பத்திரிகைத்துறை
இலக்கிய உலகம் ஆகிய இரண்டிலும் ஆழக்கால் பதித்து தனது ஆளுமையை
வெளிப்படுத்திவருபவர் முருகபூபதி. அவர் சென்றுவந்த நாடுகளில் சந்தித்த
அனுபவங்களையும், படிப்பினைகளையும், மனிதர்களையும் பற்றி எழுதியவற்றை "சொல்ல
வேண்டிய கதைகள்" என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். ஜீவநதி மாத
சஞ்சிகையில் 2013 ஆம் ஆண்டு தை மாதம் முதல்
தொடர்ச்சியாக 20 மாதங்கள் பிரசுரமானவற்றையே
தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
"இந்தப்புத்தகத்தில்
எனது குடும்பத்தில்,சுற்றத்தில் நட்புகளில், ஆழ்ந்து நேசிக்கின்ற குழந்தைகளில்
மற்றும் நான் அங்கம் வகிக்கும் அமைப்புகளில் கற்றதையும் பெற்றதையும்தான் பதிவு
செய்துள்ளேன். 2014 ஆண்டில் எழுதப்பட்ட
தொடர் என்பதால் இந்தப் பதிவுகளின் காலத்தையும் அவதானித்துக் கொள்ளவும்" என முருகபூபதி
குறிப்பிட்டுள்ளார்.
பயணக்
கட்டுரைகள் பற்றிய தொடர்கள் பல
தளங்களில் பிரசுரமாகி உள்ளன. அவற்றில் சில புத்தகமாகவும் வெளியாகி உள்ளன.
முருகபூபதியின் "சொல்ல வேண்டிய கதைகள்" அவற்றைவிட
தனித்துவமாகவும் வித்தியசமானதாகவும் விளங்குகிறது. அவருடன் வாழ்ந்த உறவினர்கள்,
பழகிய நண்பர்கள், அறிமுகம் இல்லாத புதியவர்கள் ஆகியோருடனான அனுபவங்களைப் பகிர்ந்து
கொள்கிறார். அவற்றில் சில வாசகர்களுக்கு எச்சரிக்கையாகவும் படிப்பினையாகவும்
அமைகின்றன. ஒரு சில வாசகருக்கு ஏற்பட்ட அனுபவம் போல் தெரிகின்றன. இந்தப்
புத்தகத்தில் 20 கட்டுரைகள் உள்ளன.
சிலவற்றில் தனது அரசியல் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளர்.
முருகபூபதியின்
தாயின் தகப்பன் பொலிஸ்காரர். ஆகையால் தாயை பொலிஸ்காரன் மகள் என முதலாவது
கட்டுரையில் அறிமுகப்படுத்துகிறார். அவர் மீது தாய் அவைத்திருந்த அன்பையும்
தாயுடைய உள்ளுணர்வையும் அறிய முடிகிறது. சாகித்திய விருது பெறுபவர் செய்தியின்
மூலமாகத்தான் அதனைத் தெரிந்து கொள்ளமுடியும் என்பதையும் பதிவு செய்துள்ளார்.
முருகபூபதி |
முருகபூபதியின் கொள்கையைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு
குலதெய்வம் எனும் அடுத்த பந்தியின் தலைப்பு முரணாகத்
தெரிந்திருக்கும். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை இப் பந்தியின்
வாயிலாகத் தெளிவு படுத்துகிறார். பல வீடுகளில் தேடுவரர்றுக்
கிடக்கும் அம்மி, ஆட்டக்கல்லு என்பனதான் தனது குல தெய்வம் என்பதை அடுத்த
சந்ததிக்கு உணர்த்தும் பதிவு. மதிக்கப்படுபவர்களில் ஒருவராக உயர்ந்த இடத்தில்
இருக்கும் முருகபூபதி, "தோசை சிறுக்கன்" என்ற பெயரை பெருமையாக நினைவு
படுத்துகிறார்..
