வாசகர்,அரசியல் கட்சியின் ஆதரவாளர், ரசிகர்,உதைபந்தாட்ட
வீரன், நடிகர்,ஓவியர் என பல துறைகளில் தடம் பதித்தவர் பேரின்பநாதன். பேரின்பம், மகேந்திரன்
என அவரை அழைப்பார்கள்.வடமராட்சி வதிரியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதியின் மகன். சிறு வயதில் இருந்தே வாசிப்பு இவருடன் பயணிக்கிறது.
தேவரையாளி இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.எஸ்.சீனித்தம்பி அறிமுகப்படுத்திய வாசிப்புக்கு
தாய் மாமன் சி.க. இராஜேந்திரன் வலுவூட்டினார். அவர் வாங்கும் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் பேரின்பநாதனின் வாசிப்புக்கு உயிரூட்டின.
மாமா,
கிளாக்கர் என உறவினர்களால் செல்லமாக அழைக்கப்படும் சி.க.இராஜேந்திரனின் கொம்யூனிச அரசியல்
சாயம் பேரின்பநாதனின் மீதும் படிந்தது. யாழ்ப்பாணத்திலும்
கொழும்பிலும் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களுக்கும், அரசியல் கூட்டங்களுக்கும் சி.க.இராஜேந்திரனுடன்
சென்றதால் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள்,
அரசியல்வாதிகள் போன்ற பலரின் நட்பு பேரின்பநாதனுக்குக் கிடைத்தது.
பாடசாலை
நாட்களிலும் அதன் பின்னரும் பல நாடகங்களில் நடித்தார். இளம் வயதில் டையமன் விளையாட்டுக்
கழகத்துக்காக விளையாடினார். பின்னர் விளையாட்டைக் கைவிட்டார். ஆனால், ரசிப்பதை அவர்
இன்னமும் கைவிடவில்லை. வடமராட்சியிலும் யாழ்ப்பாணத்திலும்
முக்கியமான உதைபந்தாட்டப் போட்டியென்றால் அவரை
அங்கே காணலாம். கொழும்பிலும், நீர்கொழும்பிலும் அவர் வாழ்ந்த காலத்தில் முக்கியமான
உதபந்தாட்டப் போட்டிகளைப் பார்த்து ரசித்தவர்.
வெளிநாட்டு உதைபந்தாட்ட அணி விளையாடினால், அவசரமான வேலையாக
இருந்தாலும் அதனைக் கைவிட்டு விளையாட்டைப் பார்க்கச் சென்று விடுவார்.
பத்திரிகைகளில் ஓவியம், விளையாட்டு பற்றிய கட்டுரைகள்,
பேட்டிகள் பிரசுரமானால் அவற்றை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். ஓவியம், நடிப்பு இரண்டிலும் பாடசாலை நாட்களில் தனது திறமையை வெளிப்படுத்திய
பேரின்பநாதன், பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னும் அவற்றைக் கைவிடவில்லை. நடிப்பு
அவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. ஓவியம் அவரது வாழ்வை வளப்படுத்தியது.
கேள்வி:
ஓவியம் , நடிப்பு இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் தடம் பதித்தீர்கள். இது எப்படிச்
சாத்தியமாகியது?
பதில்: தேவரையாளி இந்துக் கல்லூரியில் படித்தபோது அங்கு கடமையாற்றிய ஆசிரியர்கள்தான் என்னை வழி நடத்தினார்கள்.
அதிபர் சீனித்தம்பி, சைவப்புலவர் வல்லிபுரம்,ஆ.ம.செல்லத்துரை, இளவரசு ஆழ்வாப்பிள்ளை, பெ.அண்ணாசாமி, சூ. ஏகாம்பரம்,சி.திரவியம், பொன்னம்மா
ரீச்சர்,மீனாட்சியம்மா ரீச்சர் ஆகியோர் தான் என்னை உருவாக்கினார்கள். பரிசளிப்பு விழாவில்
ஆழ்வாப்பிள்ளை மாஸ்ரரின் ஆங்கில நாடகங்களில் பெண் வேடத்தில் நான் நடித்தேன். அந்தக்
காலம் நடைபெற்ற நாடகப் போட்டிகளிலும் நான் நடித்து பரிசு பெற்றேன். அண்ணாசாமி, ஏகாம்பரம் ஆகிய
இருவரும் எனது ஓவியத்தை மெருகேற்றினார்கள். பென்சிலால் வரைவது எப்படி, வோட்டர் கலரால்
வரைவது எப்படி, காலையில், மாலையில், இரவில் எப்படி வர்ணம் கொடுக்க வேண்டும் என்பதைச்
சொல்லித்தந்தார்கள். அவர்களின் வழிகாட்டலில் பல போட்டிகளில் பரிசு பெற்றேன்
கேள்வி: ஓவியம் வரைவதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
பதில்:
சிறுவயதில் பொருள்,உருவம் என்பனவற்றைப் பார்த்து வரைந்துகொண்டிருப்பேன். அந்தப்பயிற்சியே எனக்கு
ஊக்கமாக அமைந்தது. முதலில் படங்களைப் பார்த்து ஆரம்பமான வரைதல் ஒருவரைப் பார்த்து வரையும்
படிமுறையை வழங்கியது. கல்கி,கலைமகள், ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகைகளை மாமா வாங்குவார். அவற்றை வாசித்தபின்னர் அதிலுள்ள படங்களை உன்னிப்பாக
அவதானித்து நுணுக்கங்களைப் பார்த்து கற்றுக்கொண்டேன். யாழ்ப்பாணத்துக்கு ஏதாவது வேலையாகப்
போனால், தியேட்டருக்குப் போய் மணியத்தின் புதுப்பட கட் அவுட்டைப் பார்ப்பேன். கொழும்பில்
வேலை செய்யும்போதும் கட் அவுட் பார்ப்பதற்காகத் தியேட்டருக்குப் போவேன்.
கேள்வி: பாடசாலைக்கு அப்பால் ஓவியத்தை யாருடம் பயின்றீர்கள்?
பதில்:
ராஜேஸ்கண்னனின் தகப்பன் ராஜேஸ்வரன் அண்ணாவுடனும்
கரவெட்டி இளங்கோவனுடனும் இணைந்து ஓவியம் வரைந்ததால் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். வீட்டுக்கு வர்ணம் பூசும் கலையை இளங்கோவன் அறிமுகப்படுத்தினார். அவருடன் வேலை செய்ததால்
வர்ணங்களைக் கலக்கும் முறையை கற்றுக்கொண்டேன்.
கேள்வி:
இயற்கைக் காட்சிகள் தவிர்ந்த வேறு என்ன மாதிரியான
படங்களை உருவாக்கினீர்கள்.?
பதில்:
பிள்ளையார்,சிவன்,பார்வதி,முருகன் போன்ற தெய்வங்களையும், காந்தி,நேரு,கென்னடி,காமராஜர்,
அண்ணா, லிங்கன் போன்றவர்களையும் எமது ஊர் பூவற்கரை பிள்ளையார் ஆலயத்துக்கான திரைச்சீலை
ஒன்றையும் வரைந்தேன். பூவற்கரை ஆலய கும்பாபிஷேகத்தின்போது அமரர் தெய்வேந்திரத்துடனும்
இளைஞர்களுடனும் இணைது வர்ணம் பூசினேன். தவிர நெல்லியடி மஹாத்மா வீதியில் உள்ள ஐயனார் ஆலயத்தில் தெய்வத்திரு உருவங்களையும்
வர்ணப்பூச்சையும் செய்தேன். யுத்தகாலத்தின் போது உயிர் நீத்தவர்களின் கட் அவுட்களை
உருவாக்கிக் கொடுத்தேன். நான் வரைந்த பண்டார வன்னியனின் படங்கள் வன்னிப்பகுதிகளில்
காட்சிப்படுத்தப்பட்டன.
கேள்வி:
ஓவியத்துக்காக நீங்கள் பயன் படுத்தும் வர்ணம் எத்தகையது?
பதில்: பென்சில்,ஒயில் பெயின்ற், வோட்டர் பெயின்ற் இந்தியன் இங்க் என அனைத்திலும் ஓவியம்
வரைந்துள்ளேன்.
கேள்வி:
மக்கள் மத்தியில் உங்களுடைய ஓவியத்துக்கான வரவேற்பு எப்படி இருந்தது?
பதில்:
யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்தி சபை நடத்திய கண்காட்சியில் பனை சம்பந்தமாக 100 ஓவியங்கள்
காட்சிப்படுத்தப்பட்டன. நல்லூர் ஆசிரிய கலாசலை கண்காட்சியில் வரலாறு,சரித்திரம், கற்காலம்
போன்றவற்றைச் சித்தரித்து ஓவியங்கள் தீட்டினேன். வடமாகாண பாடசாலைகளின் கண்காட்சிக்கு
பறவை, காவடி,பொம்மை போன்றவற்றை உருவாக்கினேன். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில்
நடைபெற்ற விளையாட்டு ஆசிரியர்களின் கண்காட்சியில் சர்வதேச உதைபந்தாட்ட மைதானத்தை வடிவமைத்தேன். அதில் மின்
கம்பங்கள், விளம்பரங்கள் என்பனவும் இடம் பெற்றன. அண்மையில் காலமான வேதாபரணத்தின் பூத
உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டைமன் மைதானத்தில் சர்வதேச உதைபந்தாட்ட மைதானம் ஒன்றை
அமைத்தேன். இவை எல்லாவற்ரையும் பலர் பாராட்டினார்கள்.
சித்திரத்தைப் படிக்கும் மாணவர்கள் சந்தேகம்
கேட்பதற்காக வருவார்கள். அவர்களுக்கு என்னாலான உதவிகளை வழங்குவேன்.
கேள்வி:
ஈராக்கில் நீங்கள் வரைந்த சதாமின் கட் அவுட்கள் காட்சிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம்
எப்படி அமைந்தது?
பதில்: இஸ் ரீல் ஃபிற்றராக ஈராக்குக்குச் சென்றேன். ஒய்வு
நேரங்களில் பலகையில் சோக்கால் படம் கீறுவேன். அதைப் பார்த்த இஞ்ஜினியர் படம் கீறுவதற்கு
எனக்குச் சந்தர்ப்பம் தந்தார். நான் வேலை செய்த
நிறுவனத்தில் படம் கீறுவதற்காக பிலிப்பைன்ஸ்காரர்
ஒருவர் இருந்தார். அவர் சொந்த நாட்டுக்குச் சென்றதும், நான் ஓவியரானேன். ஈர்க்கின்
யுத்த வெற்றிகளைக் கொண்டாவதற்காக சதாமின் கட் அவுட்களை வீதியெங்கும் காட்சிப்படுத்துவார்கள்.
அந்த நேரத்தில் சதாமின் படங்களை வரையும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவை அங்கு கட் அவுட்களாக
வீதிகளில் காட்சியளித்தன. என்னிடமிருந்த பல படங்கள் பலரிடம் கைமாறி தொலைந்து விட்டன.
கைவசம் இருக்கும் சில படங்களுடன் புதிய படங்களையும் வரைந்து ஓவியக் கண்காட்சி ஒன்றை
நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.
கேள்வி:
உங்களுடைய நாடக அனுபவம் எங்கே ஆரம்பமானது?
பதில்:
தேவரையாளி இந்துக் கல்லூரியில் படிக்கும்போது ஆழ்வாப்பிள்ளை மாஸ்ரரின் ஆங்கில நாடகங்களில்
பெண் பாத்திரத்தில் நடித்தேன். பாடசாலைகளுக்குடையிலான போட்டிகளில் பரிசுகள் பெற்றேன்.
பெண் பாத்திரம் எனக்குப் பொருதமானதாக இருந்ததால், பாடசாலைக்கு வெளியிலும் எனக்கு பெண்பாத்திரத்தில்
நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. கவிஞர் கோவி நேசன், நகைச்சுவை நடிகர் மாசி ஆகியோருடன்
இணைந்து தாள லய, நகைச்சுவை, சமூக சீர்திருத்த நாடகங்களில் நடித்தேன். ஒப்பனைக் கலைஞர்
வேலாயுதம், இ. யோகராஜா ஆகிய இருவரும் எனக்கு ஒப்பனை செய்வார்கள். அவர்களின் கைவண்னத்தால்தான்
நான் பெண்னாகத் தோற்றமளித்தேன்.
கேள்வி:
நீங்கள் நடித்த நாடகங்கள் மேடையேற்றப்பட்ட
இடங்கள் எவை?
பதில்:
எம்து ஊரில வருடாந்தம் நடைபெறும் நாடக விழாக்களில் எமது நாடகங்கள் நடைபெறும். பஞ் அரங்கு
மிக முக்கியமானது. வடமராட்சியில் அல்வாய்,பருத்தித்துறை, கொற்றாவத்தை போன்ற இடங்களிலும்
யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய நகரங்களிலும் எமது நாடகங்கள் நடைபெற்றன. சண்முகநாதனின் சமூக
நாடகமான “பாசம்”, கோவிநேசனின் தாள லய நாடகமான “காலம் கெட்டுப்போட்டு” மாசியின் நகைச்சுவை நாடகங்களான புறோக்கர்
பொன்னையா, நவீன சித்திர புத்திரன் ஆகியவை ரசிகர்களிடம்
மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
கேள்வி:
நாடக உலகில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் எது?
பதில்:
இலங்கேஸ்வரன் எனும் நாடகத்தில் நடிகமணி V.V. வைரமுத்து இலங்கேஸ்வரனாகவும்,
கலாவிநோதன் , M.P.அண்ணாசாமி நாரதராகவும் நடித்தனர். இலங்கேஸ்வரனின் தாயாக நான் நடித்தேன்.. அதை என்றைக்கும்
என்னால் மறக்க்கமுடியாது. ராஜ ஸ்ரீகாந்தனின் தகப்பன் வ, ஐ, இராசரத்தினத்தின் அம்பிகாபதி
எனும் நாடகத்தில் இந்திராணி அம்பிகாபதியாகவும்,
கலைச்செல்வி அமராவதியாகவும் கொட்டிக்கிழங்கு விர்கும் கிழவியாக நானும் நடித்தேன். ஆண்கள்
மட்டும் நடிக்கும் நாடகங்களில்தான் நான் பெண் வேடமிட்டு நடித்தேன். ஆன்களும், பெண்களும்
நடித்த நாடகத்தில் நான் பெண் வேடத்தில் நடித்தது மறக்க முடியாத சம்பவம்
No comments:
Post a Comment