Saturday, March 27, 2021

ஒரே கட்சியின் இரண்டு அமைச்சர்கள் மோதும் கரூர்

தேர்தல் காலத்தில் முக்கிய‌ தலைவர்கள் போட்டியிடும் தொகுதியை விஐபி தொகுதி என்பார்கள். தமிழக சட்டசபைத் தேர்தலில் பல தொகுதிகள் விஐபி தொகுதிகளாக மாற்ற‌ம் பெற்றுள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் அனைவரையும் தோற்கடிக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் சபதம் செய்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  இன்றைய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். விஜயபாஸ்க‌ரும்,முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜியும் முட்டி மோதுவதால் கரூர் தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிரடி அரசியலால் ஜெயலலிதாவைக் கவர்ந்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதாவின் கருணையால் செந்தில் பாலாஜியின் பதவியை தட்டிப் பறித்தவர் எம்.விஜயபாஸ்கர்.

உயர் கல்வி படித்துக்கொண்டிருந்தபோது அரசியல் அரசியலில் நாட்டம் கொண்ட செந்தில் பாலாஜி 1995 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு கரூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.அதிரடி அரசியலில் நாட்டம் கொன்ட செந்தில் பாலாஜியால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உள்ளடி அரசியலைத் தாக்கும் பிடிக்க முடியவில்லை. அங்கிருந்து வெளியேறியவர் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது கரூர் மாவட்ட அண்னா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரான சின்னச்சாமியின் அறிமுகம் ஏற்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த செந்தில் பாலாஜி மாணவர் அணி இணைச்செயலாளர் ஆனார். 2004 ஆம் ஆண்டு மாணவர் அணி செயலாளர் ஆனார்.செந்தில் பாலாஜியின் நடவடிக்கையால் ஜெயலலிதா கவரப்பட்டார்.

தான்தோன்றிமலை  ஒன்றியச் செய‌லாளரான எம்.ஆர்.பாஸ்கருக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையில் முரண்பாடு தோன்றியது. இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் கொலை மிரட்டல் விடும்வரை வளர்ந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு தேர்தலில் எம்.ஆர்.பாஸ்கர் கரூரிலும், செந்தில் பாலாஜி அரவக்குறிச்சியிலும் போட்டியிட்டனர். பணப்பட்டுவாடாவால் அர‌வக்குறிச்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடைபெற்றது. இருவரும் வெற்றி பெற்றனர்.

கரூர் கைவிட்டுப்போனதால்  கொதிப்படைந்த செந்தில் பாலாஜி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராக செயற்பட்டார். அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான பாங்க் சுப்பிரமணியத்துக்கு செந்தில் பாலாஜி மறைமுகமாக உதவி செய்தார்.441 வாக்கு வித்தியாசத்தில் எம்.ஆர்.வியஜபாஸ்கர் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் காதுக்கு இச்செய்தி போனதால் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  போக்குவரத்துத்துறை அமைச்சரானார். செந்தில் பாலாஜி அமைச்சராகவில்லை.

2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜியை வேட்பாளராக்கினார் ஜெயலலிதா.அந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடித்தது.

 திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான வாசுகி முருகேசனைத் தோற்கடித்த செந்தி பாலாஜி முதன் முதலாகச் ச‌ட்டசபைக்குள் நுழைந்தார். ஜெயலலிதாவின் பார்வை செந்தில் பாலாஜியின் மீது விழுந்தது. சின்னசாமியிடம் இருந்த கரூர் மாவட்ட செலயாளர் பதவி செந்தில் பாலாஜியின் கைக்கு மாறியது. கரூர் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.2011 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி போக்குவரத்துதுறை அமைச்ச்சரானார். நான்கரை ஆண்டுகளாக அமைச்சர்களை தூக்கி அடித்த ஜெயலலிதா செந்தில் பாலாஜியை மாற்ற‌வில்லை

ஜெயலலிதா மறைந்த பின்னர் டி.டி.வி.தினகரனின் பக்கம் சென்றதால் செந்தில் பாலாஜி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த  செந்தில் பாலாஜி 41 நாட்களில் கரூர் மாவட்ட பொறுப்பாளரானார். 2019 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் .  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரைத் தோற்கடித்தார்.

கரூரில் 84 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவது கரூரில்தான்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியில் சார்பில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மீதமான 71 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். இவர்களில் 40 வேட்பாளர்கள் செந்தில் பாலாஜியின் ஆட்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் செலவு ,வாக்காளர்களுக்கான விநியோகம் என்பனவற்ருக்காக இந்த ஏற்பாடு என்கிறார்கள்.

 ஒருகட்சியில் இருந்தபோது பரம எதிரிகளாகச் செயற்பட்ட செந்தில்பாலாஜியும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கரூரில் தமது பலத்தைக் காட்ட களம் இறங்கியுள்ளனர்.கரூர் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையா அல்லது செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ள தொகுதியா என்பதை வெளிப்படுத்தும் தேர்தலாக இது கருதப்படுகிறது.

No comments: