Saturday, August 11, 2018

தமிழக அரசியலில் அநீதியின் உச்சக்கட்டம்



 அரசியலில் எதிரியும் இல்லை. நண்பர்களும் இல்லை எனத் தத்துவம் சொன்ன ஜெயலலிதா தனது அரசியல் வளர்ச்சிக்காக சிலசமயங்களில் எதிரிகளுடன் கைகோர்த்துள்ளார். பலசமயங்களில்   தயவு தாட்சண்யம் பார்க்காமல் எதிரிகளைப் பழிவாங்கி உள்ளார். குரோத அரசியலைத் தமிழகத்தில்  வளர்த்துவிட்டதில் ஜெயலலிதாவுக்கு முக்கிய  பங்கு இருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சியைத் தமிழகத்தில் நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொள்ளும் ஓபிஎஸ்,ஈபிஎஸ் கோஷ்டிகளும் ஜெயலலிதாவுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியாக வாழ்ந்த சசிகலாவின் கணவன் நடராஜன் அண்மையில் காலமானார். அரசியலில்  எதிரிகளாக இருந்த தலைவர்கள்  பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நேரில் செல்லாதவர்கள் அனுதாபச்செய்தி வெளியிட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத் தலைவர்கள் எவரும் மரண வீட்டுக்குச்செல்லவில்லை. அதேவேளை அனுதாபச் செய்தியும் வெளியிடவில்லை. நேரில் சென்று அஞ்சலி செலுத்தினால் அல்லது அனுதாபச் செய்தி வெளியிட்டால் தினகரன் தரப்பு அதனை அரசியலாக்கிவிடும் என நொண்டிச்சாக்குத் சொன்னார்கள்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அவரைச் சந்திப்பதற்கு சசிகலாவைத் திருப்திப்படுத்த வேண்டிய நிலை இருந்தது. சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் ஜெயலலிதா  ஒதுக்கி வைத்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களும் ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்துவதற்காக சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைத்தார்கள். சசிகலாவை ஜெயலலிதா மன்னித்தபோது ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் அடிமையாக இருந்தார்கள்.

ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் சசிகலாவின் பதவி ஆசைக்கு எடப்பாடி தரப்பு  ஆதரவு தெரிவித்தது. பன்னீர் குழுவினர் போர்க்கொடி தூக்கினார்கள். ஜெயலலிதாவை அம்மா என்றவர்கள் சசிகலாவை சின்னம்மா என தூக்கித் தலையில் வைத்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் இரட்டை இலைச்சின்னமும் முடக்கப்பட்டதால் பதவியைத் தக்கவைப்பதற்காக  இருவரும் இணைந்தனர்.

கருணாநிதியின் தமிழக அரசு செய்தவைகள் அனைத்தையும் ஜெயலலிதா முதல்வரானபின் தூக்கி எறிந்தார். புதிய தலமைச்செயலகத்தை முடக்கினார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஜெயலலிதா அரசு கண்டுகொள்ளவில்லை. கருணாநிதி நிறுவிய கண்ணகி சிலையை அகற்றிய ஜெயலலிதா அதனை மறைத்து வைத்தார். கருணாநிதி முதல்வரானதும் அதனை மீண்டும் நிறுவினார்.


 சிவாஜியின்  சிலையை கருணாநிதி அமைத்ததால்  நீதிமன்றத்தின் மூலம் அது அகற்றப்பட்டு சிவாஜி மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது.  கொடுமை என்ன வென்றால் கருணாநிதியின் பெயர் அகற்றப்பட்டது.
கருணாநிதி மறைந்ததும் அவரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு மறுத்தது. திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்தை நாடியதால் அண்ணாவின் அருகே கலைஞர் அடக்கம் செய்யப்பட்டார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பத்துக்கமைய எம்.ஜி.ஆருக்கு அருகில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டார். அதனை எதிர்த்து  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சில அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் ஜெயலலிதாவை மெரீனாவில் அடக்கம் செய்யப்பட்டதற்கு  எதிராக   வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளைக் காரணம் காட்டி தமிழக அரசு மறுத்தது. வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்ட போதும் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க முடியாததால் அண்ணாவின் அருகே கலைஞருக்கு இடம் கிடைத்தது.

எடப்பாடியின் தலமையிலான  அரசின்மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். கருணாநிதியின் இறப்பை தமிழக அரசு அரசியலாக்கியதால் மக்களின் வெறுப்பு மேலும் அதிகரித்துள்ளது. வாபஸ் பெறப்பட்ட ஜெயலலிதாவின் சமாதிக்கு எதிரான வழக்குகள் வேறு ரூபத்தில் கிளம்பும் சாத்தியம் உள்ளது.

No comments: