருக்கும் தெரிந்த பரகசியமான உண்மை. ஜெயலலிதாவின் பின்னால் முப்பது வருடகாலம் அப்பாவி போல்  இருந்த சசிகலாவுக்கு பதவி ஆசை தொற்றிக்கொண்டது.  சசிகலாவின் பின்னால் அவரது கணவன் நடராஜனும் குடும்பமும் உள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களும் தமது பதவியைக் காப்பாற்றுவதற்காக சசிகலாவுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.


பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி பன்னீர்ச்செல்வ‌த்துக்கு பக்க பலமாக இருக்கிறது. இந்திய மத்திய அரசின் பிரதிநிதியாக தமிழகத்தில் இயங்கும் ஆளுநர் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். ஜெயலலிதாவின் ஆளுமைக்கு இணையான தலைமை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்    இல்லை.ஜெயலலிதாவின் இடத்தை  சசிகலா நிரப்புவார் என சிலர் தப்புக்கணக்குப் போட்டுள்ளனர்.முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்ச்செல்வ‌த்தை இறக்கிவிட்டு சசிகலாவை அமர்த்துவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விதியை மீறி சசிகலாவை கழகப் பொதுச்செயலாளராக நியமித்தனர்.  சசிகலா முதலமைச்சராவதை பாரதீய ஜனதாக் கட்சி விரும்பாததனால் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
சசிகலாவின் தலைமைக்கு எதிராக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் கலகக் குரல் எழும்பும் என எதிர்பார்த்தவர்கள்  ஏமாற்றமடைந்தனர்.  சசிகலாவின் காலில் விழுந்ததால் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு மக்களிடையே இருந்த மதிப்புக் குறைந்தது. பதவியில் இருப்பவர்கள் சசிகலாவுக்கு கூழைக்கும்பிடுபோட்டத்தைச் சகிக்க முடியாத தொண்டர்கள் ஜெயலலிதாவின் மருமகள் தீபாவின் வீட்டை  நோக்கிப் படை எடுத்தனர். சசிகலாவுக்கு ஆதரவான பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் சசிகலா என்ற பிரமையை உண்டாக்கின. சசிகலாவைப் பிடிக்காத பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தீபாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கின.  ஊடகங்களின் போட்டா போட்டியில்  பன்னீர்ச்செல்வ‌த்தை யாரும் கணக்கில் எடுக்கவில்லை


கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்களை அடியொற்றி தமிழக அரசியல் இரண்டு பிரிவாக இருந்தது. ஜெயலலிதாவின் மறைவும் இயங்க  முடியாத நிலையில் கருணாநிதி இருப்பதும்  தமிழக அரசியலில் மென்போக்கை உருவாக்கி உள்ளன. பன்னீர்ச்செல்வ‌த்தின் தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இயங்க வேண்டும் என மோடி  விரும்புகிறார். தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான ஸ்டாலினும்  பன்னீர்ச்செல்வ‌த்தின் தலைமையை விரும்புகிறார்.சசிகலாவை  அரசியல் ரீதியாக  எதிர்ப்பதை விட பன்னீர்ச்செல்வ‌த்தை எதிர்ப்பது இலகுவானது என ஸ்டாலின் கருதுகிறார். தமிழக சட்ட சபையில் மென்போக்கான எதிர்ப்பை திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துகிறது.

 சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் என விரும்புபவர்களால் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு ஏகப்பட்ட நெருக்கடி கொடுக்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு பக்க பலமாக இருக்கப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்திக்க அனுமதி கோரினார்.அவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்காத பிரதமர் மூன்று முறை பன்னீர்ச்செல்வ‌த்தைச் சந்தித்து அவர் கூறிய அனைத்தையும் செவிமடுத்தார். சசிகலா தரப்புக்கு மோடி விடுத்த மறைமுக எச்சரிக்கையாகவே இது நோக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள்  நடத்திய அறவழிப் போராட்டம் பன்னீர்ச்செல்வ‌த்துக்குப் பெரும் நெருக்கடியைக்கொடுத்தது. தமிழக  அரசுக்கான அவரச சட்டத்தை இந்திய மத்திய அரசு தயாரித்தது.    ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டதென்ற   நல்ல செய்தியுடன் தமிழகம் திரும்புவேன்  என சபதம் எடுத்த பன்னீர்ச்செல்வ‌த்தின் சபதத்தை மோடி நிறைவேற்றி வைத்தார்.மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பொலிஸார் களம் இறங்கியதால் பன்னீர்ச்செல்வ‌த்தின் மீது வெறுப்பைத் தோற்றுவித்துள்ளது. அமைதியான போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட வன்முறையை பலரும் கண்டித்துள்ளனர். நக்சலைடுகள்,தேசவிரோத சக்திகள் மெரீனாவில் ஊடுருவியதாக இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் அறிவித்துள்ளன.

மாணவர்களால் மெரீனாவில் ஆரம்பிக்கப்பட்ட அறவழிப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் ஊடுருவிய ஒருசில தேசவிரோத சக்திகளை  அரச புலனாய்வாளர்களை இலகுவாகக் கட்டுப்படுத்தி இருக்கலாம். அப்படிச்செய்யாது போலீசாரை ஏவிவிட்டதன்  மூலம் எதிர்காலத்தில் இப்படியான அறவழிப்போராட்டங்கள்  நடைபெறக்கூடாது என்ற எச்சரிக்கையை மத்திய மாநில அரசுகள் விடுத்துள்ளன. பொது மக்களின்  உடமைகளைச் சேதமாக்கி அவற்றுக்குப்  பொலிஸார் தீவைத்த ஆதரங்கள் சமூக வலைத்தளங்களிலும் இணைய தளங்களிலும்  இருக்கின்றன.  அப்போது நடந்தவற்றை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின.போராட்டக்காரர்கள்   மீது தாக்குதல் நடைபெற்றதை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசாரணைக்குழு ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது.  

உலகின் மிக நீளமான கடற்கைகளில் மெரீனாவும் ஒன்று. சுமார் நான்கு கிலோ  மீற்றர்  நீளமான அப்பரந்த கடற்கரையில்  அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் கூடி இருந்தனர். மோடி, பன்னீர்ச்செல்வ‌ம், சசிகலா ஆகியோரை எதிர்த்து சிலர் கோஷம் போட்டுள்ளனர். அந்தக் கோஷங்களுக்கும் மாணவர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. மோட்டர் சைக்கிளில் பின்லேடனின் படம் ஒட்டப்பட்ட புகைப்படத்தை சட்ட சபையில்  பன்னீர்ச்செல்வ‌ம்  காட்டினார். தாங்கள் மெரீனாவுக்குச் செல்லவில்லை என அப் புகைப்படத்தில் இருப்பவர்கள் தெரிவித்தனர். தமிழக புலனாய்வாளர்கள் முதலமைச்சர் பன்னீர்ச்செல்வ‌த்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்.

ஜெயலலிதா சிறையில் இருந்தபோது இரண்டு முறை  முதலமைச்சராகப் பதவி  வகித்த பன்னீர்ச்செல்வ‌ம் ஜெயலலிதாவின் கட்டளைப்படி பொம்மை முதலமைச்சராகச் செயற்பட்டார். ஜெயலலிதா இறந்தபின்னர்  முதலமைச்சராகப் பதவி ஏற்ற  பன்னீர்ச்செல்வ‌ம், சசிகலாவுக்கு அடிபணிந்து செயற்பட்டார்.சசிகலாவை விரும்பாத பாரதீய ஜனதாக் கட்சி பன்னீர்ச்செல்வ‌த்துக்கு ஆதரவுக் கரம் நீட்டியதால் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் துணிவு பன்னீர்ச்செல்வ‌த்துக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை பெற்ற பன்னீர்ச்செல்வ‌ம் இப்போது தான் விரும்பியதைச் செய்யத் தொடங்கிவிட்டார்.

வர்தாப்   புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது களத்தில் இறங்கி  செயற்பட்டார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தார்,ஆந்திராவுக்கு விஜயம் செய்து அம்மாநில முதலமைச்சரைச் சந்தித்து சென்னை குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்தார். சென்னை வெள்ளத்தால் அழிக்கப்பட்டபோது அன்றைய  முதலமைச்சர்  ஜெயலலிதா திரும்பியும் பார்க்கவில்லை. அண்டை மாநிலங்களின் பிரச்சினைகளுக்கு பேசித் தீர்வு காணாது நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு பெறவே ஜெயலலிதா விரும்பினார்.

தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு பன்னீர்ச்செல்வ‌ம் உடனடியாக  துரித கதியில் தீர்வு காண்பதால் அவருடைய செல்வாக்கு அதிகரித்துள்ளது. மக்கள் ஆதரவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கலக் தொம்டர்களின் ஆதரவும் சசிகலாவுக்கு இல்லை. பன்னீர்ச்செல்வ‌த்தின் சுறுசுறுப்பைப் பார்த்த அண்ணா திராவிட முன்னேற்றக் ககழக  சட்ட மன்ற உறுப்பினர்கள்  பன்னீர்ச்செல்வ‌த்தின் பக்கம் சரியத் தொடங்கிவிட்டனர்.  ஜெயலலிதாவையும் சசிகலாவையும் சட்ட சபையில் புகழ்ந்து பேசிய  அண்ணா திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் இப்போது  பன்னீர்ச்செல்வ‌த்தையும் புகழ  ஆரம்பித்துள்ளனர். பன்னீர்ச்செல்வ‌த்தின் பதவியைப் பறிக்கக்  காத்திருப்பவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
வர்மா

No comments: