Monday, August 6, 2018

ஈழத்து ஆலயங்களில் ஒலிக்கும் நம்மவர் குரல்





அதிகாலையில் கோயில்மணி ஓசையுடன் பொழுது புலர்வது அன்று தொட்டு வழமையான ஒன்று. கோயில் மணி ஓசையுடன் பக்திப் பாடல்களும் இப்போது மக்களைத் துயில் எழுப்புகின்றன. இந்தியப் பக்திப்பாடல்கள்  ஒலித்த நமது ஆலயங்களில் இன்று நம் நாட்டுக் கவிஞர்கள் எழுதிய  நமது நாட்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்த நமது நாட்டுப் பாடகர்கள் பாடிய பாடல்கள் ஒலிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள பல கோயில்களில் ஒலிக்கும் பக்திப் பாடல்கலை எழுதியவர் விஷ்ணுப்ரியா.

விஷ்ணுப்ரியா என்ற புனை பெயரில் கவிதைகளையும் பக்திப் பாடல்கலையும் எழுதுபவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் மாணிக்கம் கிருஷ்ணகாந்தன்.தேவரையாளி இந்துக்கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி, மருதானை சாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்றவர்.

கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்ற  இவர், கேகாலை தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம், கொட்டஞ்சேனை உப்புக்குளம் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயம்,வவுனிக்குளம் 2ஆம் யுனிட் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, மன்னார் சிராட்டிகுளம் தமிழ் கலவன் பாடசாலை,தட்சணாமருதமடு அ.த.க.பாடசாலை,தேவரையாளி இந்துக்கல்லூரி,குடத்தனை அமெரிக்க மிஷன் த.க.பாடசாலை,உடுப்பிட்டி அமெரிக்க மிஷன்கல்லூரி,வதிரி வடக்கு மெதடிஷ்த த.ம.வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவராவார்.

வதிரி பூவற்கரை  பிள்ளையார் ஆலய முன்னாள் தலைவரும் வதிரி தமிழமன்றம் வட்டுவத்தை சனசமூக நிலையம், தமிழ் மன்றம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரும்  வதிரி டையமண்ட் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் வீரருமாவார்.

கே; கவிதை எழுதும் ஆற்றல் உங்களுக்கு எப்படி அமைந்தது?

ப; பாடசாலையில் படிக்கும் காலத்தில் சைவப்புலவர்  சி. வல்லிபுரம் எமக்குத் தமிழ் ஆசிரியராக இருந்தார். அப்போது வெண்பா எழுதுவது எப்படி என்று கற்றுக்கொடுத்தார். அதே போல் அறுசீர் விருத்தம்,எண்சீர் விருத்தம்,அந்தாதி என்பனவற்றை எப்படி எழுத வேண்டும் எனவும் சொல்லிக்கொடுத்தார்.  அவருடைய பாடத்தின் போது வெண்பா,அறுசீர் விருத்தம் எண்சீர் விருத்தம் என்பனவற்றை எழுத வேண்டும் அதன் காரணமாக கவிதை எழுதும் ஆற்றல் உருவாகிவிட்டது.

கே; உங்களுடைய கவிதையைப் பற்றி ஆசிரியரின் கருத்து எப்படி இருந்தது.?

ப; எனது தமிழ் ஆசான் அமரர் சி.வலிபுரம், எனக்குத் தேவையான தமிழ் வளங்களைத் தெளிவாகவே ஊட்டியவர். அதிலும் க.பொ.த.{சா.த } வகுப்பில் இலக்கியத்திற்காகக் கம்பராமாயணம், கும்பகர்ணன் வதைப் படலம் போன்ற பாடல்களை எனது ஆசான் எனக்கு விளக்கிய விதமும் அதிலுள்ள நயங்களைத் தெரிய வைத்த பாங்கும்  எனக்குக் கவிதைமேல் தீராத ஆவலை ஏற்படுத்தியது. இதற்குத் துணையாக ஈற்றடியைத்  தந்து வெண்பா இயற்றும் பயிற்சியை எமக்கு அளித்தார். ”பாலும் தெளி தேனும்” எனும் வெண்பாவை  எனது விருப்பப்படி மாற்றி எழுதிக் காட்டினேன்.
பார்த்ததும் பளார் என எனது கன்னத்தில் ஓர் அறை. சிறிது நேரத்ஹ்டின் பின் என்னை அழைத்து வெண்பாவைப் புகழ்ந்தார்.


கே; வெண்பா நல்லதென்றால் எதற்காக அந்த அறை? அந்த வெண்பா இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறதா?

ப;  நான் நிவேதித்த பொருட்கள் ஆசானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது எனப் புரிந்து கொண்டேன்.
“பற்றீசுடன் கட்லட் பதமான பட்டர் பாண்
வெற்றிலையும் நான் தந்து வேண்டுவேன் - சற்குணனே
இருதார மணம் புரிந்த இளமுரு
கா நான்  விரும்பும்
ஒருதார மளிப்பாய் ஓம்

கே: எப்படிப்பட்ட கவிதைகளை எழுதியுள்ளீர்கள்?

ப: இயற்கை,அன்பு,பாசம், ஆன்மீகம், பாராட்டு, அரசியல்,பண்டிகைகள், சுனாமி,கூத்து , மாற்றுத் திறனாளி, இனப்பிரச்சினை ,தேர்தல், பணம்  போன்ற மனதில் பட்ட அனைத்தையும் கவிதையாக்கினேன்.

கே: இதுவரை எத்தனி கவிதைகள் எழுதியிருப்பீர்கள்?

ப: ஆரம்பத்தில் நான் எழுதிய கவிதைகள் கொப்பிகளிலே கிடந்தன. அவற்றை சேர்க்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் நான் எழுதியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது சுமார்   150 கவிதைகள் கைவசம் உள்ளன. கவிதைகள் கொப்பியில் தூங்காமல் பத்திரிகைகளில் பிரசுரமாக வேண்டும் என விரும்பினேன்.


கே: உங்களது கவிதைகள் பிரசுரமான பத்திரிகைகள்  எவை?
ப: வலம்புரி,சுடர் ஒளி, தினக்குரல்,வீரகேசரி , உதயன் ஆகிய பத்திரிகைகளில் எனது கவிதைகள் பிரசுரமாகின.

கே:  கவிதைகளை எழுதுவதற்கான சூழ்நிலைகள் எப்படி உண்டாகின.?

ப: சில சம்பவங்கள், சந்திக்கும் மனிதரின் குணங்கள்  போன்றவை கவிதைகளாகின. எனது பேரன் பங்குபற்றும் கவியரங்குகளுக்காக கவிதைகளை ஆக்கியமையும் நான் கவிதையைத் தொடர்வதற்கு  ஒரு காரணியானது.


கே: உங்களுக்குப் பிடித்தமான கவிஞர்கள் யார்?

ப:    மகாவித்வான் பிரம்மஸ்ரீ வீரமணி ஐயர்,கவிஞர் சோ.ப.வைரமுத்து,மு.மேத்தா,பாரதிதாசன்.  மகாவித்வான் பிரம்மஸ்ரீ வீரமணி ஐயரை எனது மானசீகக் குருவாக வரித்துக் கொண்டேன். அவரது கற்பனையில் உதித்த  “ சுட்டிபுரம் வழும் சிவ சுந்தரியே” என்கின்ற பாடலே என்னுள் கவிதை எழுதும் திறனுக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

கே: கவிஞரான விஷ்ணுப்ரியா பாடலாசிரியரானது எப்படி? பக்திப் பாடல்களை எழுதுவதற்குத் தூண்டு கோலாக அமைந்த சம்பவம் எது?

ப: எமது  வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் ஒரு சிறிய கடையை ஆரம்பித்து வியாபாரம் செய்தேன். சும்மா இருக்கும் போது பிள்ளையாரைப்  பார்த்தபடி ஏதாவது எழுதுவேன். அதுவே பக்திப் பாடலானது.  ஆலய பரிபாலன சபைத்  தலவரானபின்னர் எனக்கும் பிள்ளையாருக்கும் இடையில் இருந்த இடைவெளி குறைந்தது.

எனக்கு மிகவும்  பிடித்தமான இராகம் ஷாமா. அந்த இராகத்தில் தான் நான் முதன் முதலில் என் குல தெய்வத்துக்கு “வேழ முகம் கொண்ட நாயகனே” என்ற பாடலை எழுதினேன்.எமது ஆலய திருவிழா ஒன்றில் எனது நண்பரும் சங்கீத வித்துவானுமாகிய செ.குமாரசாமி பாடியமை என்னை உற்சாகப்படுத்தி இத்தனை பாடல்களையும் எழுத வைத்தது.
பூவற்கரைப் பிள்ளையாரின் பாடல் இறுவட்டு வெளியாதும்  ஏனைய கோயில்களில்  இருந்தும் பாடல்கள் எழுதும்படி எனக்கு அழைப்பு வந்தது.

கே :எத்தனை கோயில்களுக்கு பக்திப் பாடல்கள் எழுதியுள்ளீர்கள்?

ப: வதிரி பூவற்கரை பிள்ளையார், வல்வெட்டி வன்னியப்பிள்ளையார், கம்பர்மலை ஞான வைரவர், புதுத்தோட்ட விநாயகர்,  ஏழாலை வசந்த நாகபூசணி அம்மன், எள்ளங்குளம் முத்துமாரி அம்மன் ஆகிய கோயில்களுக்கு நான் எழுதிய பக்திப் பாடல்கள் இறுவட்டுக்களாக வெளிவந்துள்ளன.

கே: கவிதைகளுக்கும் பக்திப் பாடல்களுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?

ப: கவிதைகள் யாப்பிலக்கணத்துக் குட்பட்டவை.கனதியானவை. பாடல்கள் சற்று நெகிழ்ச்சிப் போக்கானவை.அழகிய சொற்கள் பாடல்களாக மிளிரும்.  ஆனால், கவிதை அப்படியல்ல பாடல் எழுதுவதிலும் பார்க்க கவிதை எழுதுவ்ழ்து சற்று கடினமானது.

கே: உங்கள் பக்திப் பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் யார்?

ப: இசை விரிவுரையாளர் செ.குமாரசாமி, இசை விரிவுரையாளர் செ. பத்மலிங்கம்,மல்லாகம் வரதன் ,எஸ்.திவாகர்,செல்வி.ரி.தினிஷா ஆகியோர் எனது பாடல்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

கே:      அவர்களின் இசை அமைப்பில் அப் பாடல்களைப் பாடியவர்கள் ?

ப: இசைவிரிவுரையாளர் செ.குமாரசாமி, மல்லாகம்  வரதன் என்.கே.ரகுநாதன், ஏழாலை வரதன், சாந்தன், ஜெயபாரதி ஆகியோர் பாடியுள்ளனர்.

கே: இறுவட்டில் வெளிவராத பக்திப்பாடல்கள் கைவசம் இருக்கிறதா?

ப: நல்லூர்,  தொண்டமனாறு செல்வச்சன்னதி, வல்லிபுர ஆழ்வார், பூவற்கரைப் பிள்ளையார் , அல்வாய்  சாமணந்தறை பாலகணபதி, நயினாதீவு நாக பூஷணி ஆகிய கோயில் பாடல்களும்  ஆலயக் கும்பாபிஷேக, தேர் வெள்ளோட்ட சிறப்பு மலர்களில் உள்ள பாடல்களும் இறுவட்டுகளாக வெளிவரவில்லை.
அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன்ஆலய நிர்வாகம் கேட்டதற்கிணங்க 11 பாடல்களை எழுதிக் கொடுத்தேன். வருடங்கள் பல கடந்தும் வெளிவராதது வியப்பாக இருக்கிறது.


கே: அவற்றை என்ன செய்வதாக உத்தேசம்?
ப: அவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தொகுப்பாக்க   வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.

வர்மா
தினக்குரல்
29/07/2018






No comments: