Friday, February 17, 2017

முதல்வராக ஆசைப்பட்ட சசிகலா சிறை வைக்கப்பட்டார்

 
வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்த  வழக்கில் சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகிய  மூவரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததால் குற்றவாளிகள் மூவரும் கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை மாலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவ்வழக்கின் முதலாம் எதிரியான ஜெயலலிதா மரணமானதால் அவரது பெயர் விடுவிக்கப்பட்டது. என்றாலும் அவருக்கு விதிக்கப்பட்ட 100  கோடி ரூபா அபராதத் தொகையை வசூலிப்பதற்கு அவருடைய சொத்துக்கள் விற்பனைசெய்யப்படும்.

1991  ஆம் ஆண்டு முதல்  1996 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக   66  கோடி ரூபா சொத்து சேர்த்ததாக ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  வழக்குத் தொடர்வதற்கு அன்றைய ஆளுநர் சென்ன ரெட்டியிடம் அனுமதி கோரினார். இந்திய மாநில முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு முதன் முதலாக ஆளுநர் அனுமதி  கொடுத்தார். பின்னாளில்  குற்றவாளி என நீதிமன்றம் திர்ப்பளித்ததால் சிறைக்குச்சென்ற முதலாவது முதலமைச்சர் என்ற அவப்பெயரும் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது.


சென்னை,பெங்களூர்,டில்லி ஆகிய நகரங்களில் ஐந்து நீதிமன்றங்களில்  பதினைந்து நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தார்கள். ஐந்து நீதிபதிகள் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை எழுதினார்கள். 1996   ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் ஊழல் பற்றிய  விபரங்களை 539 பக்கங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுநரிடம் கையளித்தது.ராமதாஸ், வைகோ ஆகியோரும் தமது கட்சியின் சார்பில் ஜெயலலிதாவின்  ஊழல்   பற்றிய ஆதாரங்களை   ஆளுநரிடம்  கையளித்தனர். பின்னர் சுப்பிரமணியன் சுவாமி,ராமதாஸ்,, வைகோ ஆகியோர்  ஜெயலலிதாவுடன் இணைந்து தேர்தலைச்சந்தித்தனர்.
ஜெயலலிதா,சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கல் டி குன்ஹா 2014 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி எதிரிகள் நால்வரும்  குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார். நால்வருக்கும் தலா நான்கு வருட சிறைத்தண்டனையும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபா அபராதமும்    மற்றையவர்களுக்கு தலா 10 கோடி ரூபாவும்  அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ஜெயலலிதா தரப்பினரின் மேல் முறையீட்டு மனுவை   விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015  ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி நால்வரும் நிரபராதிகள் என விடுதலை செய்தார். குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்  முறையீடு செய்தது. மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ்,  அமிதவ் ராய் அடங்கிய டிவிசன் பெஞ்ச்  2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம்     13   ஆம் திகதி  விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது.2016 ஆம் ஆண்டு டிசம்பர்  5 ஆம் திகதி ஜெயலலிதா மரணமானார்.  நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ்,  அமிதவ் ராய் அடங்கிய டிவிசன் பெஞ்ச் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்  14  ஆம் திகதி வழங்கிய தீர்ப்பில் நீதிபத்தி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது.


ஜெயலலிதா மரணமானதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ஆட்சியையும் கைப்பற்றும் நோக்கில் சசிகலாவும் அவருடைய குடும்பத்தவர்களும் செயற்பட்டனர். ஜெயலலிதாவின் உடல் வைத்தியசாலையில் இருக்கும் போதே முதலமைச்சர் பன்னீர்ச்செல்வமும் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். வீட்டில் இருந்தும் கழகத்தில் இருந்தும் ஜெயலலிதாவால்  விரட்டப்பட்டவர்கள் அவருடைய சடலத்தைச் சுற்றிப்  பாதுகாப்பாக நின்றனர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தூரத்தில் நின்று கண்ணீர் வடித்தனர். 

பன்னீர்ச்செல்வத்தின் தலைமையில் தமிழக அரசு செயற்படும் என நினைத்தவர்களின் எண்ணத்தில் சசிகலாவின் விருப்பம் பேரிடியாக அமைந்தது. சசிகலாவைப் பொதுச்செயலாளராக்க வேண்டும் என்ற கோஷம் ஓங்கி ஒலித்தது. கழக விதியை மீறி சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமித்தனர். முதலமைச்சர் பதவியின் மீது சசிகலாவின் பார்வை விழுந்தது. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என கழக விசுவாசிகள் விரும்பினர். சாதுவாக இருந்த  பன்னீர்ச்செல்வம்   போர்க்கோலம் பூண்டார். சசிகலா அணி பன்னீர்ச்செல்வம் அணி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டானது.

சசிகலாவும் பன்னீர்ச்செல்வமும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர ராவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.  சசிகலாவின் உத்தரவுக்கிணங்க சொகுசு ஹோட்டலில் சட்டமன்ற உறுப்பினர்கள்  தங்கவைக்கப்பட்டனர்.. இந்திய அரசியல்வாதிகளின் பார்வை தமிழகத்தை நோக்கித் திரும்பியது. ஆளுநரின் முடிவுக்காக இரண்டு தரப்பும்  காத்திருந்தது. சட்டமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக வெளியில்விட்டால் அவர்கள்  பன்னீரின் பக்கம் போய்விடுவார்கள் என சசிகலா அச்சப்பட்டார். மக்கள் ஆதரவு பன்னீர்ச்செல்வத்தின் பக்கம்  திரும்பியது.  ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களும்பன்னிரண்டு  நாடாளுமன்ற உறுப்பினர்களும் பன்னீர்ச்செல்வத்தின் பக்கம் சேர்ந்தனர்.

அறுதிப்பெரும்பான்மை இருப்பதால் முதலமைச்சராகி விடலாம் என சசிகலா நினைத்தார். ஆனால், ஆளுநரின் எண்ணம் வேறுவிதமாக இருந்தது. சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு வரும்வரை பொறுமைகாக்க வேவண்டும் என ஆளுநர் நினைத்தார். தீர்ப்பைப் பற்றிக்  கவலைப்படாது  முதலமைச்சராகும் நோக்கில் சசிகலா செயற்பட்டார். சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதம் கொடுக்கப்பட்டால் முதலமைச்சருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டியது ஆளுநரின் கடமை பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என சசிகலா முழங்கினார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நடைபெறும் பதவிப்போட்டி ஊடகங்களுக்கு நல்ல தீனியாக அமைந்தது. தொலைக் கட்சித் தொடர்களைப் பார்ப்பவர்களின் தொகை குறைந்தது.

சசிகலாவும் பன்னீர்ச்செல்வமும்  ஏட்டிக்குப் போட்டியாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தனர். சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழக சட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் தனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என சசிகலா தொடர்ந்து அறிவித்தார். சசிகலாவால் சிறை வைக்கப்பட்டிருக்கும் சட்ட சபை உறுப்பினர்களில் பலர் தனக்கு ஆதரவு தருவார்கள் என பன்னீர்ச்செல்வம் தெரிவித்தார். சசிகலாவின் பிடியில் இருந்து தப்பியவர்கள் பன்னீர்ச்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பன்னீரைச்சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்தனர். தமிழக சட்ட சபையின் முன்னாள் அமைச்சர்கள் உறுப்பினர்கள் பன்னீர்ச்செல்வத்தின் பின்னால் அணிவகுத்தனர். தமிழக அரசியல் மிகமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.ஆளும் கட்சி இரண்டாகி பதவிக்காகப்  போராடியது.

ஜெயலலிதாவின் வழியில்ஆட்சி அமைக்கப்போவதாக இரண்டு அணித்தலைவர்களும் முழங்கினர். எம்.ஜி.ஆரால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அரசியல் ஆளுமை மிக்கவர்கள் அவரின் பின்னால் இருந்தனர். சசிகலாவின் பின்னால் பதவி ஆசை கொண்டவர்கள் அடிமைபோல்  நிற்கின்றனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனது கைகளுக்கு வரும் என அப்போது சசிகலா கனவிலும் நினைத்திருக்க மாட்டார். சசிகலாவின் கொந்தளிப்பை உச்ச நீதிமன்றம் அடக்கியது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  மூவரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர்.சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வெளியானதும் பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளர்கள் குதூகலம் அடைந்தனர். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளி என்பதை அவர்கள் மறந்து விட்டனர்
 சசிகலாவின் அணி உற்சாகம்  இழந்தது.சட்ட மன்ற உறுப்பினர்களை தடுத்து வைத்திருக்கும் உல்லாச ஹோட்டலில் சசிகலா ஆலோசனை நடத்தினர். சசிகலாவின் நம்பிக்கைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா மறைந்ததும் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க  சசிகலா விரும்பினார். மத்திய அரசு கொடுத்த நெருக்கடியினால் அவர் முதலமைச்சராகும் வாய்ப்பு பறிபோனது.  நீதிமன்றத் தீர்ப்பு எடப்பாடிக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராகக் கூடாது என்பதில் சசிகலா உறுதியாக இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான குழு ஆளுநரைச்சந்தித்து  ஆட்சி அமைக்க அனுமதி கோரியது.   ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட தினகரனும் அந்தக்குழுவில்
இடம்பெற்றிருந்தார்.முன்னதாக சசிகலா ஆளுநரைச் சந்திக்கச்சென்ற போதும் தினகரனும் உடன் சென்றிருந்தார். இதனை  ஜெயலலிதாவின் விசுவாசிகள் விரும்பவில்லை. பன்னீர்ச்செல்வம் தரப்பினரும் ஆளுநரைச்சந்தித்தது.

நெருக்கடியான இந்த நேரத்தில் சிறைக்குசெல்ல விரும்பாத சசிகலா சரணடைவதற்கு கால அவகாசம் கோரினார். மறுப்புத் தெயவித்த உச்ச நீதிமன்றம் உடனடியாகச் சரணடையுமாறு உத்தரவு பிறப்பித்தது. சசிகலாவும் இளவரசியும் ஒரு காரில் சென்றனர். சுதாகரன் சற்று தாமதமாக சென்று சரணடைந்தார்.நான்கு வருடங்களுக்கு இவர்கள் வெளியே வரமுடியாது. உரிய காரணத்தைக் காட்டி பரோலில் வெளியே வந்து மீண்டும் சிறைக்குச்செல்ல வேண்டும் மறுசீராய்வுக்கு மனுச்செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அதில் வெற்றி பெறுவதற்கு சந்தர்ப்பம் மிகக் குறைவு.

ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட டி டி தினகரனையும் வெங்கடேசனையும் மன்னித்த சசிகலா அவர்களை மீண்டும் கட்சியில்  சேர்த்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இல்லாத துணைச்செயலாளர் பதவியை தினகரனுக்குக் கொடுத்துள்ளார் சசிகலா. கட்சியும் ஆட்சியும் தனது குடும்பக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே சசிகலாவின் நோக்கம். சசிகலாவின் பின்னால் நிற்பவர்களில் எவரும் இதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. கட்சியின் செயலாளர் தான் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவே பன்னீர்ச்செல்வத்திடம் இருந்து பதவியைப் பறிக்க திட்டம் தீட்டப்பட்டது. இப்போது இரண்டு பதவிகளுக்கும் இரண்டு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட மன்ற உறுப்பினர்களின் கணக்கைக் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். அவருடன்  30  அமைசர்களும்  பதவி ஏற்றுள்ளனர். சசிகலா சிறையில் இருப்பதை மறந்து அவரது ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி லட்டு வழங்கி கொண்டாடுகிறார்கள்.ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்ட செங்கோட்டையனும் அமைச்சராகி உள்ளார். எதிர் வரும் சனிக்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்தாலும் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாதான் அவர்களை இயக்கப்போகிறார்.
வர்மா

No comments: