Thursday, July 19, 2018

அரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்


தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் ஏறிய பாரதீய ஜனதாக் கட்சி  தமிழகத்தில் கால் பதித்தது.

அறுதிப் பெரும்பான்மை இல்லாது ஈடாடிக்கொண்டிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை பாரதீய ஜனதா தாங்கிப் பிடிக்கிறது. ஆட்சியைத் தக்க வைப்பதற்காக ஜெயலலிதா நிராகரித்த திட்டங்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு ஒப்புதல் அளித்தது. பாரதீய ஜனதாவின் மீதான மக்களின் கோபம் தம் மீது மீதுபடிவதை உணர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மத்திய அரசுக்கெதிராகக் காய் நகர்த்தத் தொடங்கியது.  அணைக் கட்டு மசோதா,  பல்கலைக் கழக மானியக் குழு  ஆகியவற்றுக்கு  எடப்பாடி பழனிச்சாமி தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் பாதை மாறுவதை உணர்ந்த பாரதீய ஜனதா வருமான வரி என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டத் தொடங்கியுள்ளது. மத்திய அரசுக்கு அடிபணியாத மாநிலத் தலைவர்களை அடக்கும் ஆயுதமாக வருமான வரிச் சோதனை, ஊழல்,சிபிஐ விசாரணை போன்றவற்றை மத்திய அரசு கையில் எடுத்து மிரட்டுவது அன்று முதல் இன்றுவரை நடைபெறும் சர்வ சாதாரண நிகழ்ச்சியாகும்.

நரேந்திர மோடியுடன் இணைந்து பாரதீய ஜனதாவை இயக்கும்  அமித் ஷா தமிழகத்துக்கு விஜயம் செய்தபோது இந்தியாவில் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது என்றார். அந்தச் செய்தியின் பரபரப்பு அடங்குவதற்கிடையில்  எடப்பாடி பழனிச்சாமி,ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகியவர்களுடன் நெருக்கமான இரண்டு நிறுவனங்களின் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தி கணக்கில் இல்லாத பலகோடி ரூபா பணம், கிலோக் கணக்கில் தங்கம், பல கோடி ரூபா மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர்.   

       
தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்ரி நிறுவனத்துடன் தொடர்புடைய  அலுவலகங்கள், வீடுகள் உட்பட 176 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை சோதனை செய்தனர். தமிழகம் ,கர்நாடகம் ஆகிய  மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில் 17 கோடி ரூபா பணம்,10 கிலோ தங்கம், ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. கிறிஸ்ரி நிறுவன மில் காசாளர் கார்த்திகேயன், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். காயமடைந்த் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

எடப்பாடியின் கையில் இருக்கும் நெடுஞ்சாலை ஒப்பந்தகாரர் செய்யாத்துரையின் மீது வருமான வரித்துறையின் பார்வை விழுந்துள்ளது. ஓ.பன்னீர்ச்செல்வத்தின் பிடியில் நெடுஞ்சாலை இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்த செய்யாத்துரை, நெடுஞ்சாலை இடம்மாறி எடப்பாடியிடம் போனபோது  அவரும் இடம் மாறினார்.

மணல்குவாரி என்றால் சேகர் ரெட்டி போல நெடுஞ்சாலை என்றால் செய்யாத்துரை என்பது தமிழக அரசின் எழுதப்படாத சட்டம். ஆட்டு வியாபாரம் செய்து வந்த செய்யாத்துரையும் அவரது மகன்களும் அன்வர் பாய் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பினால் தமிழக அரசின் சாலை ஒப்பந்தங்களைப் பொறுப்பேற்றனர்.  செய்யாத்துரை குழுமம் எஸ்பிகே குழுமமாகியதும் தமிழக நெடுஞ்சாலைகள் அனைத்தையும் கைப்பற்றியது. தமிழ்கட்தின் நெடுஞ்சாலைப் பொறியியலாளர்களும் எஸ்பிகே நிறுவனத்தைத் தட்டிக் கேட்க முடியாதநிலை ஏற்பட்டது.

தமிழக முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் மிக நெருங்கிய புள்ளியின் மீது மத்திய அரசின் பார்வை விழுந்துள்ளது.  செய்யாத்துரையுடன் தொடர்புடைய நிறுவனங்கள்,அலுவலகங்கள் ,வீடுகள் என்பனவற்றின் மீது  வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை  இந்தியாவையே திரும்பிப் பார்க்க  வைத்தது. புதையல் போல அள்ள அள்ள பணமும் தங்கக் கட்டிகளும் கிடைத்தன.  சுவர்களிலும் கார்களிலும் பதுக்கி வைக்கப்பட்ட பனம், தங்கக் கட்டிகள் என்பன மீட்கப்பட்டன.வருமான வரித்துறையின் சோதனையின் முடிவில் 610  கோடி ரூபா பணாம்,310  கிலோ தங்கம். 300க்கும் அதிகமான சொத்துப் பத்திரங்கள். 250 பென் ட்ரைவ்கள், 56 ஹாட்டிஸ்கள், பினாமிகளின் பெயரிலான் ஆவணங்கள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்கு முறையாகக் காட்டப்படாவிட்டால், கனக்கில் இல்லாத பணம்,தங்கம்,சொத்து என்பனவற்றைப் பதுக்கி வைத்தால் சட்டம் பாயும் என்பதைத் தெரிந்துகொண்டும் இவற்றை ஒருவர் பதுக்கி வைக்கிறார் என்றால் அவருக்குப் பலமான பின்னணி இருப்பது ஒன்ரும் ரகசியமல்ல.

நெடுஞ்சாலை ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதா ஊழல் ஒழிப்புக் குழுவுக்கு திராவிட முன்னேற்றாக் கழகம்  கொடுத்த புகாரைத் தொடர்ந்து செய்யாத்துரையின்  மீது வருமான வரிஅதிகாரிகளின் பார்வை திரும்பியது. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கு பண உதவி செய்பவர்களின் மீது மத்ஹ்டிய அரசின் பார்வை விழுந்தது. அன்புநாதன்,சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர்,அப்போதைய  தலமைச் செயலர் ராம மோகன ராவ், சசிகலாவின் உறவினர்களின்  வீடுகள் அலுவலகங்கள் மீது மத்திய அரசின் ஆயுதம் பாய்ந்தது. அப்போது கோடிகோடியாகப் பணம், கிலோக் கனக்கில் தங்கம், ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.  தவிர கொண்டெய்னர்களில் கைப்பற்றப் பட்ட கோடிக்கனக்கான பணம் என்பனவற்றுக்கு என்ன நடந்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. இதுவும் அதுபோல் கடந்து போகுமா என்ற கேள்விக்கு எதிர்காலம் பதில் சொல்லும். 

No comments: