பெங்களூர்
சின்னசாமி மைதானத்தில்அவுஸ்திரேலியாவுக்கு எதிரான
மூன்றாவது ஒருநாள்போட்டியில் ஏழு விக்கெற்றால் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை
கைப்பற்றியது. மும்பையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியாவும்
ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
நாணயச்சுழற்சியில்
வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். இந்திய
அணியில் எதுவித மாற்றமும் இல்லை. அவுஸ்திரேலிய அணி வீரர் ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு
ஹெசல்வுட் இடம் பிடித்தார்.
டேவிட்
வானர், பிஞ்ச் ஆகியோர் போட்டியை ஆரம்பித்தனர்.
ஹமியின் பந்தில் மூன்று ஓட்டங்கள் எடுத்த வானர், விக்கெற் கீப்பர் ராகுலிடம் பிடிகொடுத்து
ஆட்டமிழந்தார் பிஞ்சுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். 19 ஓட்டங்கள் எடுத்த பிஞ்ச் ரன் அவுட்
முறையில் ஆட்டமிழந்தார். ஸ்மித்தினால் ரன் அவுட் ஆனதால் பிஞ்ச் கோபமாக வெளியேறினார்.
மூன்றாவது விக்கெற்றில் இணைந்த ஸ்மித், லபுஷேன் ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களை பரிதவிக்க வைத்தனர்.
8.5 ஓவரில் இணைந்த இந்த ஜோடி 31.3 ஓவர்வரை
விளையாடி 127 ஓட்டங்கள் எடுத்தது. ஜடேஜா வீசிய பந்தை அடித்த லபுஷேன் கோலியிடம் பிடிகொடுத்து
54 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி பிரிந்ததால் இந்திய ரசிகர்கள் ஆறுதலடைந்தனர்.
ஆனால், ஸ்மித் தனது அதிரடியால் கலங்க வைத்தார்.
ஸ்ரக் ஓட்டமெடுக்காது ஆட்டமிழந்தார். ஸ்மித்துடன் இணைந்த கிரே அவுஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கையளித்தார். 35 ஓட்டங்களில் கிரே ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய ஸ்மித் ஒருநாள் அரங்கில் தனது
ஒன்பதாவது சதத்தை அடித்தார். 131 ஓட்டங்களில்
ஸ்மித் ஆட்டமிழந்ததும் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வரிசை முடிவுக்கு வந்தது.
50
ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்த அவுஸ்திரேலியா 286 ஓட்டங்கள் எடுத்தது. ஷமி நான்கு
விக்கெற்களையும், ஜடேஜ இரண்டு விக்கெற்களையும், சைனி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு
விக்கெற்றையும் வீழத்தினர். இந்திய வீரர்கள் 27 உதிரிகளைக் கொடுத்தனர்.
287 எனும் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, மூன்று
விக்கெற்களை இழந்து 289 ஓட்டங்கள் எடுத்து
ஏழு விக்கெற்களால் வெற்றி பெற்றது. களத்தடுப்பின் போது காயமடைந்த தவான் துடுப்பெடுத்தாடவில்லை.
ரோகித் சர்மாவும், ராகுலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். 19 ஓட்டங்களில்
ராகுல் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெற்றில் ஜோடி சேர்ந்த ரோகித் கோலி ஜோடி வெற்றி இலக்கைத் துரத்தி அவுஸ்திரேலிய வீரகளைத்
தடுமாற வைத்தது. ரோகித் ஒரு நாள் அரங்கில் 29 ஆவது சதம் அடித்தார். மறு பக்கத்தில் கோலி 57
ஆவது அரைச் சதத்தை நிறைவு செய்தார். இரண்டாவது
விக்கெற்றில் இணைந்த இந்த ஜோடி 137 ஓட்டங்கள் எடுத்தது. 119 ஓட்டங்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.
ரோகித்
வெளியேற ஸ்ரேயாஸ் அய்யர் களம் புகுந்தார். இந்திய அணியின் பலவீனமான நான்காவது வீரராக
விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் பதற்றத்துடன் விளையாடினாலும் தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.
25 இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பந்துகளில்
13 ஓட்டங்கள் பெறும் நிலையில் இருந்தபோது கோலி ஆட்டமிழந்தார். வெற்றி இலக்கைத் துரத்தும்போது
துடுப்பெடுத்தாடிய கோலி 7023 ஓட்டங்கள் அடித்துள்ளார். ஸ்ரேயாஸ் அய்யர் 44 ஓட்டங்களுடனும்,
மணிஷ் பாண்டே எட்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
ரோகித்
சர்மா ஆட்டநாயகனாகவும், விராட் கோலி தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர். இந்தத்
தொடரில் ஸ்மித் 229 ஓட்டங்கள்
அடித்து முதலிடத்திப் பிடித்தார். அடுத்த இடங்களை கோலி 183, ரோகித் 171, தவான் 170 ஆகியோர் பிடித்தனர். ஷமி 7
விக்கெற்களையும், சம்பா5 விக்கெற்களையும், ரிச்சட்சன் ஜடேஜா ஆகியோர் தலா
விக்கெற்களையும் வீழ்த்தினர்.
மும்பையைப் பூர்வீகமாகக்கொண்ட இந்திய கிறிக்கெற் வீரரான நட்கர்னி
காலமானதால் இந்திய வீரர்கள் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடினர். 1964 ஆம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்துக்கு
எதிரான டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தவர்
நட்கர்னி.
No comments:
Post a Comment