வெளிநாட்டில்
வசித்து விட்டு
நாட்டுக்குத் திரும்புபவர்கள் இலங்கையில் நிற்கும் நாட்களில் திட்டமிடாது
செயற்பட்டு, உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்காமல் சென்றுவிடுவார்கள். ஆனால்,
முருகபூபதி, ஒரு
ஊருக்குச்செல்லும் போது அங்குள்ள தனது உறவினர் நண்பர், சந்திக்க வேண்டிய புதியவர் பற்றிய
விபரங்களுடன் தான் செல்வார். ஜீவநதியில் பிரசுரமான குந்தவையின் கதையைப்
படித்தபின் இலங்கைக்குச்சென்றபோது குந்தவையைச் சந்தித்து நாற்சார்
வீட்டைப்பற்றிய குறிப்பைப் பதிவு செய்துள்ளார்.
காவியமாகும்
கல்லறைகள் எனும் கட்டுரையின் வாயிலாக தமிழகத்தின்
முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை,எம்.ஜி.ஆர், கே.டானியல்,லெனின்,ஹென்றி லோசன்,கிறின்
சேகுவேரா, கார்ல் மாக்ஸ் ஆகியோரை ஞாபகப்படுத்துகிறார். தான் தரிசித்து
அஞ்சலி செலுத்திய கல்லறைகளை உணர்வுபூரமாகவும் தரிசிக்காதவற்றை கவலையுடனும் தெரியப்படுத்துகிறார்.
இலங்கை,இந்தியா,
பாகிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் தேர்தல் என்றால் கலவரமும் வன்செயல்களும்
முன்னிலை பெறுகின்றன. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் தேர்தலை "எங்கள் நாட்டில்
தேர்தல்" என முருகபூபதி பதிவிட்டுள்ளார். அங்கு தேர்தலில்
கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்தால் அங்குள்ள
தூதரகத்தில் வாக்களிக்க வேண்டும். கள்ள வாக்கு, ஆள்மாறாட்டம் எதுவுமே அங்கு இல்லை. இந்தக்
கட்டுரையின் மூலம் இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் தேர்தல் காலத்தில் தனது
அனுபவங்களை வெளிப்படுத்துகிறார். இலங்கையில் தனது தேர்தல் பிரசாரங்களையும் நினைவு
படுத்துகிறார்.
படித்தவற்றை
என்ன செய்வது? புத்தகங்களை அவதானமாக பாதுகாத்து வைத்திருப்பது பெரிய பிரச்சினைதான்.
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான முருகபூபதிக்கும் இந்தபிரச்சினை இருக்கிறது.
இலங்கையில் இருக்கும் போது சிலவற்றை புதுவைக்குக் கொடுத்திருக்கிறார்.
புதுவைக்கும் புத்தகங்களுக்கும் என்ன நடந்தது என தெரியாத நிலையில் இருக்கிறார்.
சில பாடசாலைகளுக்கும் வசிகசளைகளுக்கும் அவர் தன்னிடம் இருந்த
புத்தகங்களைக் கொடுத்துள்ளார்.
பல எழுத்தாளர்கள்
இணைந்து எழுதிய தொடர்கதை, நாவல் நெடுங்கதை என்பனவற்றைப் பற்றி இலக்கியத்தில் கூட்டணி
எனும் தலைப்பில் விபரிக்கிறார். இலங்கைப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும்
வெளியான இலக்கியக் கூட்டணி பற்றிய விபரங்களையும் அவுஸ்திரேலியாவில் இருந்து
வெளியான அக்கினிக்குஞ்சு எனும் இனிய இதழில் சுவிட்ஸர்லாந்து
,பிரான்ஸ்,டென்மார்க்,ஜேர்மனி,கனடா,நோர்வே,அவுஸ்திரேலியா,இலண்டன், யாழ்ப்பாணம்,
ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இணைந்து எழுதிய தொடர்கதையைப் பற்றிய விபரத்தையும்
பதிந்துள்ளார்.
சொல்ல வேண்டிய
கதைகள் என்ற புத்தகத்தில் உள்ள 20 கட்டுரைகளும். ஏதோ ஒருவகையில் வாசிப்பவரின்
வாழ்க்கையில் வந்து போன சம்பவங்களில் எச்சமாக இருக்கின்றன. முருகபூபதி, அனுபவத்தில்
சந்தித்த சொல்ல வேண்டிய கதைகள் இன்னமும் உள்ளன. சந்தர்ப்பம் கிடைக்கும் போது
அவற்றை அவர் பதிவு செய்து வருகிறார். அவருடைய பட்டறிவு அனைத்தும் அனைவருக்கும்
பிரயோசனமாக உள்ளன.
நன்றி;
ஜீவநதி
No comments:
Post a Comment